Thursday 4 July 2013

விஜய்யின் பேரன்பும் பெரும் பணிவும்!


ஒருத்தவன புகழுர மாதிரியே அவன் முகத்துலேயே சாணி அடிக்கிறது எப்படின்னு இந்த கட்டுரைய படிச்சு பார்த்தா தான் தெரியுது. எப்படி இந்த கட்டுரைய நான் இவ்ளோ நாள படிக்காம விட்டேன். என்னைய மாதிரி எத்தன பேர் விட்டு இருபாங்க அதனால இத இங்கு பதிவிடுகிறேன். தளபதி ரசிகர்கள் கொந்தளிக்க வேண்டாம் இது நான் படிச்சது தான்.

போன மாதம் எட்டாம் தேதி நடப்பதாக இருந்த விஜய்யின் பிறந்தநாள் விழா அனுமதி மறுக்கப்பட்டதால் நடக்கவில்லை. ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறித்து பலரும் பலவிதமான ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருந்த போது விஜய் பேட்டி ஒன்றில் அதற்கு விளக்கம் தந்தார். தாமதமானாலும் இதனை எழுத காரணம் அந்த பேட்டியில் வெளிப்பட்ட சமூகத்தின் மீதான விஜய்யின் பேரன்பு!!

என் பிறந்த நாளில் நான் மட்டுமின்றி ஏழைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான் என அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் விஜய். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் பிரதிபலிப்பை இந்த வார்த்தைகளில் காணலாம். பிறந்தநாள் 22 ஆம் தேதி. அதுவரை ஏழைகள் எதற்கு நலத்திட்ட உதவிகளுக்காக காத்திருக்க வேண்டும் என விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் எட்டாம் தேதியே சென்னை ஜெயின் கல்லூரியில் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்தனர். விஜய் கூறியிருப்பதைப் போல, விஜய்யைப் போலவே சமூக அக்கறை கொண்டவர்கள் விஜய்யின் ரசிகர்கள்.

எட்டம் தேதி 3,900 ஏழைகளுக்கு உதவி வழங்குவதாக திட்டம். மாநில எல்லைகள் கடந்து தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகத்திலிருந்தும் இந்த உதவிகளை பெற ஏழைகள் திரட்டப்பட்டார்கள். எல்லாமே விஜய் ரசிகர்களின் காசு. காசை நான் தந்துவிடுவேன், ஆனால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கும், மன வேதனைக்கும் நான் எப்படி மருந்து போடுவேன் என மனக்குமுறலுடன் கேட்டிருக்கிறார் விஜய்.

தனது ரசிகனுக்காக இந்தளவு மன வேதனைப்பட்ட ஒரு நடிகரை தமிழகம் இப்போதுதான் காண்கிறது. பல லட்சங்கள் செலவு செய்து வாங்கிய ஆட்டோக்களை, கம்ப்யூட்டர்களை, தையல் எந்திரங்களை, மூன்று சக்கர வாகனங்களை எப்படி ஏழைகளிடம் சேர்ப்பது? விழாவைதான் ரத்து செய்துவிட்டார்களே.

நம்மை அதிகம் மன வேதனைப்படுத்தியது, பிறந்தநாளைக்கூட நிம்மதியாக கொண்டாட முடியவில்லையே என்ற வார்த்தைகள். குப்பனும், சுப்பனும் கேக் வெட்டி, புத்தாடை அணிந்து மகிழ்ச்சியாக எந்தத் தடையுமின்றி பிறந்தநாள் கொண்டாடுகிற நாட்டில் ஒரு முன்னணி நடிகருக்கு நிம்மதியாக பிறந்தநாள் கொண்டாட முடியவில்லையெனில் அதனைவிட அவமானம் வேறு இல்லை. அது விஜய்க்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல, ஜனநாயகத்துக்கே விடப்பட்ட சவால்.

3,900 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக என்று கூறிதான் ஜெயின் கல்லூரி நிர்வாகத்திடம் இடம் கேட்டிருக்கிறார்கள் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர். அவர்களும் அனுமதி தந்திருக்கிறார்கள். பிறகு நடந்ததை விஜய்யே கூறுகிறார். நான் நல்ல காரியங்கள் செய்வது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் கூறாதவற்றை, அறிவிக்காத செய்திகளை எல்லாம் வைத்து வதந்தியை பரப்பினார்கள்.

எல்லா நல்லவர்களுக்கும் இது நடந்திருக்கிறது. நல்லது செய்ய நினைப்பவர்களுக்கு வேண்டுமென்றே இடையூறு செய்வதை சிலர் வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். அது நற்பணி விழா அல்ல, அரசியலுக்கான அடித்தளம் என சிலர் திரித்துக் கூறியிருக்கிறார்கள். நடிப்பே தொழில் என்று அதை மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கும் எனக்கு அரசியலைப் பற்றி யோசிக்கக்கூட நேரமில்லை என விஜய் தனது மனதை பேட்டியில் அகல திறந்திருக்கிறார். அரசியலைப் பற்றி யோசிக்கவே செய்யாத ஒருவர் அரசியலில் நுழைய விழா நடத்துகிறார் என்றால் அது எவ்வளவு பெரிய அபாண்டம்.

இந்த இடத்திலும் அந்த சிலரின் பெயர்களை குறிப்பிடாமல் விஜய் பெருந்தன்மையாக நடந்திருப்பதை கவனிக்க வேண்டும். ஆனால் விஜய் நல்லது செய்ய நினைக்கும் போதெல்லாம் அந்த சிலர்தான் தொடர்ந்து பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் எனும் போது விஜய் தனது பெருந்தன்மையை கைவிட்டு அவர்களின் பெயர்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பதே லட்சோப லட்சம் ரசிகர்களின் விருப்பம்.

விழா ரத்தானால் என்ன, வாங்கிய பொருட்களை 3,900 ஏழைகளிடத்திலும் சேர்ப்பிக்கலாமே என சிலர் குதர்க்கமாக கேட்கின்றனர். இப்படிப்பட்ட முந்திரிக்கொட்டைகள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். பிரமாண்டமாக பந்தலிட்டு, தோரணம் அமைத்து, வண்ண விளக்குகளால் அலங்கரித்து, பல ஆள் உயரத்துக்கு கட் அவுட்கள் நட்டு, ஒட்டு மொத்த மீடியாக்களும் குழுமியிருக்க நற்பணி பொருட்களை தருகையில் தருகிறவருக்கும், வாங்குகிறவர்களுக்கும் கிடைக்கிற பரவசமும், மகிழ்ச்சியும் ரகசியமாக வோட்டுக்கு காசு தருவது போல் தருகையில் கிடைக்குமா? வாங்குகிறவர்களுக்குதான் அது பெருமை சேர்க்குமா?

பேட்டியின் இறுதியில் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் வார்த்தைகளை விஜய் மேற்கோள் காட்டுகிறார். என் விழா மட்டும் நடந்திருந்தால் 3,900 ஏழைகள் சிரித்திருப்பார்கள். ஏழைகளின் சிரிப்பை அழித்தவர்களுக்கு நன்றி

தன்னை சிலுவையில் அறைந்தவர்களின் மீது கோபப்படாமல், பிதாவே இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும் என சொன்ன ஏசுவின் வார்த்தைகளை ஒத்தவை விஜய்யின் மேலே உள்ள வாசகம். சினிமாவில் சின்ன அநியாயத்தையும் பொறுக்காமல் எதிரிகளை அடித்து துவசம் செய்யும் விஜய் நிஜத்தில் இவ்வளவு அடக்கமாக இருப்பது தேவையில்லை என்பதே நமது கருத்து. பாரதி சொன்னது போல் அவர் ரௌத்திரம் பழகிற நேரம் வந்துவிட்டது.

எத்தனை இடையூறுகள் வந்தாலும் சமூகத்தின் மீதும், ஏழைகளின் மீதும் தான் கொண்ட அக்கறையை விஜய் கைவிடக்கூடாது என்பதே நமது வேண்டுகோள். விஜய்யும், அவரது மக்கள் இயக்கமும் அரசியல் ஆசையின்றி இப்போது போல் தொடர்ந்து தையல் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள், நோட்டு புத்தகங்கள், மூன்று சக்கர வாகனங்கள் தர வேண்டும். யார் எதிர்த்தாலும், யார் மறுத்தாலும் நற்பணிகள் தொடர வேண்டும். நற்பணிகள் செய்து... செய்து ஜென்டில்மேன் போல், அந்நியன் போல் ஒருநாள் விஜய்யும் அவரது மக்கள் இயக்கத்தினரும் ஷங்கர் படத்தின் கிளைமாக்ஸில் வரும் சுபிட்சமான தமிழகத்தை உருவாக்க வேண்டும். உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

வாழ்க விஜய், வாழ்க அவரது மக்கள் இயக்கம்.

ஜெய்ஹிந்த்!!

11 comments:

ராஜி said...

இட்ந்த பதிவும் வஞ்சப்புகழ்ச்சி தானே!

Unknown said...

சாதாரண வஞ்ச புகழ்ச்சி இல்ல செம்ம வஞ்ச புகழ்ச்சி சகோதரி ராஜி ஹா ஹா முடியல்ல

sathishsangkavi.blogspot.com said...

இதுல எதாவது உள்குத்து இருக்கா...

Unknown said...

சங்கவி அண்ணே கும்மாகுத்தே இருக்கு ஹி ஹி

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்க வளமுடன்...!

கோவை நேரம் said...

ஆக மொத்தம் விஜயை கலாய்த்து விட்டீங்க...

Unknown said...

நன்றி தனபாலன் அண்ணே

Unknown said...

கோவை சகோ தளபதிய நான் கலாய்கிறதா நான் அவரு ரசிகருங்க ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

நானும் சின்ன டாக்குட்டர் ரசிகன்தானுங்கோ ஹி ஹி...

Unknown said...

மனோ அண்ணே நீங்களும் நம்ம தளபதி ரசிகரா அப்ப மக்கள் இயக்கம் கிளை உங்க ஏரியால ஓபன் பண்ணிரலாம்

Unknown said...

அண்ணே நீங்களும் நம்ம தளபதி ரசிகரா அப்ப மக்கள் இயக்கம் கிளை உங்க ஏரியால ஓபன் பண்ணிரலாம்