Showing posts with label வெப்துனியா. Show all posts
Showing posts with label வெப்துனியா. Show all posts

Wednesday, 20 November 2013

மீண்டும் சிம்பு ஜோடியானார் நயன்தாரா


உலகம் உருண்டை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் சிம்புவும், நயன்தாராவும். வல்லவன் படத்தின் போது நிஜத்திலும், திரையிலும் காதலர்களாக இருந்தவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் காதலர்களாகிறார்கள். இந்தமுறை திரையில் மட்டும்.

பாண்டிரா‌ஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பெய‌ரிடப்படாதப் படத்தில் சிம்பு ஜோடியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்குமே என்று அவரை அணுகி கதை சொல்லியிருக்கிறார் பாண்டிரா‌ஜ். கதையை கேட்ட நயன்தாரா உடனே நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். சிம்புவைப் பொறுத்தவரை கரும்பு தின்ன கூலியா கதைதான். அவருக்கும் ஓகே.

கௌதம், சிம்பு நடிக்கும் படம் தொடங்கும் முன்பே திட்டமிட்டபடி முதல் ஷெட்யூலை பாண்டிரா‌ஜ் முடித்திருக்கிறார். சிம்பு, நயன்தாரா காம்பினேஷன் காட்சிகள் இன்னும் எடுக்கவில்லை. டிசம்ப‌ரில் திட்டமிட்டிருக்கிறார்கள்.

முன்னாள் காதலர்கள் ரன்பீர் கபூரும், கத்‌ரினா கபூரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்த ஹே ஜவானி ஹே திவானி சூப்பர்ஹிட்டானது. பட ‌ரிலீஸுக்குப் பிறகு இருவரும் வெளிநாடு டூர் சென்றதோடு பிரைவெட் பீச்சில் ஒன்றாக இருந்த புகைப்படமும் வெளியானது. அதேகதைதான் இங்கேயும். சிம்பு, நயன்தாரா இணைகிறார்கள் என்பதே படம் பாதி ஹிட்டான மாதி‌ரிதான்.

மீதி பாதி... டிசம்பர் வரட்டும் பா‌ர்ப்போம். 

Wednesday, 6 November 2013

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா ?


ஐந்து முதலமைச்சர்களை தமிழ் சினிமா தந்த பிறகும் சினிமா என்பது வெறும் பொழுதுப்போக்கு என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களை என்ன செய்வது. நம்முடைய பிரச்சனை அரசியல் பார்வை இல்லாதது. அரசியல் என்றால் கட்சி அரசியல் மட்டுமே என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ‌ரிலையன்ஸ் போன்ற கடைகளில் காய்கறி வாங்காமல் கடைத்தெருவில் இருக்கும் கிழவியிடம் வாங்கினால் அதுவும் ஒரு அரசியல் செயல்பாடே.

தனியார் தொலைக்காட்சியில் டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கல்லூ‌ரி மாணவி குறித்து மாணவிகள் பேசினர். ஒவ்வொருவ‌ரின் பேச்சிலும் ஆவேசம் பொங்கியது. எங்களுக்கு விருப்பமில்லாதவர்கள் காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள், முடியாது என்றால் கேவலமாக பேசி டார்ச்சர் செய்கிறார்கள் என ஆவேசப்பட்டனர். உண்மை. அவர்களின் ஆவேசம் நியாயமானது. அப்படியே சினிமா பக்கம் வருவோம்.

இன்றைய முன்னணி நாயகர்கள் அனைவரும் நாயகியிடம் வம்பு செய்கிறவர்களாகதான் படத்தில் வருகிறார்கள். ஏண்டி நான் உன்னை லவ் பண்றேண்டி என்று வலுக்கட்டாயமாக ஹீரோயினை காதலிக்க வைப்பவர்கள்தான். ஆனால் இந்த வன்முறையை நாம் திரையில் ரசிக்கிறோம். அட, இதைத்தானே ரசிக்கிறார்கள் என்று படம் பார்க்கிற விடலைகளும், நான் உன்னை லவ் பண்றேண்டி என்று தெருவில் பார்க்கிற பெண்களையெல்லாம் டார்ச்சர் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நாயகன் வேலை வெட்டி இல்லாதவன். பெண்கள் பின்னால் சுற்றுகிறவன். அதுவும் எல்லா பெண்கள் பின்னாலும். படிக்கிற மாணவியின் கையில் லவ் லட்டர் தந்து அவளின் டீச்சருக்கு தரச் சொல்கிறவன். திரையில், சும்மா பொழுதுபோக்குதானே என்று பல்லை காட்டி சி‌ரிக்கிறோம். அதுவே நிஜமாக நடந்தால்? அந்த கதாபாத்திரத்ததைதான் ஜனங்கள் திரையில் விரும்புகிறார்கள், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவன்தான் தமிழக இளைஞர்களின் ரோல் மாடல்.

எனில் படம் பார்க்கிற பதின்ம வயசு பசங்களும் அவன் செய்த அதே செயலைத்தானே செய்வார்கள். அதுதானே நடக்கிறது. ஒருபுறம் தூண்டிவிட்டு மறுபுறம் புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. தொலைக்காட்சியில் ஆவேசப்பட்ட பெண்களில் ஒருவராவது திரையில் நாயகியை டீஸ் செய்யும் நாயக கதாபாத்திரத்தை விமர்சித்தது உண்டா? காமெடி என்ற பெய‌ரில் திரையில் கொட்டும் குப்பைகளுக்கு பல்லை காட்டாமல் கொஞ்சம் அரசியல்பூர்வமாக நாம் சிந்திக்க பழக வேண்டும்.

ஐந்து முதலமைச்சர்களை சினிமாவிலிருந்து தேர்வு செய்த பிறகும் சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று எவனாவது இனியும் சொன்னால் அவனை மிதிக்கதான் வேண்டும்.

Wednesday, 30 October 2013

ஆரம்பம் - ஒரு முன்னோட்டம்


சாவுக்கு பயந்தவனுக்குதான் தினம் தினம் சாவு. எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒருமுறைதான் சாவு. அ‌‌‌ஜீத்தின் இந்த பன்ச் டயலாக்குடன் ஆரம்பிக்கிறது ஆரம்பர் ட்ரெய்லர்.

பில்லா 2-வின் தோல்வியை ஆரம்பம் மறக்கடிக்குமா என்பதே அனைவ‌ரின் கேள்வியாக இருந்தது. அதற்கு ஒருசோறு பதமாக வந்திருக்கிறது ஆரம்பம் படத்தின் ட்ரெய்லர்.

ட்ரெய்ல‌ரில் அ‌‌‌ஜீத், நயன்தாரா, ஆர்யா, தாப்ஸி, கிஷோர், ராணா, அதுல் குல்கர்னி என்று அனைவரும் வருகிறார்கள். அனைவருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

அ‌‌‌ஜீத்தின் பலவீனம் என்றால் அவ‌ரின் ஸ்லோ மாடுலேஷன் குரல். இதுவொரு கறுப்பு ச‌ரித்திரம் என்று (சிட்டிசனில்) நிறுத்தி நிதானித்து பேசுகையில், ச‌ரிதான் எப்போது பேசி முடிப்பார் என்றிருக்கும். அதனை இந்தப் படத்தில் சுத்தமாக களைந்திருக்கிறார். எந்த தடங்கலுமின்றி சரளமாக வருகின்றன வசனங்கள்.

அதிலும் குறிப்பாக நயன்தாராவை கட்டிப்போட்டு ஆர்யாவை மிரட்டுகிற இடம். உன்னோட புத்திசாலித்தனத்தால ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். நான் அழிக்கப் போறேன் என்கிற வசனம். அதேபோல் மேக் இட் சிம்பிள் என்ற பிரயோகம். சுருக்கமாக அ‌‌‌ஜீத்தின் வசன உச்ச‌ரிப்பில் கம்பீரம் கூடியிருக்கிறது. ஆக்சன் காட்சிகளுக்கு நடுவில் ஆர்யாவின் கலர்ஃபுல் காதல் காட்சிகளும் வருகின்றன. தாப்ஸியிடம் மண்டியிட்டு, மே‌ரி மீ என்கிறார் ஆர்யா. ரொமாண்டிக் காட்சிகளுக்கு இது உத்தரவாதம் தருகிறது.

அதிலும் குறிப்பாக நயன்தாராவை கட்டிப்போட்டு ஆர்யாவை மிரட்டுகிற இடம். உன்னோட புத்திசாலித்தனத்தால ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். நான் அழிக்கப் போறேன் என்கிற வசனம். அதேபோல் மேக் இட் சிம்பிள் என்ற பிரயோகம். சுருக்கமாக அ‌‌‌ஜீத்தின் வசன உச்ச‌ரிப்பில் கம்பீரம் கூடியிருக்கிறது. ஆக்சன் காட்சிகளுக்கு நடுவில் ஆர்யாவின் கலர்ஃபுல் காதல் காட்சிகளும் வருகின்றன. தாப்ஸியிடம் மண்டியிட்டு, மே‌ரி மீ என்கிறார் ஆர்யா. ரொமாண்டிக் காட்சிகளுக்கு இது உத்தரவாதம் தருகிறது.

முக்கியமான அம்சம் யுவனின் இசை. பில்லாவை ஞாபகப்படுத்தும் அந்த தீம் மியூஸிக் அட்டகாசம். ட்ரெய்ல‌ரிலேயே நிறைய எதிர்பார்க்க வைக்கிறார்.

நயன்தாரா, ராணா, அ‌‌‌ஜீத் என்று அனைவருமே துப்பாக்கியால் சரமா‌ரியாக சுடுகிறார்கள். ராணாவுக்கு கமாண்டோ மாதி‌ரியான பொறுப்பு போலிருக்கிறது. என்னப்பா... ஆ ஊன்னா கன்னை தூக்கிடுறீங்க என்கிற ஆர்யாவும் பெ‌ரிய சைஸ் துப்பாக்கியால் சுடுகிறார்.

ட்ரெய்ல‌ரின் இறுதியில் வரும், இப்பதானே ஆரம்பிச்சிருக்கோம். இட்ஸ் ஜஸ்ட் த பிகினிங் என்ற அ‌‌‌ஜீத்தின் பன்சும், வால் கிளாக்கின் டிக் டிக் ஒலியெழுப்பியபடி அவர் நடந்து செல்வதும் கிளாஸ் என்டிங். இந்த காஸ்டிங், ஒளிப்பதிவு, இசை, ஆக்சன் இவற்றுடன் கொஞ்சமாக கதை இருந்தாலே படம் பட்டைய கிளப்பும் என்பது உறுதி.

Tuesday, 22 October 2013

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை 18+


நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.

இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

வாழ்க்கை முறைகள்

புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.

தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம். இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும் 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.

மூலிகைகள்

அன்று கிராமங்களில் சாதாரண நோய்கள் முதல் கொடிய நோய்கள் வரை எல்லாவற்றுக்கும் அருகில் உள்ள அரிய மூலிகைகளைக் கொண்டு பக்கவிளைவுகள் இன்றி குணப்படுத்தி வந்தனர். இந்த மூலிகைகளில் வியக்கத்தக்க வகையில் குணம் இருப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மூலிகைகளால் குணமாக்க முடியாத நோய்களே இல்லை. இதனை இந்து மத முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த மூலிகைகள் என அம்மைக்கு - வேப்பிலை, சிவனுக்கு - வில்வம், விநாயகருக்கு - அருகம்புல், விஷ்ணுவுக்கு - துளசி, பிரம்மாவுக்கு - அத்தியிலை என்று வைத்து தினசரி பூஜைகளின்போது வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக உட்கொள்ள கொடுத்து நோய் வருமுன்னர் மக்களின் பொதுவான ஆரோக்கியத்தை காத்தனர். மேலும், அவ்வப்போது வரும் நோய்களை குணப்படுத்தும் மூலிகைகளை அறிந்துள்ளார்கள்.

அவைகளில் ஆண்மைக் குறைவுக்காக, வேப்பிலை, அருகு, அத்தி, முருங்கை, ஆலயிலை, அரசஇலை, மாவிலை, அமுக்கரா, நாவல், ஓரிதழ் தாமரை போன்றவைகள் மிக பயன் உள்ளதாக உள்ளது. இக்குறைபாடு உள்ளவர்கள், இவைகளைப் பறித்து வெய்யிலில் உலர்த்தி பொடி செய்து பின் சம அளவில் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதில் இருந்து இரண்டு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக உட்கொள்ள சுமார் 30 முதல் 60 நாட்களில் நல்ல பலன் தெரியும்.

உணவு முறைகள்

நமது உடலானது நாம் உண்ணும் உணவில் இருந்து சக்தியைப் பெற்று வளர்ச்சியும், உறுதியும் பெறுகின்றது. தவறான உணவுப் பழக்கத்தினால் கெடவும் செய்யும். நமது உடலுக்கு பச்சையாக உண்ணும் உணவே ஏற்றது. ஆகவே, பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழவகைகள் போன்றவைகளை அதிகம் உண்பதால் உடல் பூரண எதிர்ப்பு சக்தியுடனும், உறுதியுடனும் காணப்படும். வேக வைத்து உண்ணும் போது உணவில் உள்ள சக்திகள் அழிந்து விடுகின்றன.

ஆகவே, இயற்கை உணவான ஆப்பிள், அன்னாசி, வாழை, பப்பாளி, பேரிட்சை, மாதுளை, சப்போட்டா, தக்காளி போன்றவைகளையும், காய்களில் வெண்டை, கேரட், கோவக்காய், தேங்காய், கரும்புச்சாறு, பதனீர், உருளை, கொத்தமல்லி, முள்ளங்கி, பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாலட்டாகவோ தனித்தனியாகவோ உட்கொள்ளலாம்.

கொட்டை வகைகளில் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பட்டாணி வகைகள், உளுந்து போன்றவைகளை ஊற வைத்து அல்லது லேசாக வேக வைத்து சாப்பிடலாம்.

மேற்கூறியவைகளில் இருந்து தேவையானவைகளை அவரவர் விருப்பம் போல் காலை, இரவு ஆகிய இரண்டு வேளையும் 3 / 4 வயிறு வீதம் உட்கொள்ளவும். பகல் ஒரு வேளை சமைத்த உணவுகள் உட்கொள்ளலாம். அதிலும் சாதம், கேழ்வரகுக் கூழ், ரொட்டி, கழி போன்றனவும், கோதுமை, மக்காசோளம், கம்பு போன்றவை தானியங்களில் இருந்தும் சமைத்த உணவுகள் தயார் செய்து சாப்பிட்டு வரவும்.

மேற்கூறிய முறைகளைப் பின்பற்றினால் நரம்பு தளர்ச்சி, ஆண்மைக்குறைவு என்ற நோய்களுக்கே இடமின்றி வாழலாம்.

டாக்டர் எம்.சபாபதி

Sunday, 13 October 2013

சாப்ளின் என்ற கோமாளி


சார்லி சாப்ளினின் படங்களைப் பார்ப்பது மனதை உற்சாகப்படுத்தும் நிகழ்வாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. திரையில் பார்க்கும் அந்த நாடோடி நம்முடைய வாழ்வை காலங்கள் கடந்தும் புனரமைப்பது ஆச்சரியமான நிகழ்வு.

சமீபத்தில் வார இதழ் ஒன்றில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு வேடத்தை எப்படி கமல் திரையில் கொண்டு வந்தார் என்பதை விளக்கியிருந்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தைப் பற்றி பேசும் போதெல்லாம் - குறிப்பாக குள்ள அப்புவை பேசும் போது சார்லி சாப்ளினின் த சர்க்கஸ் திரைப்படம்தான் நினைவுக்கு வரும்.

வழக்கம் போல இந்தப் படத்திலும் வீடு, சொந்தபந்தம் எதுவுமில்லாத நாடோடி சாப்ளின். தெருவோர கலை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்iயில், பிக்பாக்கெட்காரன் தப்பிப்பதற்காக தான் அடித்த பர்ஸை சாப்ளினின் பாக்கெட்டில் வைக்க, பிரச்சனை ஆரம்பமாகும். சாப்ளினின் பாக்கெட்டில் தான் வைத்த பர்ஸை அவன் எடுக்க முனைகையில் போலீஸில் மாட்டிக் கொள்வான். பர்ஸின் திடீர் சொந்தக்காரர் ஆவார் சாப்ளின். இப்போது பர்ஸின் நிஜ சொந்தக்காரர் வர சாப்ளின் திருடனாகிவிடுவார். அதன் பிறகு போலீசுக்கும், சாப்ளினுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் சேஸிங் அவரை கொண்டு சேர்ப்பது ஒரு சர்க்கஸ் கூடாரத்துக்கு.

எதிர்பாராத நிகழ்வுகள் ஒரு கதையின் தொடக்கமாக மாறும் விசித்திரத்தை சாப்ளினின் படங்களில் காணலாம். பிக்பாக்கெட்காரன் இயல்பாக செய்யும் திருட்டுத்தனம் சாப்ளினை சர்க்கஸ் கூடாரத்துக்கு அழைத்து வந்து அவரையொரு சர்க்கஸ் கோமாளியாக மாற்றி, ஒரு பெண்ணை காதலிக்கவும் வைக்கும். சிட்டி லைட்ஸ் படத்தை எடுத்துக் கொண்டால், போலீஸுக்கு பயந்து நிற்கின்ற காரில் ஏறி காரின் அந்தப்பக்கம் உள்ள பிளாட்பாரத்தில் இறங்குவார் சாப்ளின். கார் கதவு திறக்கப்படும் சத்தத்தை வைத்து கண் தெரியாத பூ விற்கும் இளம் பெண் அவரை ஒரு பணக்காரர் என்று தவறாக புரிந்து கொள்வாள். இந்த புரிதல்தான் படத்தை முன்னகர்த்தி செல்லும். இதுபோல் பல உதாரணங்கள்.


படத்தின் ஆரம்பம் மட்டுமின்றி கதை நகரும் ஒவ்வொரு பகுதியைம் இப்படியான அசந்தர்ப்பமான சூழல்களை வைத்தே சாப்ளின் பின்னுகிறார். சாப்ளின் தப்பிக்க நுழையும் சர்க்கசானது திவாலாகும் நிலையில் உள்ளது. கோமாளிகளால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடிவதில்லை. எதிர்பாராமல் உள்ளே நுழையும் சாப்ளின் போலீஸிடமிருந்து தப்பிக்க செய்யும் சேஷ்டைகள் அவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. அந்த சர்க்கஸின் கோமாளியாக அவர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். அவரால் சர்க்கஸ் களைகட்டுகிறது.

ஆனாலும், குறைந்த சம்பளத்தில் அடிமட்ட வேலைக்காரராக அவர் நடத்தப்படுகிறார். இந்த சர்க்கஸே அவரால்தான் களைகட்டுகிறது என்று சர்க்கஸ் முதலாளியின் (வளர்ப்பு) மகள் அவருக்கு புரிய வைக்கிறாள். அவள் மீது சாப்ளினுக்கு காதல் வருகிறது. அவளுக்கு பரிசளிக்க மோதிரம் வாங்குகிறார். இந்நிலையில் சர்க்கஸுக்கு புதிதாக வரும் கயிறு மேல் நடக்கும் வித்தைக்காரரின் மீது சர்க்கஸ் முதலாளியின் மகளுக்கு காதல் வருகிறது. பொறாமையில் சாப்ளினும் கயிறு மேல் நடக்கும் வித்தையை முயற்சி செய்கிறார். ஒருமுறை அந்த சாகஸக்காரன் காணாமல் போகையில் கயிறு மேல் நடக்கிற வித்தையை செய்யும் சந்தர்ப்பம் சாப்ளினுக்கு கிடைக்கிறது. இந்தப் பகுதியை சாப்ளினின் அதியற்புத திறமையின் உதாரணமாகச் சொல்லலாம்.

கயிறு வித்தையின் தொடர்ச்சி சர்க்கஸ் முதலாளியுடனான கைகலப்பில் முடிய, சர்க்கஸிலிருந்து சாப்ளின் வெளியேற்றப்படுகிறார்.


தனது வளர்ப்பு தந்தையின் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் சாப்ளினின் ஒருதலை காதலியும் உடன் வருகிறாள். இறுதியில் அவளுக்கும், அவள் காதலித்த அந்த சாகஸக்காரனுக்கும் சாப்ளின் திருமணம் செய்து வைக்கிறார். புது ஜோடியுடன் சர்க்கஸ் வேறு இடத்துக்கு கிளம்புகிறது. சாப்ளின் முதல் காட்சியில் தோன்றிய அதே நாடோடியாக சர்க்கஸ் செல்லும் திசைக்கு எதிர்திசையில் நடக்க ஆரம்பிக்கிறார்.

அபூர்வ சகோதரர்களுக்கு முன்பே கமல்ஹாசன் த சர்க்கஸை பார்த்திருப்பார். என்னுடைய அலுவலகத்தில் இருக்கும் ஒரே படம் சாப்ளினுடையது என்று அவர் முன்பு சொன்னதாக ஞாபகம். சாப்ளினால் இன்ஸ்பயர் ஆகாமலிருந்தால்தான் ஆச்சரியம். சாப்ளினேகூட த சர்க்கஸ் திரைப்படத்தை அவரின் விருப்பத்துக்குரிய பிரெஞ்ச் நகைச்சவை நடிகர் மேக்ஸ் லிண்டரின் த கிங் ஆஃப் த சர்க்கஸ் திரைப்படத்தின் பாதிப்பில் எடுத்ததாக கூறுகிறார்கள்.

த சர்க்கஸில் மீண்டும் மீண்டும் ஆச்சரியப்படுத்தும் விஷயம் சாப்ளினின் டைமிங். அவர் மட்டுமில்லை, படத்தில் வரும் சிங்கம், குரங்குகள், குதிரை என்று விலங்குகளும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. போலீஸுக்குப் பயந்து தெருவோர கலைநிகழ்ச்சிக்குள் சாப்ளின் காட்டும் வித்தைகள் சிரிப்பை வரவழைப்பவை. முக்கியமாக கண்ணாடிகளால் சூழ்ந்த அரங்கத்துக்குள் எப்படி கேமரா தெரியாமல் படமாக்கினார்கள்? த சர்க்கஸ் வெளியானது 1928 ல் என்பதை இங்கு நினைவுகூர்வது சாலப்பொருத்தம்.

சிங்கத்தின் கூண்டுக்குள் தெரியாமல் சிக்கிக் கொள்ளும் போது நடக்கும் சம்பவங்களை இன்றைய தொழில்நுட்ப யுகத்தில்கூட எடுக்க முடியுமா? கயிறு மேல் சாப்ளின் நடக்கையில் குரங்குகள் அவர் உடையை அவிழ்த்து, மூக்கை கடித்து, வாயில் வாலைவிட்டு... அத்தனை குரங்கு குறும்புக்கு நடுவிலும் சாப்ளின் கயிற்றில் தள்ளாடிக் கொண்டே பேலன்ஸ் செய்வது... சாப்ளினால் மட்டுமே ஆகக்கூடிய சாகஸங்கள்.


படங்கள் பேச ஆரம்பித்த பிறகும் சாப்ளின் மௌனப் படங்கள் எடுப்பதையே விரும்பினார். வசனம் படத்தின் கற்பனையை, பன்முகத்தன்மையை அழித்து ஒருபடித்தானதாக்கிவிடும் என்று அவர் நம்பினார். அவரின் படங்களில் எழுத்துக்களில் விளக்கம் முக்கியமான தருணங்களில் மட்டுமே வரும். பெரும்பாலும் தத்துவ தெறிப்பாக அல்லது சூழலை விளக்கும்விதமாக அவை இருக்கும். சர்க்கஸ் முதலாளி, சாப்ளினால்தான் சர்க்கஸ் களைகட்டுகிறது என்ற விவரம் சாப்ளினுக்கு தெரிய கூடாது என்பதில் குறியாக இருப்பார். அது தெரியாத அளவுக்கு அவரிடம் அதிகமாக வேலை வாங்கு என்று தனது ஆளிடமும் அறிவுறுத்துவார். பண்ணையார் யுகத்திலிருந்து ஐடி யுகம்வரை இதுதான் நடக்கிறது. தனக்கு கீழ் உள்ளவர்களை அடக்கி ஆள மேலிருப்பவர்கள் செய்யும் தந்திரம் இது. அவர்களால் எதுவுமே நடக்கவில்லை, முதலாளிகள்தான் பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு வேலை தருகிறார்கள் என்ற தோற்றம் ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகாரத்துக்கும் தேவைப்படுகிறது.

கலை என்பது ஆற்றொழுக்காக மேலெழுவது. அசந்தர்ப்பங்களால் கட்டமைக்கப்பட்டது. திட்டமிட்ட வழியில் அதனை சாத்தியமாக்குவது இயலாத காரியம். தொழில்முறை சர்க்கஸ் கோமாளிகளின் திட்டமிட்ட வித்தைகளை சாப்ளினால் கற்றுக் கொள்ள முடிவதில்லை. ஒவ்வொருமுறையும் தவறிவிடுகிறார். ஆனால் அந்த சட்டகத்தை தாண்டி அவர் செய்யும் கோமாளித்தனங்கள்தான் பார்வையாளர்களை கவர்கிறது. அவர்களை தன்னை மறந்து சிரிக்க வைக்கிறது. கலை குறித்த இந்த நுண்ணுணர்வு படத்தில் போகிற போக்கில் சொல்லப்படுகிறது.

படத்தின் கதையை எழுதி சாப்ளினே இயக்கி, இசையமைத்திருக்கிறார். நகைச்சுவை காட்சிகளுக்கு எப்படி இசையமைப்பது என்பதற்கு இந்தப் படமும் ஒரு சிறந்த உதாரணம். சாப்ளின் தனது படங்களில் நகைச்சுவையின் நடுவே வாழ்வின் சாராம்சத்தை, அதன் வலியை, மகத்துவத்தை, கொண்டாட்டத்தை பொதிந்து தருகிறார். நாம் அந்த சாராம்சத்தை விடுத்து கோமாளித்தனத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். சாப்ளினை இன்றும் ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமே பெரும்பாலானவர்களின் மனதில் தங்கிப் போனது காலக்கொடுமை.

சாப்ளின் கோமாளிதான், சாகஸக்காரர்தான். அதேநேரம் அந்த கோமாளி தோற்றத்தில் அவர் சுட்டிக் காட்டுவது - த சர்க்கஸ் படத்தின் இறுதிக் காட்சியைப் போல் - எப்போதும் கோமாளித்தனத்துக்கு எதிர்திசையைதான். அதனை புரிந்து கொள்ளாமல் சாப்ளினின் படத்தைப் பார்ப்பது, குருடன் யானையை தடவிப் பார்ப்பதற்கு ஒப்பானது.

Sunday, 6 October 2013

ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்! 18+


டெல்லியில் உள்ள பாலியல் ஆய்வு மையமான செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண்மை குறைவு காரணமாக விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த சங்கத்தினர் திருமணமாகி விவகாரத்து பெற்ற 2500 பேரை, தங்களது ஆய்வுக்குப்படுத்தினர். இதில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரோக்கியமான திருமண உறவென்பது நீடிக்க வேண்டுமென்றால் வாரம் ஒரு முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்று பிற ஆய்வுகளும் கூறிவருகின்றன. ஆண்டுக்கு 58 முறை உடலுறவு அவசியம் என்று மற்ற ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இன்றைய உலகில் சிறு வயதிலேயே பெரிய வேலை ஏகப்பட்ட பணம் போன்றவற்றினால் குடி, கூத்து என்று இளைஞர்கள் செல்வதால் உண்மையான செக்ஸ் என்று வரும்போது நாட்டமில்லாமல் போய் விடுகிறது.

மேலும் குடியால் 40 வயதிற்குள்ளாகவே சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவை ஏற்படும் வாலிப வயதினரை நாம் தினமும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இவையெல்லாம் அவர்களது செக்ஸ் நாட்டமின்மையை அதிகரித்து விடுகிறது. நாட்டமிருந்தாலும் வியாதி பயம் செயலிழக்கச் செய்து விடுகிறது.

40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு இந்த குறை உள்ளது.

இந்த சங்கத்தினர் நடத்திய ஆய்வில் 40 வயதை கடந்த ஆண்களில் 48 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதே போல் ரத்த அழுத்தம் 40 வயதை கடந்தவர்களில் 45 பேருக்கு உள்ளது.

புகைபிடிக்கும் பழக்கமும் செக்ஸ் உறவில் நாட்டத்தை குறைக்கிறது. கடுமையாக ஊதிக் கொண்டேயிருப்பவர்களின் மன நிலை கவனக்குவிப்பு தேவைப்படும் பாலுறவின்பால் ஈடுபட முடியாமல் செய்து விடுகிறது.

உயர் பணிகளில் இருக்கும் கணவன் மனைவிக்கோ இது பற்றியெல்லாம் யோசிக்கவே நேரம் இருப்பதில்லை இதனால் திருமண முறிவு ஏற்படுகிறது.

ஆண்மைக்குறைவை நேரடியாக, நேர்மையாக ஒப்புக் கொண்டு மருத்துவர்களை ஆண்கள் அணுகவேண்டும், மாறாக ஆணாதிக்கத் திமிரில், கோளாறையும் மறைத்து குற்றவுணர்வில் பெண்களை வதைப்பதை நிறுத்தினால் பாதி விவாகரத்தை குறைக்கலாம்.

தேவை ஆண்கள் தங்கள் குறைபாட்டை வெளிப்படையாக ஒப்ப்புக் கொள்வது. பிறகுக் சிகிச்சை எடுத்துக் கொள்வதேயாகும்.

Thursday, 3 October 2013

சச்சினின் 200வது டெஸ்டை வைத்து அரசியலா? வியாபாரமா?


நியாயமாக தென் ஆப்பிரிக்காவில்தான் சச்சின் டெண்டுல்கரின் 200வது டெஸ்ட் பிரவேசம் நடந்திருக்கவேண்டும். ஆனால் இடையில் இந்தியாவில் அதனை நடத்த மேற்கிந்திய தீவுகளை அவசரம் அவசரமாக வரவழைத்து 2 டெஸ்ட் போட்டித் தொடரை பிசிசிஐ நடத்துவதில் எங்கோ இடிக்கிறது.

சச்சினின் 200 வது டெஸ்ட் என்ற ஒரு பிம்பத்தை வத்து கல்லா கட்ட நினைக்கிறதோ பிசிசிஐ என்ற ஐயம் எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நடந்தால் அதனால் பிசிசிஐ.-யிற்கு என்ன லாபம் இருக்க முடியும் என்பதும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் விவகாரம்தான்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்க தலைவராக ஹரூன் லோர்கட் நியமிக்கப்பட்டதை பிசிசிஐ பகிரங்கமாக எதிர்த்தது. அவர் ஏதோ 2011 உலகக்கோப்பை நடத்தப்பட்ட விதம் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தாராம்! பிசிசிஐ-யிற்குத்தான் விமர்சனம் என்றாலே அலர்ஜியாயிற்றே?

ஐசிசி.யில் எதிர்கால பயணத்திட்டம் என்பது முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாகும். அதனை நாடுகளின் வாரியங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க பயணத்திற்கான ஷெட்யூல் ரொம்ப கச்சடாவாக இருக்கிறது என்று பிசிசிஐ. ஆட்சேபணை தெரிவித்தது. அதனால் ஒரு நல்ல தொடர் குறைக்கப்பட்டுள்ளது.


ஹரூன் லோர்கட்டிற்கும், பிசிசிஐ.யிற்கும் இடையே இருக்கும் சொந்தப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை பகடைக்காயாக வாரியம் பயன்படுத்துகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

200டெஸ்ட் ஆடி விட்டு சச்சின் ஓய்வு பெறலாம் என்பது போன்ற தேவையற்ற செய்திகளை அசட்டு ஊடகங்கள் பரப்பிவந்ததும் பிசிசிஐ-யின் இந்த தந்திரோபாயத்திற்கு மறைமுகமாக உதவி புரிந்தது.

சொந்த நாட்டில், சொந்த மண்ணில் சச்சின் 200வது டெஸ்ட் போட்டியை விளையாடவேண்டும் என்பதெல்லாம் சச்சின் டெண்டுல்கருக்கே பிடித்தமான விஷயமா என்பதில் பலத்த சந்தேகங்கள் உள்ளன. ஒரு கிரிக்கெட் வீரராக எங்கு வேண்டுமானாலும் ஆடும் மனோ பலம் படைத்தவர்தான் சச்சின். எனவே சச்சின் கூறி இதனை பிசிசிஐ செய்திருக்கும் என்பதில் நியாயமில்லை.

ஏனெனில் சச்சின் டெண்டுல்கர்...அடுத்த ஆண்டு லார்ட்ஸில் ஆடுவார் என்று ரவி சாஸ்திரி கூறியதையத்து சச்சின் ஓய்வு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

எனவே சச்சினின் கடைசி டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறவேண்டும், அவரது சொந்த மண்ணில் அவர் ஓய்வு பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பிசிசிஐ செயல்பட்டிருக்குமா என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.


பிசிசிஐ-யிடம் பெரும் ஸ்பான்ஸர்கள் உள்ளனர். அவர்களிடம் இந்த ஆண்டு ஒன்றும் இல்லை என்று கூறுவது எவ்வளவு கடினமோ அதேபோல்தான் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திற்கும்.

அவர்களும் ஏன் இதனை முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கேட்க நியாயம் உண்டு.

ஒரு வீரரை முன் வைத்து ஒரு நாடு எதிர்கால பயணத்திட்டத்தை மாற்றுவது கூடாது. ஒருவரின் லாபத்திற்காக அடுத்த கிரிக்கெட் வாரியத்தை நஷ்டமடையச் செய்வது வணிக அறம் அல்ல.

சொந்த விறுப்பு வெறுப்புகள் கிரிக்கெட்டில் தலைகாட்டுவது சரியல்ல. ஏன் மேற்கிந்திய தீவுகள் திடீரென அழைக்கப்பட்டது என்பதை பிசிசிஐ வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தான்! பிசிசிஐ இதில் மௌனம் சாதிப்பது சச்சின் டெண்டுல்கர், தோனி கூறியதால்தான் மேற்கிந்திய தீவுகள் அழைக்கப்பட்டது என்ற முடிவுக்கு தேவையில்லாமல் அனைவரையும் நகர்த்துகிறது.

பிசிசிஐ வெளிப்படையாக பதில் அளிக்குமா?

Tuesday, 1 October 2013

எம்.என்.நம்பியார்- நேசிக்க வைத்த வில்லன்!


எம்.என்.நம்பியார்… தமிழ் சினிமாவில் அழுத்தமான தடம் பதித்த நடிகர்களில் ஒருவர். கையை பிசைந்து, கழுத்தை சிறுத்து, கட்டை குரலில் அவர் நாயகியை மிரட்டத் தொடங்கும்போது திரையரங்கு சூடேற ஆரம்பிக்கும். எம்.ஜி.ஆர் என்ற ஆற்றல்மிகு ஹீரோவுக்கு இறுதிவரை ஈடுகொடுத்த ஒரே வில்லன்.

எம்.என்.நம்பியார் எ‌ன்ற மன்சரி நாரயண நம்பியார் பிறந்தது கேரளாவில் உள்ள கண்ணூர். வருடம், 1919 மார்ச் 7. சின்ன வயதிலேயே அவரது மனதில் நடிப்பு ஆசை துளிர்விடத் தொடங்கியது. தனது 13வது வயதில் நவாப் ராஜமாணிக்கம் குருப்பில் சேர்ந்தார் நம்பியார். அன்றிலிருந்து நடிப்பே அவரது வாழ்க்கையின் எல்லாமுமாக மாறியது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நம்பியார் என்ற பெயர் உருவாக்கும் பிம்பம் அனைவரும் அறிந்தது. ஏழைகளின் விரோதி, காமுகன், பணத்தாசை பிடித்தவர் இன்னும் தவிர்க்க வேண்டிய அனைத்து குணங்களின் கருவறை அவர். திரை உருவாக்கிய இந்த மாய பிம்பங்களுக்கு நேரெதிரான வாழ்க்கையை இறுதிவரை கடைபிடித்தவர் அவர் என்பது ஆச்சரியமான உண்மை.

நம்பியார் புலால் உண்பதில்லை, புறணி பேசுவதில்லை, ஆடம்பர செலவுகளை ஒருபோதும் விரும்பியதில்லை. பாய்ஸ் நாடக கம்பெனியில் பணிபுரிந்தபோது தனக்கு சம்பளமாக கிடைத்த 3 ரூபாயில் ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி இரண்டு ரூபாயை தனது தாய்க்கு தவறாமல் அனுப்பி வைத்தவர் அவர்.

நம்பியாரின் திரைப்பிரவேசம் 1935ல் தமிழ், இந்தி இரு மொழிகளில் உருவான பக்த ராமதாஸ் படத்தில் நிகழ்ந்தது. வில்லனாக அறிமுகமான அவர் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தும் இறுதிவரை வில்லன் முத்திரையுடனே அறியப்பட்டார்.

ஏறக்குறைய 1,000 படங்கள் நடித்திருக்கிறார் ஏழு தலைமுறை நடிகர்களுடன் பணிபுரிந்திருக்கும் இந்த பழம்பெரும் நடிகர். தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களுடன் ஆங்கில படமொன்றும் இவரது கணக்கில் வருகிறது. 1952ல் வில்லியம் பர்க்கின் இயக்கத்தில் வெளியான ஜங்கிள் படத்தில் சிறிய வேடமொன்றில் இவர் நடித்துள்ளார். கணவனே கண்கண்ட தெய்வம் படம் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டபோது அதில் நம்பியாரும் நடித்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என அன்றைய அனைத்து முன்னணி நடிகர்களுடனும் திரையை பங்கு போட்டிருக்கிறார் நம்பியார். அவருக்கு பிடித்தமான நடிகர் எம்.ஆர்.ராதா என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். பிடித்த நடிகை சாவித்திரி.

அனைவரும் அறிந்த நடிகராக இருந்தும் நடிகன் என்ற எல்லை தாண்டி தனது பிரபலத்தை விலை பேச அவர் ஒருபோதும் முயன்றதில்லை என்பது பலரிடம் காண முடியாத அரிய குணம்.


படத்தில் நடிக்க தொடங்கிய பிறகும் அவரது நாடக ஆசை தணியவில்லை. சொந்தமாக நம்பியார் நாடக மன்றம் என்ற பெயரில் நாடக கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார். அந்த நாடக கம்பெனி கவியின் கனவு, கல்யாண சூப்பர் மார்க்கெட் ஆகிய இரு நாடகங்களை அரங்கேற்றியது. அதில் கல்யாண சூப்பர் மார்க்கெட் நகைச்சுவை நாடகம் என்பது நம்பியாரின் ரசனை அவரது திரை பிம்பத்திலிருந்து மாறுபட்டது என்பதற்கு சிறந்த உதாரணம்.

நம்பியாரின் ஆன்மீக முகம் பிரசித்தமானது. ஐய்யப்பனின் சீரிய பக்தர். 65 வருடங்களுக்கு மேல் சபரிமலை சென்று ஐய்யப்பனை தரிசித்தவர். குருசாமிகளுக்கெல்லாம் மேலான மகா குருசாமி. அவர் மாலை அணிவித்து சபரிமலை அழைத்து சென்ற நட்சத்திரங்கள் ஏராளம். தனது ஆன்மீக செயல்பாட்டை பொது வாழ்வில் அதிகாரத்தை கைப்பற்றும் ஆயுதமாக ஒருபோதும் அவர் பயன்படுத்தியதில்லை.

நம்பியார் இரு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். கல்யாணி, கவிதா என்ற அந்தப் படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. திகம்பரசாமியார் என்ற படத்தில் பதினொரு வேடங்களில் அவர் நடித்தது பலரும் அறியாத ஆச்சரியம்.

உடம்பை பேணுவதில் நம்பியாருக்கு நிகராக சொல்ல யாருமில்லை. வயதான காலத்திலும் உடம்பை கட்டுக் கோப்பாக பேணியவர் அவர். அதன் முக்கியத்துவத்தை இளையவர்களுக்கு பலமுறை போதித்தும் இருக்கிறார். தான் நடித்த படங்களில் நம்பியாருக்கு பிடித்தமான படங்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். எம்.ஜி.ஆருடன் நடித்ததில் ஆயிரத்தில் ஒருவன், சிவாஜியுடன் நடித்ததில் அம்பிகாபதி, ஜெமினியுடன் மிஸ்ஸியம்மா, ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு. சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலன் சீ‌ரியலிலும் நடித்தார்.

எம்.ஆர்.ராதா, சிவாஜி போன்றவர்களுடன் ஒப்பிடும்போது நடிகராக நம்பியாரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ள அதிகம் இல்லை என்றாலும், குரூரம் தெறிக்காத அவரது வில்லத்தனம் தமிழ் சினிமாவில் தனி அத்தியாயமாக என்றும் நிலைத்திருக்கும். வில்லனாக நடித்தே தமிழ் மனங்களின் நேசத்துக்குரியவரானவர் அவர். நடிகர்களின் திரை பிம்பத்தை அப்படியே நம்பும் பாமர ரசனையை தனது நெறி பிறழாத வாழ்க்கையால் முறித்துப் போட்டவர்.

எப்படிப் பார்த்தாலும் நம்பியாரின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான்.

Thursday, 26 September 2013

நடிகவேள் எம்.ஆர். ராதா - நூற்றாண்டு விழா கலைஞன்!


மயிலாடுதுறை தில்லையாடி வள்ளியம்மையை காண வந்த காந்தியடிகள் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். எங்கும் மக்கள் வெள்ளம். அந்நிய துணிகளை விலக்க வேண்டும் என்று தனது பேச்சில் வலியுறுத்துகிறார் காந்தி. கேட்டுக் கொண்டிருக்கும் ஜனம் உணர்ச்சிவசப்படுகிறது.

ஆனால், ஒரேயொருவர் மட்டும் அங்கேயே, அப்போதே தான் போட்டிருந்த அந்நிய துணிகளை கழற்றி எறிகிறார். நல்லவேளை, உள்ளாடை உள்ளூர் தயாரிப்பு. இல்லையென்றாலும் அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார். சுற்றி நின்றிருந்தவர்கள் நிலைதான் தர்ம சங்கடமாகியிருக்கும்.

நியாயம் என்று தோன்றியதை எந்த சூழலிலும் செய்யத் துணிந்தவர் நடிகவேள் எம்.ஆர். ராதா. மேலே உள்ளது சின்ன உதாரணம். ராதாவை எப்படி வகைப்படுத்தலாம்? நாடக நடிகர்... சினிமா நடிகர்... மெக்கானிக்... எலெக்ட்ரீஷியன்... பெரியாரிஸ்ட்... கலகக்காரர்...

நாடக நடிகர் என்றால் ராதா மகிழ்ச்சியடைவார். நடிப்புன்னா ரீ-டேக் இல்லாமல் மூணு மணி நேரம் நாடகத்தில் நடிக்கிறதுதான் என்பது ராதாவின் வாதம். சினிமா? அது ரிட்டையர்ட்மெண்ட். மெக்கானிக்கும், எலெக்ட்ரீஷியனும் வாழ்க்கை ப்ளோவில் அவர் கற்றுக்கொண்டவை. கல்யாணத்திற்கும் இது உதவியது.


அந்தக் காலத்தில் நாடக நடிகர்களுக்கு யார் பெண் தருவது. மெக்கானிக் என்று தனது பார்ட் டைம் வேலையை சொல்லி முதல் மனைவி சரசுவதியை திருமணம் செய்தார் ராதா. சிறிது காலத்துக்குப் பின் சரசுவதியின் தங்கை தனலட்சுமியையும் மணந்து கொண்டார்.

இறுதி மூச்சுவரை ராதா பின்பற்றியது பெரியார். இந்தியாவின் சிறந்த தலைவர் யார் என்று கேட்டால் பெரியார் என்றே சொல்வார் ராதா. அதே நேரம் தி.க. உட்பட எதிலும் உறுப்பினர் அல்ல ராதா. இறுதி வரை சுதந்திர பறவையாக வாழ்ந்தவர் அவர்.

ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட எம்.ஆர். ராதா பிறந்தது சென்னையிலுள்ள சூளை. வருடம் 1907. தந்தை ராஜகோபால் நாயுடு முதலாம் உலகப் போரில் ரஷ்ய எல்லை பஸ்ஸோவியாவில் மரணமடைகிறார். தாய் ராசம்மமாள். உடன் பிறந்தவர்கள் அண்ணன் ஜானகிராமன், தம்பி பாப்பா.

ராதா கலகக்காரரா என்றால் இல்லை. வாழ்வதற்காக கூழை கும்பிடு, குறுக்கு வழி என்றிருப்பவர்கள் மத்தியில், தன்மானத்தை இழக்காத ராதாவின் சுயமரியாதை வாழ்க்கை மற்றவர்களுக்கு கலகமாக தோன்றியதில் வியப்பில்லை.


சிறுவனாக இருந்தபோது அம்மாவிடம் கோபித்து, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கியபோது தொடங்கியது ராதாவின் கலக வாழ்க்கை. எழும்பூரிலிருந்து சிறுவன் ராதாவை ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனி உரிமையாளர் ஆலந்தூர் டப்பி அரங்க நாயுடு சிதம்பரம் அழைத்து செல்கிறார். அங்கிருந்து தொடங்குகிறது ராதாவின் நாடக வாழ்க்கை.

ஆலந்தூர் பாய்ஸ் கம்பெனியிலிருந்து விலகி மைசூர் நாடக கம்பெனி, பிறகு சாமண்ணா நாடக கம்பெனி, அப்புறம் ஜெகந்நாதய்யர் கம்பெனி, 1924 ஆம் ஆண்டு ராதா நடித்த 'கதரின் வெற்றி' நாடகத்தை காந்தி, கஸ்தூரி பாய், பாரதி, ராஜாஜி ஆகியோர் கண்டு ரசிக்கிறார்கள்.

தாவை சினிமா நடிகராக்கிய படம் ராஜசேகரன். நாடகமானாலும், சினிமாவானாலும் பொது விதிகளை உடைப்பவர் ராதா. இழந்த காதல் நாடகத்தில் மனைவியை சவுக்கால் அடித்து கழுத்தை நெரித்து நாற்காலியில் உட்கார வைத்து பதினைந்து நிமிடம் பேசுவார். எப்படி? ஆடியன்சுக்கு முதுகு காட்டியபடி. நாடகத்தில் முகத்தை காட்ட வேண்டும், முதுகை காட்டக்கூடாது என்ற பொது விதி இழந்த காதலில் பொடிப் பொடியானது.

ராதாவின் நாடகங்கள் அனைத்தும் சமூக சீரழிவுக்கு எதிரானவை. அதனாலேயே நாடகம் தொடங்கும் முன் நிஜ ஆகூசனுடனே கொட்டகை வாசல் திறக்கும். அதிலும் போர் வாள் நாடகத்தில் புராண ஆபாசங்களை போட்டு கிழித்திருப்பார் ராதா. விளைவு, சென்னையில் போர் வாளுக்கு தடை விதிக்கப்பட்டது.


தடை செய்யப்பட்ட ராதாவின் இன்னொரு நாடகம், ராமாயணம். விடுவாரா ராதா? அதே நாடகத்தை தேவாசுரப் பாடல் என பெயர் மாற்றி அரங்கேற்றினார். ஆனாலும் பல இடங்களில் அடிதடி. இறுதியில் நாடகம் நடக்கும்போது ராமர் வேடத்திலேயே போலீசார் ராதாவை கைது செய்தனர்.

ராதாவின் கலை உச்சம், ரத்தக் கண்ணீர். திருவாரூர் தங்கராசு எழுதிய இந்நாடகம் 1949 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் திருச்சியில் அரங்கேறியது. ரத்தக்கண்ணீரை காங்கிரஸ் கட்சி பிரமுகர் பி.ஏ. பெருமாள் முதலியார் சினிமாவாக தயாரிக்க முன்வந்தபோது, அதில் நடிக்க ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் சம்பளம் கேட்டார் ராதா.

அந்தக் காலத்தில் ஒளவையார் வேடத்தில் நடிக்க கே.பி. சுந்தரம்மாள் அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக பெற்றிருந்தார். அதைவிட 25,000 ரூபாய் அதிகமாக தந்தால் நடிக்கிறேன் என்று ராதா கூற, மறுபேச்சின்றி அந்த சம்பளம் அவருக்கு தரப்பட்டது.

எம்.ஆர். ராதா நடிகவேள் ஆனது 1952-ல். திருச்சி தேவர் மன்றத்தில் ராதா போர் வாள் நாடகத்தை நடத்தினார். அப்போது பெரியார் முன்னிலையில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அளித்த பட்டம்தான் நடிகவேள்.

பெரியாரின் 101வது பிறந்தநாளான 17-09-1979 அன்று பெரியார் இறந்த நேரமாக காலை 7.25 மணிக்கு உயிர் துறந்தார் எம்.ஆர். ராதா. தனது 72 ஆண்டு வாழ்க்கையில் அவர் புரிந்த பகுத்தறிவு பிரச்சாரமும், சமூக சீரழிவுக்கு எதிரான துணிச்சலான போராட்டங்களும் அளப்பரிய. அன்றைய பெருமைக்குரிய இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றி கார் வெறும் பெயிண்ட் அடித்த தகர டப்பாதான் என்று சொன்னவர் அவர்.


ராதாவின் சட்டென்று மாறும் மாடுலேஷன் குரலா, குறும்பு தெறிக்கும் நடிப்பா, பகுத்தறிவு பளீரிடும் வசனமா... எது அவரை தனித்துவப்படுத்துகிறது?

இவை அனைத்துமே என்றாலும், பணத்துக்காகவும், புகழுக்காகவும் முதுகு வளைக்காத அந்த நேர்மையான துணிச்சல்... இன்று வரை எந்த நடிகனிடமும் காணக் கிடைக்காதது.

தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் ராதா ஒரு முறை உரையாற்றினார். சினிமாக்காரர்களை உயர்த்தாதீர்கள் என்பதாகியிருந்தது அவரது உரை. சினிமாவில் உழைப்பு குறைவு, கூலி அதிகம் என்றவர் முத்தாய்ப்பாக இவ்வாறு சொன்னார் :

ஒரு அலுவலகத்தில் அல்லது ஒரு தொழிலில் ஈடுபட்டபோது தவறு செய்தால் தண்டனை தருவார்கள் அல்லது எச்சரிக்கையாவது செய்வார்கள். ஆனால் சினிமாவில் ஒரு காட்சியில் சரியாக நடிக்காவிட்டால் நாற்காலியில் அமரச் செய்து பேன் போட்டு ஆப்பிள் ஜூஸ் கொடுப்பார்கள். அதனால்தான் சினிமாக்காரர்களை உயர்த்த வேண்டாம் என்கிறேன்.

திரைத்துறையில் இருந்து கொண்டே அதன் சீரழிவை பேச ராதாவைப் போலொரு துணிச்சல்காரர் இன்று இல்லை. ராதா விட்டுச் சென்ற அந்த வெற்றிடம் இன்று வரை வெற்றிடமாகவே உள்ளது. சூப்பர் ஸ்டார்களாலோ, உலக நாயகர்களாலோ, புரட்சி தளபதிகளாலோ கலைஞர்களாலோ நிரப்ப முடியாத உயரிய இடம் அது. ராதாவின் தனித்துவம் பிரகாசிக்கும் இடமும் அதுதான்!

நன்றி.....

Tuesday, 24 September 2013

மன வருத்தம் தந்த சினிமா நூற்றாண்டு விழா


செப்டம்பர் 21 ஆம் தேதி முதல்வர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவின் சில அம்சங்கள் திரையுலகினருக்கும், பிறருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கியமாக திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் தரப்படவில்லை. விழாவுக்கு முந்தைய நாள் வரை இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு அழைப்பிதழ் தரவில்லை என அவரே இன்னொரு மேடையில் தெரிவித்தார்.

பாலுமகேந்திரா தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைமொழி கொண்ட படைப்பாளி. தமிழின் சிறந்த பத்துப் படங்களை தேர்வு செய்தால் அவரின் வீடு படமும் இடம்பெறும். திரைப்படத்தை எப்படி அணுக வேண்டும், எப்படி அதனை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தமிழ் சினிமா துறையில் அறிமுகப்படுத்தியவர் அவரே. அவரிடம் உதவி இயக்குனர்களாக யார் இருந்தாலும் தினம் ஒரு கதையை படித்து அதன் கதைச் சுருக்கத்தை எழுதித்தர வேண்டும். கண்டிப்பான தினம் ஒரு கதையாவது வாசிக்க வேண்டும்.

இதன் காரணமாகதான் வேறு எந்த இயக்குனருக்கும் இல்லாத அளவுக்கு பாலா, வெற்றிமாறன், ராம், சீனு ராமசாமி என அவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் தமிழின் முன்னணி இயக்குனர்களாக பரிணமித்திருக்கிறார்கள் அவருக்கே அழைப்பில்லை.


இதில் உச்சகட்ட சோகம் நம்ம இளைய தளபதியை ஓரம்
கட்டியதுதான். பொதுவான விழாவுக்கு சொந்த கோபதாபங்களை காட்டுவது சரியானதல்ல. ஆனால் காலங்காலமாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. கடைசி சீட்டில் உட்கார வைப்பதால் விஜய்யின் மவுசு எதுவும் குறைந்துவிடப் போவது இல்லை. அதே நேரம் மனரீதியாக தொடுக்கப்படும் இந்த தாக்குதல்கள் எந்த நடிகருக்கும் நெருக்கடியானதே.

இதுபோன்ற நெருக்கடிகளை வெளிப்படையாக அணுக முடியாத மொண்ணையான அமைப்பாக திரைத்துறை இருப்பதுதான் கவலைக்குரியது. கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ இப்படி ஒரு நடிகரை தனியாக கட்டம் கட்ட முடியுமா?

விழா நடந்த அரங்கில் அழைப்பிதழ் வைத்திருந்த திரையுலகினர் பலரும் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் அழைப்பிதழ் இல்லாத அதிமுக பிரமுகர்கள் போலீஸால் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதல்வர் கிளம்பியதும் கூடவே கிளம்பிச் சென்றது முக்கியமானது.

திரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கிய போது பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் முன் வரிசையில் அமர்ந்திருக்க விவேக், சிம்ரன், த்ரிஷாவுக்கெல்லாம் விருதுகள் வழங்கப்பட்டன. பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றோருக்கு விருதில்லை. அதேபோல் கே.ஆர்.விஜயா, அஞ்சலி தேவி உள்ளிட்ட மூத்த கலைஞர்களும் முறையாக அழைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. குரூப் போட்டோ எடுத்த போது பின்வரிசையில் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார் ரஜினிகாந்த்.


விழா சரியாக திட்டமிடப்படவில்லை திறமையான பலரும் விருது வழங்கி கௌரவிக்கப்படவில்லை என பரவலான அதிருப்தி உள்ளது. கலை நிகழ்ச்சிகளும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. கன்னட திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகள் நேற்று நடந்த போது முக்கால்வாசி அரங்கம் காலியாக இருந்தது. சென்னை வந்திருக்கும் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் திரளாக விழாவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் யாரையும் காணவில்லை.

இயக்குனர்கள் சங்கம் சார்பில் விழா மலர் ஒன்றை வெளியிடுவதாக இருந்தனர். தொடக்கநாள்வரை அந்த மலர் தயாராகவில்லை. தமிழுக்காக அல்லும் பகலும் பாடுபடுகிறேன் என்று அங்கீகாரம் கோரும் ஆர்.கே.செல்வமணி போன்றவர்கள் நிறைந்திருந்தும் இயக்குனர்கள் சங்கத்தால் ஒரு மலரை குறிப்பிட்ட தேதியில் தயாரிக்கவோ, வெளியிடவோ முடியவில்லை.

தமிழின் முக்கிய படங்கள், ஆரம்பகால சினிமாக்கள் அழிந்துவிட்டன. முதல் தமிழ் மௌனப் படமான கீசகவதத்தின் பிரதி யாரிடமும் இல்லை. கீசகவதம் மட்டுமின்றி நடராஜ முதலியார் எடுத்த எந்தப் படத்தின் பிரதியும் இன்று நம்மிடம் இல்லை. இருக்கிற படங்களையாவது டிஜிட்டலில் முறைப்படி பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் அரசின் செவிகளை எட்டவில்லை. பாலுமகேந்திராவின் பல படங்களின் பிரதிகூட இன்று இல்லை. இப்படியொரு சூழலில் அவற்றை பாதுகாக்க ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் அதுதான் ஆக்கப்பூர்வமாக அமைந்திருக்கும். கோடிகள் செலவழித்து டான்ஸ் புரோக்கிராம் நடத்துவதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. தொலைக்காட்சியில் ஒளிபரப்பி காசு பார்க்கலாம்.

பழைய படங்களை ஆவணப்படுத்தும் முயற்சி எப்போது மேற்கொள்ளப்படுகிறதோ அப்போதுதான் சினிமா நூற்றாண்டு விழா போன்ற கொண்டாட்டங்களுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.

நன்றி!

Saturday, 14 September 2013

சண்டைக்களமாகும் நடிகர் சங்கம்


பெரிய பெரிய ஜாம்பவான்களின் முயற்சியால் உருவானது நடிகர் சங்கம். அன்று மதராசப்பட்டிணமாக இருக்கையில் தென்னிந்திய மொழிப் படங்களுக்கு தமிழகம்தான் சினிமா தலைநகரமாக இருந்தது. மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கென்று தனித்தனி நடிகர் சங்கங்களை உருவாக்கிக் கொண்டன. பொதுவான ஒன்று என எந்த மாநிலத்திலும் இல்லை.

தமிழன் இளிச்சவாயன் ஆயிற்றே. தமிழகத்தில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் நடிகர் சங்கம் இயங்கி வருகிறது. கேட்டால் அர்ஜுன், பிரகாஷ்ராஜ் அமலா பால், நயன்தாரா என்று எல்லா மொழி நடிகர்களும் நடிப்பதால் இந்த பெயர் என்கிறார்கள். விளக்கெண்ணைய். மலையாளத்திலும்தான் கமல், மீனா, தேவயானி தொடங்கி எல்லோரும்தான் நடிக்கிறார்கள். தெலுங்கு, கன்னடத்திலும் அப்படித்தானே? தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் என்று பெயர் வைக்கும்வரை என்னுடைய மகன் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆக மாட்டான் என்று சில வருடங்கள் முன் பாரதிராஜா அறிவித்தார். மனோஜ் கே. பாரதி நடிகர் சங்க உறுப்பினரா தெரியாது. ஆனால் பாரதிராஜாவின் கோபத்தில் நியாயம் உண்டு.


கடன் மேலும் கடன் என்று தத்தளித்த சங்கத்தை மீட்டெடுத்தவர் விஜயகாந்த். அவர் தலைவராக இருந்த நேரம் வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி நடத்தி சங்கக் கடனை அடைத்தார். சங்க வங்கிக் கணக்கில் எட்டு கோடிவரை பணமும் கையிருப்பில் இருந்தது. ஆனால் இன்று...?

இந்தக் கேள்விக்குறிதான் இப்போதைய பிரச்சனைக்கு முழுக் காரணம். சரத்குமார் தலைவர், ராதாரவி செயலாளர் என்று ஆன பிறகு முறையாக கணக்கு காட்டப்படவில்லை என்பது முதல் குற்றச்சாட்டு. இரண்டாவது, பொதுக்குழுவின் அனுமதியில்லாமல் தனியாருக்கு சங்க இடத்தை தாரை வார்த்தது.

18 கிரவுண்ட் நிலம் சங்கத்துக்கு சொந்தம். அதில்தான் கம்பீரமாக நின்றது சங்கக் கட்டிடம். அதில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டலாம், செலவேயின்றி நமக்கும் கட்டிடம் கிடைக்கும், தியேட்டர் கிடைக்கும் என்றெல்லாம் ஆசைகாட்டி நிலத்தை தாரை வார்த்தனர். சத்யம் குழுமத்துடன் ஒன்றரை கோடிக்கு 2010 நவம்பர் 25 ஆம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதற்கான அனுமதியை கூட்டம் போட்டு கேட்டது 2011 ஜனவரி 19 ல். சாந்தி முகூர்த்தம் முடிந்த பின் கல்யாணத்துக்கு நாள் குறித்த கதை. முதல் டென்ஷன் இதில்தான் தொடங்கியது. சொந்த தோட்டத்தை விற்று அதில் கூலிக்கு வேலை செய்ய சேர்ந்தால் எப்படியோ அப்படிதான் சங்க நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்ததும். அதை செய்ய சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் என்ன அதிகாரம் இருக்கிறது என்பது அவர்களை எதிர்ப்பவர்களின் கேள்வி?

முறையாக அனுமதி வாங்காமல் சங்கக் கட்டிடத்தை இடித்ததால் வழக்கு தொடரப்பட்டு கட்டிடம் இருந்த இடம் இப்போது கழிப்பறையாக கேட்பாரின்றி கிடக்கிறது. சங்கத்தின் கையிருப்பு என்னவாயிற்று என்பது இன்னொரு கேள்வி.


இதனை யார் கேட்டாலும் அதிகாரத்தை வைத்தும் சங்க விதிகளை காட்டியும் அவர்களை கட்டம் கட்டும் வேலையை ராதாரவி செம்மையாக செய்து வருகிறார். இவர்களுக்கு மணிகட்ட துணிந்தவர் விஷால். துணைக்கு ஆர்யா, கார்த்தி, சூர்யா என்று இளம் டீம். இவர்களின் கையெழுத்து வேட்டைக்கு ஆதரவாக சிவகுமார், நாசர், கமல்ஹாசன் போன்ற பெரிய தலைகளும் ஆதரவு தந்திருக்கிறார்கள். நெருக்கடி முற்றிய நிலையில் வரும் 18 ஆம் தேதி பேரவை கூட்டத்தை சரத், ராதாரவி தரப்பு கூட்டியிருக்கிறது.

பேரவை கூட்டத்துக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது, உறுப்பினர் அட்டை இல்லாதவருக்கு, அரங்க வாசலில் கையெழுத்து இடாதவருக்கு அரங்கத்தில் அனுமதி இல்லை என ஏக கெடுபிடி. அதேபோல் நிகழ்ச்சி நிரலிலும் அவர்களின் ஆதிக்கம் தான். ஆண்டறிக்கையை - வரவு செலவு கணக்குகளை படித்து ஏற்றுக் கொள்ளுதல். சங்கத்தை பற்றியும், பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை பற்றியும் விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வந்த நூற்றுக்கணக்கான கடிதங்கள் பற்றி முடிவெடுத்தல் என்று எல்லாமே அதிகாரத்தின் கட்டளைகள் போலிருக்கிறது.

இந்த இடத்தில் இன்னொரு விஷயம். ஒவ்வொரு ஆண்டிற்கான சந்தாவையும் ஜனவரி 31 க்குள் கட்ட வேண்டும். நடிகர் பூச்சி முருகன் உள்ளிட்ட சிலர் ஜனவரி 5 ஆம் தேதியே டிடி எடுத்து அனுப்பியிருக்கிறார்கள். நேரில் பணம் கட்டியிருக்க வேண்டும், டிடி செல்லாது என்று பிப்ரவரியில் டிடி யை திருப்பியனுப்பியிருக்கிறார்கள். அதாவது பூச்சி முருகனும் மற்றவர்களும் சங்க உறுப்பினராக இனி தொடர முடியாது.


இந்நிலையில் பேரவை கூட்டத்தின் நோட்டீஸில் இதற்கு நேரெதிரான வாசகம் ஒன்றை சேர்த்திருக்கிறhர்கள்.

2013 ஆம் ஆண்டு சந்தாவை 31-03-2013 க்குள் செலுத்தத் தவறியதால் சங்க விதி எண் 11 ன்படி உறுப்பினர் பதவி இழந்தவர்கள் சிலர் தங்களுக்கு நிவாரணம் அளிக்கக் கோரி நிர்வாகிகளிடம் கொடுத்த விண்ணப்பங்கள் பற்றி முடிவெடுத்தல்.

சந்தாவை ஜனவரி 31 க்குள் செலுத்தவில்லை என்று பூச்சி முருகன் உள்ளிட்ட சிலரின் உறுப்பினர் உரிமையை ரத்து செய்திருக்கிறார்கள். ஆனால் இதில் கடைசிதேதி 31-03-2013 என குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் வாசகம் உள்ளது.

நடிகர் சங்கத்தில் ராதாரவிக்கு ஆதரவான நாடக நடிகர்கள் அதிகம் பேர் உள்ளனர்.


தேர்தல் நேரத்திலும் இதுபோன்ற இக்கட்டான நேரங்களிலும் அவர்களின் ஆதரவுதான் ராதாரவியையும் மற்றவர்களையும் காப்பாற்றுகிறது. நடிகர் சங்கத்தில் காலாவதியான நாடக நடிகர்கள் எதற்கு என்று நாசர் உள்ளிட்டவர்கள் கேள்வி கேட்பது இதனால்தான். சிவாஜி, பாலையா என்று நடிகர் சங்கத்தை உருவாக்கியவர்களே நாடகத்திலிருந்து வந்தவர்கள்தான் என்று இதற்கு ராதாரவி ஆதரவாளர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். சிவாஜி நாடகத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால் அவர் சினிமா நடிகர். ஆனால் இங்கு உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலானோர் சினிமாவில் நடிக்காதவர்கள். ஊரில் செட்டிலாகிவிட்ட காலாவதியான நாடக நடிகர்களை கைக்குள் போட்டு பெரும்பான்மை எங்களுக்குதான் என்று சங்கத்தை புதைகுழியில் தள்ளிக் கொண்டிருக்கிறார் ராதாரவி என்பது எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு. அந்த நாடக நடிகர்களை மீண்டும் உறுப்பினர்களாக்கும் முயற்சியின் வெளிப்பாடுதான், உறுப்பினர் பதவி இழந்தவர்களுக்கு கருணைகாட்டும் மேற்படி வாசகம்.


சங்கத்தின் சொத்துக்களை நிர்வகிக்கவும், வளர்ச்சி பணிகளை கண்காணிக்கவும் உருவாக்கப்பட்ட ட்ரஸ்டில் தலைவர், செயலர், பொருளாளர் உள்பட ஒன்பது பேர் இருக்க வேண்டும். ஆனால் சரத்குமார், ராதாரவி தவிர வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. சர்ச்சைக்குப் பின் வாகை சந்திரசேகரை மட்டும் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். அதேபோல் சங்க செயற்குழுவில் நான்கைந்து பேரைத் தவிர மற்ற அனைவரும் பெயரும் முகமும் தெரியாத ராதாரவி ஆதரவு நாடக நடிகர்கள்.

சங்கம் இன்று ராதாரவி எனும் தனி மனிதனின் ஆட்சிக்குட்பட்ட தனியார் நிறுவனமாகதான் இயங்குகிறது. அதனை கேள்விக்குட்படுத்தும் எவரையும் கட்டம் கட்டுவதற்கு கூட்டப்பட்டதுதான் 18 ஆம் தேதி நடக்கயிருக்கும் பேரவை கூட்டம். ராதாரவியையும், சரத்குமாரையும் தூக்கியெறியாதவரை நடிகர் சங்கத்துக்கு விமோசனமில்லை என்பதுதான் இளம் நடிகர்களின் கூற்றாக இருக்கிறது. நடக்கிற விஷயங்களும் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.

நன்றி-சினிமா செய்திகள்

Monday, 2 September 2013

வாலிப கவிஞர் வாலி -யின் சிறப்பு செய்திகள்


நூறாண்டு காண வேண்டிய வாலியை காலன் 82ல் எடுத்துக் கொண்டான். அதனால் என்ன. நீலக்கடல் காயலாம், வார்த்தை சமுத்திரம் வற்றவா போகிறது.

1. பாடல் எழுதுவதற்கு சிலர் மூட் வேணும் என்பார்கள். வாலிக்கு அப்படியில்லை, எந்த சூழலிலும் எழுதுவார். பாடல் வ‌ரி எழுத வரலைன்னாதான் மூட் ச‌ரியில்லைன்னு வேடிக்கையாகச் சொல்வார்.

2. புதிய இசையமைப்பாளர் என்றால், நாலஞ்சு படம் பண்ணுங்க, அப்புறம் பார்த்துட்டு உங்க இசையில எழுதறேன் என்று திருப்பி அனுப்பி விடுவார். ஜென்டில்மேனுக்காக ரஹ்மானிடமும் அதேதான் சொன்னார். நான் சேகரோட மகன் என்று ரஹ்மான் சொன்னதும் ஆச்ச‌ரியப்பட்டு பாடல் எழுத சம்மதித்தார். அந்தப் பாடல்தான் ஜென்டில்மேனில் வரும் சிக்கு புக்கு ரயிலே.

3. இளம் கவிஞர்களின் பாடல் வ‌ரிகள் சிறப்பாக இருந்தால் பாராட்ட தயங்க மாட்டார். ந.முத்துக்குமார் சிவா மனசுல சக்தி படத்தில் எழுதிய, ஒரு கல் ஒரு கண்ணாடி பாடலை கேட்டு, எம்‌ஜிஆர் இருந்திருந்தால் இந்த பல்லவிக்கே ஒரு வீடு ப‌ரிசளித்திருப்பார் என பாராட்டியிருக்கிறார்.

4. வாலி எழுதிய சில பாடல்கள் பயங்கர எதிர்ப்பை சந்தித்தன. முக்கியமாக சகலகலாவல்லவனில் வரும் நேத்து ராத்தி‌ரி யம்மா, இந்துவில் வரும் சக்கரவள்ளி கிழங்கே சமைஞ்சது எப்படி. மிகப்பொpய வார்த்தை தாக்குதல்களை சமைஞ்சது பாடலுக்காக வாலி எதிர்கொண்டார்.

5. வாலியும், நாகேஷும் வாடா போடா நண்பர்கள். வாய்ப்பு தேடிய காலத்தில் தி.நகர் காபி ஹவுஸில் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். வாலிக்கு பேப்பர் வாங்கித் தந்து, எதையாவது எழுது என ஊக்கப்படுத்தியவர் நாகேஷ்.

6. இளையராஜா இசையில் வாலி முதலில் எழுதிய பாடல், பத்ரகாளி படத்தில் இடம்பெற்ற, வாங்கோண்ணா...

7. திருச்சி ஆல் இந்தியா ரேடியாவில் வாலி வேலை பார்த்த போது அவர் எழுதிய நாடகங்களுக்கு மனோரமா நடித்திருக்கிறார்.

8. வாலியின் தந்தை ஸ்ரீனிவாச அய்யங்கார், தாய் பொன்னம்மாள். வாலிக்கு ஒரு மூத்த சகோதரர், மூன்று மூத்த சகோத‌ரிகள்.

9. உழைப்பில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். விடா முயற்சியும், உழைப்புமே தன்னை இப்படியொரு உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறது என்று அடிக்கடி சொல்வார். என்றாவது ஒருநாள் உங்கள் வியர்வை உங்கள் உயர்வை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்பார் வாலி.

10. சின்ன வயசிலேயே எழுத்தும், கவிதையும், ஓவியமும் வாலியை ஆக்கிரமித்துவிட்டன. ஸ்ரீரங்கத்தில் இருந்த போது நேதா‌ஜி என்ற கையெழுத்துப் பத்தி‌ரிகையை நடத்தினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் பிரபல எழுத்தாளர் கல்கி.

11. சிலேடைப் பேச்சில் வித்தகர். பாய்ஸ் படத்துக்காக பொருள் இல்லாமல் ஒரு பாடல் (டேட்டிங் பாடல்) வேண்டும் என வாலியிடம் இயக்குனர் ஷங்கர் கேட்ட போது வாலியின் பதில், பொருள் இல்லாமல் நான் பாடல் எழுதறதில்லை (அந்தப் பாடலுக்கு மட்டும் ஒரு லட்சம் பெற்றதாக கேள்வி).

12. வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். அவரை அவரது தயார் ரங்கப்பா என்றுதான் அழைப்பார்.

13. கண்ணதாசன் மீது அதிக ம‌ரியாதை கொண்டவர். அவர் இறந்த போது, எழுதப் படிக்கத் தெ‌ரியாதவர்களில் எமனும் ஒருவன். அழகிய கவிதைப் புத்தகத்தை கிழித்துவிட்டான் என்று எழுதினார்.

14. சென்னைக்கு பாடல் எழுதுவதற்காக முதலில் வந்த போது வாலி திருவல்லிக்கேணியில் உள்ள சுந்தர மூர்த்தி விநாயகர் தெருவில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். வாடகை மாதம் ஐந்து ரூபாய்.

15. நன்றி மறக்காதவர். எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்தப் பிறகுதான் தனக்கு இந்த வாழ்வு கிடைத்தது என்பதை எல்லா மேடைகளிலும் சொல்வார். எம்எஸ்வியை சந்திக்கும் முன்பு எனக்கு சோத்துக்கே வழியில்லை, அவரை சந்தித்த பிறகு சோறு திங்கவே நேரமில்லை என்றும், எம்எஸ்வியை சந்திப்பதற்கு முன் த‌ரித்திரம் என்னை தொட்டது, அவரை சந்தித்த பிறகு ச‌ரித்திரம் தொட்டது எனவும் கூறுவார்.

16. சக கலைஞர்களைப் பாராட்டி திடீர் கவிதை புனைவார். கவிஞர் முத்துலிங்கத்தை பற்றியும் எழுதியிருக்கிறார். பாடகி பி.சுசீலாவை குறித்து அவர் எழுதியது,

சுசீலாவே - நீ
விளைந்த இடம் விஜயவாடா
கடவுள் கலந்து வைத்தான்
நீ விளையும் போதே
குரல்வளையில் விஸ்கி, சோடா.

17. கண்ணதாசனுடன் எம்.‌ஜி.ஆருக்கு சிறிய மனக்கசப்பு ஏற்பட்டிருந்த நேரத்தில்தான் வாலி படகோட்டி படத்தின், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடலை எழுதினார். அதனை கேட்ட எம்.‌ஜி.ஆர் அன்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் என்னுடைய படங்களின் பாடல்களை இனி வாலி எழுதுவார் என அறிவித்தார்.

18. ஏவிஎம் முக்காக வாலி எழுதிய முதல் பாடல், அவளுக்கென்ன அழகிய முகம்... சர்வர் சுந்தரம் படத்தில் இடம் பெறுவது. இரவு நேரம் தான் போதையில் இருந்த போது மெய்யப்ப செட்டியார் ஆள்விட்டு அழைத்து அந்தப் பாடலை எழுதி வாங்கியதாக வாலி தெ‌ரிவித்திருக்கிறார்.

19. வாலி கேமராமேன் மாருதிராவுடன் இணைந்து வடைமாலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

20. வாலிக்கு சென்டிமெண்டில் நம்பிக்கை உண்டு. ம வ‌ரிசையில் அவர் எழுதியப் பாடல்கள் வெற்றி பெற்றதை ரஹ்மான் சுட்டிக்காட்டிய பிறகு ம வ‌ரிசையில் பல பாடல்களை எழுதினார். அழகிய தமிழ்மகனில் வரும் முன்னால் முன்னால் வாடா... சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் முன்பே வா அன்பே வா... ஆகியவை அப்படி எழுதியவை.

21. கருணாநிதியின் எங்கள் தங்கம் படத்தில் வரு‌ம் நான் அளவோடு ரசிப்பவன் பாடல் வாலி எழுதியது. இரண்டாவது வ‌ரிக்காக அவர் யோசனையில் இருந்த போது, எதையும் அளவின்றி கொடுப்பவன் என இரண்டாவது வ‌ரியை சொன்னவர் கருணாநிதி.

22. வாலியின் மனைவி ரமண திலகம். தனது லவ் லட்டர் நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க வந்த அவரை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்தார் வாலி.

23. வாலி பார்த்தாரே பரவசம், ஹேராம் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். முதல் படம், பாலசந்த‌ரின் பொய்க்கால் குதிரை.

24. எம்.‌ஜி.ஆர். நெருக்கமானவர்களை அன்பு மிகுதியில் ஆண்டவனே என விளிப்பார். அப்படி விளிக்கப்பட்டவர்களில் வாலியும் ஒருவர்.

25. பாடல் எழுதி வாங்க வாலியின் வீட்டிற்கு எம்.எஸ்.வி. தொடங்கி ரஹ்மான்வரை அனேகமாக தமிழின் இன்றைய இசையமைப்பாளர்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள். இது வாலிக்கு மட்டுமே உள்ள சிறப்பு.

24. கோபக்காரர். வாலின்னாலே கோபம்தான் ஞாபகம் வரும் என்று கமல் ஒருமுறை கூறினார். இதையே ர‌ஜினியும் கூறியிருக்கிறார்.

25. சக கவிஞர்களை மதிப்பதில் வாலிக்கு நிகர் வாலிதான். அதேநேரம் சிறந்த பாடல்களை கேட்டால் எப்படி நாம் அதனை தவறவிட்டோம் என நினைக்கக் கூடியவர். கவிஞர் தாமரையின் ஒரு பாடலை கேட்டு இரவு தூங்க முடியலை என்று கூறியிருக்கிறார்.

26. பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்கு சும்மா கிடைத்துவிடவில்லை. கே.வி.மகாதேவன் பாடல் வாய்ப்பு கேட்டுப் போன வாலியை அவர் காது படவே திட்டி அனுப்பியிருக்கிறார். எம்.எஸ்.வி.யும் வாலிக்கு சினிமாவுக்கு பாடல் எழுத வராது, பேசாமல் வானொலி வேலையை பார்க்கச் சொல் என்று வாலியின் நண்ப‌ரிடம், வாலி விஸ்வநதனை சந்திக்கச் சென்ற போது கூறியிருக்கிறார்.

27. எம்.‌ஜி.ஆருடன் வாலிக்கு 25 வருடகால நீண்ட நெருக்கமான பழக்கம் உண்டு. எம்.‌ஜி.ஆரை அண்ணா என்றுதான் அழைப்பார்.

28. வாலிக்கு நெடுங்காலமாக மது அருந்தும் பழக்கம் உண்டு. பேச்சிலராக இருந்த போது அவரது மாலைப்பொழுது ஸ்காட்ச் விஸ்கியுடன்தான் தொடங்கும்.

29. ரோஷக்காரர். பாரதவிலாஸ் படத்தில் வாலி எழுதிய இந்தியா என்பது என் வீடு பாடலுக்கு தேசிய விருது தருவதற்காக வாலியிடம் அவரது பயோடேட்டாவை கேட்டனர். வாலி தரவில்லை. அந்தப் பாட்டுக்கு தேசிய விருதுக்கான தகுதியிருந்தா யாரு எழுதினது என்று பார்க்காமல் விருது தரணும், எங்கிட்டயே நான் யார்னு கேட்டு தர்றதுக்கு எந்த விருதாக இருந்தாலும் வேண்டாம் என்று தேசிய விருதையே மறுத்தார்.

30. ஈகோ இல்லாமல் எதையும் முன் வைப்பவர். வாலி அவதார புருஷன் எழுதுவதற்கான தூண்டுதல்களில் ஒன்று, மு.மேத்தாவின் நபிகள் காவியம். ஒரு இந்து விளக்கை ஒரு இஸ்லாமிய விளக்குதான் ஏற்றி வைத்தது என அதனை குறிப்பிட்டார்.

31. வாலியையும் வார்த்தையையும் பி‌ரிக்க முடியாதது போல அவருடன் இருந்த இன்னொரு பழக்கம் தாம்பூலம் போடுவது. ஐம்பது வருடங்களுக்கு மேல் தாம்பூலம் போட்டு வந்தார் வாலி. வார்த்தைகள் ச‌ரியாக அமையாத போது கவிஞரே தாம்பூலம் போடுங்க என்று நெருக்கமானவர்கள் சொல்வதுண்டு. தாம்பூலம் போட்டால் வாலி புத்துணர்ச்சியடைவார்.

32. பாடல் வ‌ரிகளில் சம்பந்தப்பட்டவர்களை இணைத்து விடுவதில் வாலி கில்லாடி. இளையராஜாவின் தாய் பெயர் சின்னதாய். தளபதியில் ஸ்ரீவித்யா சின்ன வயசிலேயே ர‌ஜினியை பெற்றெடுப்பார். அதனை பயன்படுத்தி சின்னதாய் அவள் என்று பாட்டு எழுதியிருப்பார்.

33. வாலியை நாடகத்தின்பால் திருப்பியது, கருணாநிதியின் மருதநாட்டு இளவரசி படத்தின் வசனங்கள். அதன் பிறகே நாடகம் எழுதுவதில் வாலி ஆர்வம் காட்டினார்.

34. பு‌ரியாத வார்த்தைகளில் பாடல் புனைவதில் முன்னோடி. மாருகோ.. மாருகோ..., முக்காலா முக்காபுலா, டாலாக்கு டோல் டப்பிமா... சில உதாரணங்கள்.

35. தனித்தமிழை பயன்படுத்தாததற்கு வாலி வருத்தப்பட்டதில்லை. மாறாக அது ச‌ரிதான் என வாதிட்டிருக்கிறார். யானையை நால்வாய் என்றும், மானை புல்வாய் என்றும் சொன்னால் யாருக்கு தெ‌ரியும், மக்களை சென்றடைய வேண்டும் என்பதே பிரதானம் என்பார்.

36. எம்.‌ஜி.ஆருடன் நெருக்கமான நட்பை பேணி வந்தவராக இருந்தும், எம்.‌ஜி.ஆர், சிவா‌ஜி யார் நடித்தாலும் எம்.ஆர்.ராதா படத்தில் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அப்போது இருந்தது என்று உண்மையை வெளிப்படையாக கூறியவர் வாலி. இதற்காக எம்.‌ஜி.ஆர். ரசிகர்களின் கடும் கண்டனத்துக்கு அவர் ஆளாக நேர்ந்தது.

37. ஒரு இசையமைப்பாளர் வேண்டம் என்று திருப்பி அனுப்பிய பாடல்கள் வேறெhரு இசையமைப்பாள‌ரின் இசையில் வெளிவந்து பெரிய ஹிட்டான ச‌ரித்திரம் வாலிக்கு உண்டு. வாலியின் எவர்கி‌ரின், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான்… இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனால் நிராக‌ரிக்கப்பட்டதுதான்.

38. வாலி மொத்தம் 17 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அதில் பாக்யரா‌ஜின் சாட்டை இல்லாத பம்பரம் படமும் ஒன்று.

39. வார்த்தை விளையாட்டில் வல்லவர். சட்டென்று வார்த்தையால் அடிக்கிற திறமை அவரைப் போல் சில‌ரிடம்தான் உள்ளது. மூப்பனாரை பற்றி பேசும் போது மூப்பனார் என் தோப்பனார் என்றார். அதேபோல் கற்பில் மேலானவர் மாதவியா கண்ணகியா என்று பட்டிமன்றம். நீர் யாரை சொல்றீர் என்று கண்ணதாசன் வாலியை கேட்க, வாலியின் பதில். இரண்டு பேருமே மேலானவர் இல்லை, இரண்டு பேருமே ஃபீமேல்.

40. நான் ஆணையிட்டால் பாடலை நான் அரசன் என்றால் என் ஆட்சி என்றால் என்றுதான் வாலி முதலில் எழுதியிருந்தாராம். ரொம்ப அதிகமாக இருக்கிறது என்று எம்.‌ஜி.ஆர். சொன்னதால் நான் ஆணையிட்டால் என்று மாற்றி எழுதினார்.

41. பாடல் எழுத கண்ணதாசன் முதற்கொண்டு பலரும் அசிஸ்டெண்டுகள் வைத்திருந்தனர். படி எடுப்பதற்கு அவர்கள் உதவுவார்கள். வாலி கடைசி காலம்வரை அசிஸ்டெண்டுகள் வைத்துக் கொண்டதில்லை. தனது வ‌ரியை தானே தன் கைப்பட எழுதுவார். கணினியும் உபயோகிப்பதில்லை.

42. நியூ படத்தில் வரும் சக்கரை இனிக்கிற சக்கரை பாடலின் சிச்சுவேஷனை எஸ்.ஜே.சூர்யா போனில் சொல்ல, சக்கர இனிக்கிற சக்கர... அதில் எறும்புக்கு என்ன அக்கறை.. நான் இக்கரை... நீ அக்கரை... என்று போனிலேயே வ‌ரிகள் சொல்லியிருக்கிறார்.

43. பல நூறு படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் ஆரூர்தாஸ் வாலியை, தென்றலே என்றுதான் விளிப்பார். விருதுகளுக்கெல்லாம் மேலானது என்பார் வாலி.

44. எதிர்நீச்சல் படத்தை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் பார்த்த அண்ணா, அதில் வரும் வெற்றி வேண்டுமா போட்டுப்பாராடா எதிர்நீச்சல் பாடலை எழுதியது யார் என பாலசந்த‌ரிடம் கேட்டுத் தெ‌ரிந்து, ரொம்ப பிரமாதமாக இருக்கு என வாலியிடம் சொல்லச் சொல்லியிருக்கிறார்.

45. வாலி படிப்பாளி. பரந்த படிப்பில்தான் அறிவு வளரும் என்பதில் நம்பிக்கை உள்ளவர். நவீன இலக்கியத்தையும் விடுவதில்லை. சாரு நிவேதிதா, குட்டி ரேவதி போன்றவர்களின் ஆக்கங்களை சமீபத்தில் படித்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார். பிடித்த எழுத்தாளர் காண்டேகர். ஜெயகாந்தனையும் பிடிக்கும்.

46. சிவா‌ஜி கணேசன் வாலியை வாத்தியார் என்று அழைப்பதுண்டு. நாடகத்தில் வசனம் எழுதுகிறவர்களை அப்போது வாத்தியார் என்று அழைக்கும் மரபு இருந்தது.

47. ஆன்மீகவாதி ஆனால் ஆடம்பரவாதியல்ல. வாலியின் திருமணம் 1985 ஏப்ரல் 7 ஆம் தேதி அழைப்பிதழ், போட்டோ எதுவுமில்லாமல்தான் நடந்தது. அதிலும் அன்றைக்கு அவர் கவிஞராக உச்சத்தில் இருந்தார்.

48. ஏவி மெய்யப்ப செட்டியார் சொன்னதன் பேரில் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்துக்கு முதல் பாட்டெழுதினார் வாலி. அப்போதும் சம்பளம் குறைவாக இருக்க தனக்கான நியாயமான ஊதியத்தை கேட்டு பெற்றுக் கொண்டார்.

49. பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்காமல் மதுரைக்கு டிவிஎஸ் சில் ஏதாவது வேலை பார்க்கலாம் என வாலி கிளம்ப தயாரான போது பி.பி.ஸ்ரீனிவாஸ் வாலியை பார்க்க வர, இன்னைக்கு என்ன பாடல் பாடினீங்க என்று வாலி அவ‌ரிடம் கேட்டிருக்கிறார். பி.பி.ஸ்ரீனிவாஸ் அன்று பாடியது, கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா வாழ்விலே குழப்பமா.. பாடல். அதைக் கேட்ட வாலி அந்த நிமிடமே உற்சாகமும் தன்னம்பிக்கையும் பெற்று ஊருக்குப் போகும் முடிவை ரத்து செய்தார்.

50. அதேபோல் அவரை பாடல் எழுத சென்னைக்கு வரவழைத்ததும் பாசவலை படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்தான். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியது.

குட்டி ஆடு தப்பி வந்தா
குள்ள ந‌ரிக்குச் சொந்தம்
குள்ள ந‌ரி தப்பி வந்தா 
குறவனுக்குச் சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படிப் பார்க்கப் போனா
எட்டடிதான் சொந்தம்.

51. மது, தாம்பூல பழக்கத்தை பலர் சொல்லியும் வாலி விடவில்லை. எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத அவரது தந்தை திடீரென அகாலமடைந்ததால் ஏற்பட்ட விரக்தியும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் வாலிக்கு நெருக்கமானவர்கள்.

52. வாலியை அவரது தந்தை ஒவியம் கற்க அனுமதிக்கவில்லை. ஒருமுறை அவர்களின் வீட்டிற்கு வந்த தங்கம்மாள் என்ற அம்மையார் வாலி வரைந்திருந்த ஒரு படத்தைப் பார்த்து, என் தந்தையை அப்படியே இதில் பார்க்கிறேன் என்று அழுதார். அந்தப் படம் மகாகவி பாரதி. அழுதவர் பாரதியின் மகள் தங்கம்மாள் பாரதி. சென்னை ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் வாலியை அதன் பிறகு அவரது தந்தையே சேர்த்துவிட்டார்.

53. ஒருமுறைக்கு பலமுறை திருத்தி எழுதச் சொன்னால் வாலிக்கு கோபம் வரும். கமல்ஹாசன் ஒருமுறை, இந்த ஃபீலிங் போதாது என்று கேட்க நாலுமுறை மாற்றி எழுதினார். கடைசியில் இதுக்கு மேல என்னால ஃபீல் பண்ண முடியாது என்று ரைட்டிங் பேடை துhக்கி எறிந்தார். பிறகு அவர் கடைசியாக எழுதியதே படத்தில் இடம்பெற்றது. அந்தப் பாடல்தான் அபூர்வசகோதரர்களில் வரும், உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே.

54. வாலி வெளிநாடு சென்றதில்லை. அதனால் அவரை பாஸ்போர்ட் இல்லா கவிஞன் என்பார்கள். நான் வெளிநாடுகள் போனதில்லையே தவிர பல வெளிநாடுகள் எனக்குள் போயிருக்கின்றன என தான் வெளிநாட்டு மதுபானம் அருந்துவதை சிலேடையாக சொல்லிக் காட்டுவார்.

55. முருக மற்றும் அம்மன் பக்தர். முருகனை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாட்டில் இழுத்துவிடுவார். உதாரணம்,
வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன்,
வள்ளிக்கணவன் பேரைச் சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்.

56. மனைவி ரமண திலகத்தின் மரணம் வாலியை கடுமையாக பாதித்தது. அவ‌ரின் மறைவுக்குப் பின் இப்படி எழுதினார்.

நீ என்னை வெளியே சுமந்த
கருப்பை.

57. வாலி சிலரைப் போல் வதவதவென்று ஒரு பாடலுக்கு பல்லவியும் சரணமும் எழுதுவதில்லை. யாராக இருந்தாலும் நான்கு பல்லவி, நான்கு சரணங்கள். அதிலேயே இயக்குனரும் இசையமைப்பாளர்களும் திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.

58. கவிஞன் வறுமையில் வாட வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லாதவர். 1964 முதல் வருமான வ‌ரி கட்டி வந்தார்.

59. எம்.எஸ்.வி.யும், வாலியும் இசையமைப்பாளர், பாலாசி‌ரியருக்கு மேலாக நட்பு வளர்த்துக் கொண்டவர்கள். கலங்கரை விளக்கம் கம்போஸிங். என்னை அசத்துற மாதி‌ரி பல்லவி எழுதினால் இதெல்லாம் உனக்குதான் என்று தனது கழுத்து சங்கிலியையும், ரோலக்ஸ் வாட்சையும் கழற்றி ஆர்மோனியத்தின் மீது வைத்தார் எம்.எஸ்.வி. வாலி பல்லவி சொன்னார். சங்கிலியும், வாட்சும் வாலிக்கு கிடைத்தது. அந்தப் பல்லவிதான், காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்.

60. வாலியிடம் அசிஸ்டெண்டாக சேர மூன்று பேர் முயன்றனர். ஒருவர் கிராமத்தைச் சேர்ந்தவர், இன்னொருவர் மெடிகல் ஷhப் வைத்திருந்தவர். மூன்றாவது ஆள் நாடகம் எழுதுகிறவர். அவர்கள்தான் பிற்காலத்தில் பிரபலமான கங்கை அமரன், ராம.நாராயணன், ஆர்.சி.சக்தி

61. பாடல் எழுத தேவையான நேரம் எடுத்துக் கொள்வார். அரை மணியிலும் பாடல் தயாராகிவிடும். பழசிராஜாவில் இடம்பெறும் பாடல் முஸ்லீம் சம்பந்தப்பட்டது என்பதால் இளையராஜாவிடம் 3 மாதங்கள் காலஅவகாசம் வாங்கியதுதான் அதிகபட்சம்.

62. எல்லோரையும் புகழ்கிறார் என்றோரு விமர்சனம் வாலி மீது உண்டு. எல்லோரையும் புகழ்றது தப்பில்லையே, தூஷணம் செய்தாதான் தப்பு என்பார்.

63. அவதார புருஷன் வாலியின் மாஸ்டர் பீஸ். அதில் பலராலும் பாராட்டப்பட்ட ஏராளமான வ‌ரிகளில் ஒன்று,

சர்ப்பத்தில் படுத்தவன் - கோசலையின் 
கர்ப்பத்தில் படுத்தான்.

64. ஓவியர் வாலியைப் போல் ஓவியத்தில் சிறந்தவனாக வேண்டும் என்று ரங்கராஜன் என்ற பெயரை வாலியாக மாற்றிக் கொண்டார்.

65. பாடல்கள் எழுதி புகழ் பெற்ற பிறகு வாலிக்கு பாராட்டு கூட்டம் நடந்தது. வெறும் பாடலாசி‌ரியராக இருந்தால் போதாது என்று அவர் எழுதி வெளியிட்டதுதான் அவரது முதல் புத்தகமான அம்மா.

64. ஷங்கர் அமேரிக்கா செல்ல விசா அதிகா‌ரியை சந்தித்த போது, தமிழரான ஒரு அதிகா‌ரி இவர்தான் ஜென்டில்மேன், காதலன் படங்களின் இயக்குனர் என்று அறிமுகப்படுத்தினார். விசா வழங்கும் அதிகா‌ரி கண்டு கொள்ளவில்லை. நீங்க விரும்பி கேட்கும் முக்காலா முக்காபுலா பாடலை இயக்கியது இவர்தான் என்றதும் ஆச்ச‌ரியப்பட்ட அதிகா‌ரி உடனே விசா தந்திருக்கிறார். இது ஷங்கரே சொன்னது.

65. கும்பகோணம் தீ விபத்தில் பள்ளிக்குழந்தைகள் தீயில் கருகி மடிந்த போது
வாலி இப்படி எழுதினார்.

நிறைய கோயில்கள் கொண்ட ஊராமே
குடந்தை - அப்படியானால் இந்த அக்கிரமத்துக்கு
அத்துணை தெய்வங்களுமா
உடந்தை.

இதைப் படித்து, ஒரு நாத்திகனால் யோசிக்க முடியாததை எழுதிட்டீங்களே என்று போனில் வைரமுத்து வாலியை பாராட்டினார்.

66. ஸ்ரீரங்கத்தில் வாலி போட்ட முதல் நாடகம் தளபதி. துணைப்பாடத்தில் இடம்பெற்றிருந்த கிங்லியர் கதையை தழுவி இந்த நாடகத்தை வாலி எழுதியிருந்தார்.

67. நவீன பெண் கவிஞர்கள் உடலைக் கொண்டாடுதல் என்று உடல் உறுப்புகளின் பெயர்களை கவிதையில் எழுதுவதை பலர் எதிர்த்தனர். வாலியிடம் அது குறித்து கருத்து கேட்டபோது, ஆணுக்குள்ள எல்லா சுதந்திரமும் பெண்ணுக்கும் உண்டு. ஆண்டாள் எழுதாததா என்று ஒரே வார்த்தையில் எதிர்ப்பாளர்களை நிராக‌ரித்தார்.

68. உங்க பாடல் ச‌ரியில்லை என்று சொன்னால் வாலிக்கு கோபம் வரும். எம்.‌ஜி.ஆ‌ரிடம்கூட, உங்களுக்கு பு‌ரியலைன்னு சொல்லுங்க, ச‌ரியில்லைன்னு சொல்லாதீங்க என்று கோபித்திருக்கிறார்.

69. வாலி எழுதி பத்தி‌ரிகையில் பிரசுரமான முதல் சிறுகதை பிராந்தி. வெளியானது கி.வ.ஜா. வின் கலைமகள்.

70. வாலி சினிமாவுக்கு வருவதற்கு முன் எழுதிய பாடல், கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்... இந்தப் பாடலில் மனதை பறிகொடுத்துதான் வாலியை சினிமாவில் பாட்டெழுத சென்னைக்கு வரச்சொன்னார் டி.எம்.எஸ். பிறகு அந்தப் பாடலுக்கு இசையமைத்து அவரே பாடினார்.

71. வாலி நாடகத்துக்காக எழுதிய பாடல்கள் 1956 ல் புதையல் படத்துக்காக வாங்கப்பட்டது. என்றாலும் அப்பாடல்கள் புரட்சி வீரன் புலித்தேவனில்தான் பயன்படுத்தப்பட்டது.

72. வாலிக்கு பைபாஸ் சர்ஜ‌ரி செய்ய வேண்டும் என்ற போது அதற்கான முழுச் செலவை ஏற்றுக் கொண்டதுன், மருத்துவர்களிடம் தனிப்பட்ட முறையில் வாலியை பத்திரமாக கவனித்துக் கொள்ளச் சொன்னவர் கருணாநிதி. அதனால், எனக்கு மறுபிறவி தந்தவர் என்று கருணாநிதியை வாலி குறிப்பிடுவதுண்டு.

73. 1958 ல் அண்ணா கதைவசனத்தில் பா.நீலகண்டனின் இயக்கத்தில் எம்.‌ஜி.ஆர். நடித்த நல்லவன் வாழ்வான் படத்துக்கு வாலி பாட்டு எழுதினார். எம்.‌ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்ததே பெரிய விஷயம் என பா.நீலகண்டன் சொன்ன போது, சம்பளம் வேண்டும் என வாலி கேட்டுப் பெற்றது 250 ரூபாய்.

74. படகோட்டி படத்தின் அத்தனை பாடல்களையும் வாலி எழுதினார். கடைசிப் பாடலின் போது அவர் உடம்புக்கு முடியாமல் வீட்டில் இருந்த போது வேறு ஒருவரை வைத்து கடைசிப் பாடலை எடுப்பது என முடிவானது. எம்.எஸ்.வி. க்கு உடன்பாடில்லை. தனது அசிஸ்டெண்ட் மற்றும் ஆர்மோனியப்பெட்டியுடன் வாலியின் வீட்டிற்கே சென்று ட்டியூன் போட்டு பாட்டை எழுதி வாங்கினார்.

75. பாட்டுக்கு மெட்டு, மெட்டுக்குப் பாட்டு இரண்டிலும் வாலி வித்தகர். இளையராஜா முதல் ரஹ்மான்வரை அனைவ‌ரிடமும் இந்த இரண்டு முறையிலும் பாடல் எழுதியிருக்கிறார். சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் நியூயார்க் நகரம் வாலி எழுதிய பின் ரஹ்மான் மெட்டமைத்தது.

76. 1958 ல் அழகர் மலைக்கள்ளன் படத்தில் எழுதிய, நிலவும் தாமரையும் நீயம்மா, உலகம் ஒருநாள் உனதம்மா பாடல்தான் வாலியின் முதல் திரையிசைப் பாடல்.

77. இரண்டே வ‌ரிகளில் அடிப்பதில் வாலியை அடிக்க ஆளில்லை. கோவலன் கதையை இரண்டே வ‌ரிகளில் சொல்ல முடியுமா என்று கேட்ட போது அவர் சொன்னது.

புகா‌ரில் பிறந்தான்
புகா‌ரில் இறந்தான்

78. எம்.‌ஜி.ஆர். படமென்றால் அரசியலை பாட்டில் நுழைக்காமல் இருக்க மாட்டார். அரசியலே இல்லாத அன்பே அன்பே படத்தில், உலகம் பிறந்தது எனக்காக பாடலில், உதயசூ‌ரியன் உதிக்கையிலே என்று எழுதினார். எதிர்பார்த்தது போல் சென்சா‌ரில் பிரச்சனையாகி புதிய சூ‌ரியன் என மாற்றினர்.

79. பிரபுதேவாவுக்கு டான்சராக புகழ் வாங்கித் தந்த பாடல்கள் அனைத்தையும் வாலியே எழுதினார். பிரபுதேவா முதலில் தனியாக சினிமாவில் நடனமாடியது கதி‌ரின் இதயம் திரைப்படத்தில். ஏப்ரல் மே யிலே  பசுமையே இல்லை என்ற அந்தப் பாடலை எழுதியவர் வாலி. ஜென்டில்மேன் சிக்குபுக்கு ரயிலே, வால்டர் வெற்றிவேல் சின்ன ராசாவே சித்தெறும்பு உன்னை கடிக்குதா... சூ‌ரியன் லாலாக்கு டோல் டப்பிமா.. எல்லோமே வாலி எழுதியவைதான்.

80. பாடலின் டியூன் சிச்சுவேஷனுக்கு அந்நியமாக இருந்தால் இசையமைப்பாளர்களிடம் சுட்டிக்காட்டி மாற்றச் சொல்வார். இளையராஜா முதல் ரஹ்மான்வரை எல்லா இயக்குனர்களும் அப்படி மாற்றியும் இருக்கிறார்கள். பார்த்தால் பரவசம் படத்துக்கு வாலியின் கையில் இரவு ஏழு மணிக்கு டியூன் கிடைக்கிறது. சிச்சுவேஷனுக்கு டியூன் ச‌ரியில்லை என திருப்பி அனுப்புகிறார். 10.30 க்கு ரஹ்மானே வாலியின் வீடு தேடி வருகிறார். 12 மணிக்கு புதிய டீயூன் தயாராகிறது. அந்தப் பாடல்தான், மூன்றெழுத்து கெட்ட வார்த்தை சிஷ்யா...

81. கவிஞர் கண்ணதாசன் மீது ம‌ரியாதை கொண்டவர். ஒருமுறை போதையேறிய கண்ணதாசனுடன் இரவில் சென்ற போது பாண்டிபஜார் போலீஸார் இருவரையும் லாக்கப்பில் அடைத்த அனுபவமும் வாலிக்கு உண்டு.

82. பாடல் எழுத வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்ட போது கண்ணதாசனுக்கு அசிஸ்டெண்டாக சேரும் வாய்ப்பு வாலிக்கு வந்தது. மாதச் சம்பளம் 300 ரூபாய். நான் கண்ணதாசனுக்கு எதிரே கடைவி‌ரிக்க வந்தவன் என்று கூறி அதனை மறுத்தார்.

மக்கள் மனதில் என்றும் அவர் நிலைத்து இருப்பார்.

நன்றி - சினிமா செய்திகள்



Sunday, 18 August 2013

தமிழ் சினிமாவின் அட்டகத்திகள் !


தலைவாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. சிலரின் உண்மையான வீரம் என்ன என்பதையும் அது கோடிட்டு காட்டியிருக்கிறது. இந்தப் படிப்பினையை பால பாடமாக மனதின் ஓரத்தில் வைத்திருப்பது அவசியம்.

தலைவா வெளியாகவிருந்த திரையரங்குகளுக்கு வந்த வெத்து வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பிரச்சனை ஆரம்பித்தது. படத்தை வெளியிட்டால் பிரச்சனை வெடிக்கும் என்று காவல்துறை அச்சம் தெரிவித்ததை தொடர்ந்து காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. படத்தின் பேனர்கள், கட் அவுட்களை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஊர்பேர் தெரியாத யாரோ சிலரின் வெடிகுண்டு மிரட்டலுக்கு எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக அவை தெரியவில்லை. வெடிகுண்டு மிரட்டலை காரணமாக வைத்து அதிகார மையம் தலைவா படத்தை முடக்க நினைத்தது. அதை அவர்கள் வெற்றிகரமாக செய்து காட்டினார்கள். திரையரங்கு உரிமையாளர்களின் பேச்சில் அது வெளிப்பட்டது.

தலைவா அரசுக்கு எதிரான படம். அரசுக்கு எதிரான காட்சிகளை நீக்கி, அரசு சம்மதித்தால் மட்டுமே படத்தை திரையிடுவோம் என அவர்கள் கூறினர். படத்தைப் பார்த்த வரிச்சலுகை அளிக்கும் குழு, வரிச்சலுகைக்கு தகுதியில்லை என நிராகரித்தது. அதற்கு மிகவும் எளிய காரணங்களை தெரிவித்தனர். இதே காரணங்களுடன் வெளிவந்த பல படங்கள் வரிச்சலுகை பெற்றதை உதாரணமாக காட்ட இயலும். யாரோ சிலரின் அல்லது ஒருவரின் கட்டளைகள் அதிகாரத்தின் துணையுடன் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த சிஎம் கனவுடன் யார் காய் நகர்த்தினாலும் அதனை இரண்டு திராவிடக் கட்சிகளுமே விரும்புவதில்லை. மக்கள் இயக்கம், தனிக்கொடி என்று அரசியலுக்குரிய தாளலயத்துடன் விஜய்யின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. காவலன் படப்பிரச்சனை காரணமாக சென்ற தேர்தலில் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். திமுக வுக்கு எதிரான நடவடிக்கையாக அது அமைந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரன் பல இடங்களில் அதிமுக-வை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதிமுக அமோக வெற்றி பெற்றது. அந்த வெற்றியில் நானும் ஒரு அணிலாக உதவினேன் என்று பூரித்தார் விஜய்.

ஆனால் ஜெயலலிதா அவர்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் காட்டின. முக்கியமாக, எதிர்காலத்தில் நான்தான் அண்ணா, விஜய்தான் எம்ஜிஆர் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளிப்படையாக பேசியது அவருக்கு அதிருப்தியை தந்தது. முதல்வேலையாக விஜய்யின் பிரமாண்ட பிறந்தநாள் விழா முடக்கப்பட்டது. விஜய்யால் எதுவும் செய்ய முடியவில்லை. பிறந்தநாள் விழாவை அரசியலுக்கான ஆரம்ப விழா என்று சிலர் திரித்துவிட்டார்கள், நடிப்பதற்கே நேரம் இல்லாத எனக்கு அரசியல் செய்ய நேரமும் இல்லை, ஆசையும் இல்லை என நமத்துப்போன தன்னிலை அறிக்கையை மட்டுமே அவரால் தர முடிந்தது.

அந்த கொந்தளிப்பான சூழல் ஆறி தணிவதற்குள் வந்தது தலைவா படத்தின் வெளியீடு. அதன் பிறகு நடந்ததை நாடறியும். தலைவா படத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒரு காரணமாக கூறப்பட்டு படம் எப்படி முடக்கப்பட்டதோ அதேபோல் விஸ்வரூபத்துக்கு முஸ்லீம்களின் எதிர்ப்பு காரணமாகக் காட்டப்பட்டது.


இரண்டுமே ஏறக்குறைய ஒரே பிரச்சனைதான். ஆனால் அதனை விஜய்யும், கமலும் கையாண்டவிதம் வேறு. கமல் மீடியாவின் மூலம் நேரடியாக மக்களை சந்தித்தார், பிரச்சனைகளை பேசினார். தடை செய்த அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். படத்தை வெளியிடக் கூடாது என்பதற்கு அரசு சொன்ன சொத்தை வாதங்களை உதாரணங்களுடன் மடக்கினார். முக்கியமாக, விஸ்வரூபம் வெளியாகாததற்கு அரசின் நியாயமற்ற எதிர்ப்புதான் காரணம் என்பதை மக்கள் முன் வெட்ட வெளிச்சமாக்கினார். திரைமறைவில் அவர் எந்த ரகசிய பேரத்திலும் ஈடுபடவில்லை.

ஆனால் விஜய்யும் அவரது தந்தையும் ரகசியமாக முதல்வரை சந்திக்க முயன்றனர். முதல்வரைப் புகழ்ந்து விஜய் அறிக்கை வெளியிட்டார். தலைவா வெளியாகாததற்கு யார் காரணம் என்பதை தெரிவிக்காமலே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர். பிரச்சனையை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் அவர்களின் ஒவ்வொரு நகர்வும் ரகசிய நடவடிக்கையாகவே அமைந்தது. ஒரே வரியில் சொல்வதென்றால், தனது சொந்தப் பிரச்சனைக்காக அவரால் எதிர்த்துப் போராட முடியவில்லை.

இன்னொருபுறம் சரத்குமார் தலைவா பிரச்சனைக்காக போராடுகிறார் என தெரிவிக்கப்பட்டது. நடிகர் சங்கத் தலைவர் வெளிப்படையாக எதுவும் பேசவில்லையே என்ற கேள்வி எழுந்த போது, சத்தம் போட்டுவிட்டு எதுவுமே செய்யாமல் இருப்பது நல்லதா, சத்தம் போடாமல் காரியமாற்றுவது நல்லதா என சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் ட்வீட்டரில் தெரிவித்தார். அங்கேயும் எல்லாமே ரகசியம்தான். இது என்ன இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சனையா? இல்லை தாவூத்தை பிடிக்க ரகசிய திட்டம் போடுகிறார்களா?

விஜய், சரத் என்றில்லை, தமிழ் சினிமாவின் 24 சங்கங்களில் ஒன்றுகூட தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. ஒரு படத்துக்கு அதிகார மையத்தால் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் இந்த சங்கங்கள் கள்ள மௌனத்தின் மூலமே அதனை கடந்திருக்கின்றன. ஜெயலலிதா முதல்வராகும் போது கருணாநிதியை கிண்டல் செய்து கலை நிகழ்ச்சி நடத்துவதும், கருணாநிதி முதல்வராகும் போது ஜெயலலிதாவை கிண்டல் செய்வதுமாக சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்துதான் இவர்கள் சலுகைகளை பெறுகிறார்கள் என்பது கண்கூடு. காவிரிக்காக நெய்வேலியில் திரையுலகம் திரண்டது ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் என்பதும், சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தது கருணாநிதியின் கண்ணசைவில் என்பதும் ஊர் அறிந்த ரகசியம். கடந்த இரு பத்தாண்டுகளில் ஈழத்துக்காக ராமேஸ்வரத்தில் இயக்குனர்கள் தன்னெழுச்சியாக மேற்கொண்ட போராட்டத்தை தவிர்த்து திரையுலகம் ஒன்று கூடிய அனைத்துப் போராட்டங்களுமே ஆள்பவர்களின் விருப்பத்தின் பேரில் நடத்தப்பட்டவையே. ஆள்பவர்களின் விருப்பத்துக்கு மாறான சின்ன அசைவை வெளிப்படுத்தவே திரையுலகம் பதறுகிறது. நேர்மையான உரிமைகளை போராடிப் பெறாமல் கூழைக்கும்பிடில் காரியம் சாதித்து அரசை அண்டிப் பிழைப்பதாகவே திரையுலக சங்கங்கள் தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளன.


கூழைக்கும்பிடு, சந்தாப்பவாதம், ரகசிய பேரம் என பை பாஸில் பயணிக்கிறவர்களால் எந்தப் பிரச்சனையையும் நேருக்குநேர் எதிர்கொள்ள முடியாது என்பது சரித்திரம். சொந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாதவர்களிடம், காவிரிப் பிரச்சனைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை, ஈழப்பிரச்சனையை ஏன் முன்னெடுக்கவில்லை என்று நாம் கேட்டுக் கொண்டிருப்பது கேலிக்குரியது. ஒருமுறை கூடங்குளம் பிரச்சனையில் சிறை சென்ற பெண்ணை சந்திக்க நேர்ந்தது. நடுத்தர வயது மீனவப் பெண். படிக்காதவர். சிறை சென்று தினம் கஷ்டத்தை அனுபவிக்கும் போதும் அணு உலை கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். பேருந்தில் கையில் விலங்கிட்டு நீமன்றத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட போது, பேருந்தில் இருந்த சிலர் பிரியாணிக்காகவும், ஐநாறு ருபாய்க்காகவும் இப்படி கஷ்டப்பட வேண்டுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கிறார்கள். நான் ஆயிரம் ரூபாயும், பிரியாணியும் தர்றேன் நீ இந்த மாதிரி கையில் விலங்கோடு சிறைக்கு போகத் தயாரா என்று இவர் திருப்பி கேட்டிருக்கிறார். ரூபாய்க்காகவும், பிரியாணிக்காகவும் அவர்கள் போராடவில்லை. அது உரிமைக்கான போராட்டம், எதிர்காலத்துக்கான போராட்டம். அந்த மீனவப் பெண்ணிடம் காணப்பட்ட உறுதியிலும், நெஞ்சுரத்திலும் கால்வாசி இல்லாதவர்கள் நமது சினிமா அட்டக்கத்திகள். இவர்களைப் போய் தலைவா என்றும், தலைமை ஏற்க வா என்றும் கூவுவதைவிட கேவலம் என்ன இருக்கிறது? இந்த அட்டக்கத்திகள் திரையரங்கு இருட்டில், இருந்தால் இமயமலை எழுந்தால் எரிமலை என்று சுயபுகழ்ச்சி பாடுகையில் கைத்தட்டுகிற ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேவலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.

திரைப்படம் பார்ப்போம், திரைப்படத்தை ரசிப்போம், சினிமா நட்சத்திரங்களையும் ரசிப்போம். அவர்களுக்கு செம்பு அடிப்பதையும், பல்லக்கு தூக்குவதையும் விட்டுவிடுவோம். சுயமரியாதையான சமூகத்தில்தான் சுயமரியாதையான அரசு சாத்தியம்.

நன்றி-இணையம்

Friday, 9 August 2013

49 ஓ - கவுண்டமணி விவசாய ஹீரோவாக நடிக்கும் படம்


தமிழ் சினிமாவில் நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் தனக்கென மக்கள் மனதில் தனி இடம் பதித்தவர் நம்ம கவுண்டமணி அவரை பற்றிய ஒரு புதிய செய்தி இதோ.

நக்கல் நையாண்டி காமெடிக்கு கவுண்டர்தான் எப்போதுமே முதல் சாய்ஸ். மற்ற காமெடியன்கள் மற்றும் ஹீரோக்களால் அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும்தான் நக்கல் செய்ய முடியும். கவுண்டமணிதான் ஜனங்களின் மொண்ணைத்தனத்தையும் கிண்டல் செய்யக் கூடியவர். குவாட்டருக்கும், கோழி பி‌‌ரியாணிக்கும் ஓட்டை விற்றவங்கதாண்டா நீங்க என்று ஜனங்களையே கேலி செய்கிறவர்.

ச‌ரி, இவ்வளவு டீட்டெயில் எதுக்கு என்றால் கவுண்டர் மீண்டும் தனது கடையை திறந்திருக்கிறார். எஸ், ஹி இஸ் பேக்.

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் 49 ஓ படிவத்தை வாங்கி நிரப்பித்தர வேண்டும். எழுத்தாளர் ஞானிதான் இப்படியொரு முறை இருப்பதை தமிழகத்தில் பிரபலப்படுத்தினார். அதன் பிறகு பலரும் தேர்தலின் போது 49 ஓ படிவத்தை வாங்கி பூர்த்தி செய்தனர். பல வாக்குச்சாவடிகளில் 49 ஓ படிவம் இல்லாத கூத்தும் நடந்தேறியது.

இந்த 49 ஓ என்பதைதான் கவுண்டமணி நடிக்கும் படத்துக்கு பெயராக வைத்துள்ளனர். இதில் கவுண்டர் விவசாயியாக வருகிறார். இன்றைய மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கையும், விவசாயிகளின் கஷ்டத்தையும் தனக்கேயு‌‌ரிய கேலியுடன் படம் நெடுக பட்டைய கிளப்பயிருக்கிறாராம். இந்த தகவல்களை தெ‌ரிவித்தவர், 49 ஓ வை இயக்கப் போகிற ஆரோக்கியதாஸ்.

கவுண்டமணி இதுவரை ஹீரோவாக நடித்த எந்தப் படமும் வெற்றியடைந்ததில்லை. 49 ஓ தீர்ப்பை திருத்தி எழுதுமா?


Thursday, 1 August 2013

தமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள்

தமிழ் சினிமாவில் சில வார்த்தைகளை வகைதொகையில்லாமல் பயன்படுத்தி அந்த வார்த்தையை கேட்டாலே பேதியாகிற அளவுக்கு செய்துவிட்டார்கள். புரட்சி என்று சொன்னால் சே குவேராவே நடுங்குகிற அளவுக்கு தமிழ் சினிமா முழுக்க புரட்சியாளர்கள். இப்படி பட்டறை இரும்பாக அடிபட்ட சில 'கெட்ட' வார்த்தைகளை தொகுத்துப் பார்க்கலாமே என்று ஒரு அசட்டு ஆசை. புரட்சியிலிருந்தே தொடங்குவோம்.


10. புரட்சி

இந்த பரந்த பூமியில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே புரட்சியாளர்கள் இருப்பதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் தடுக்கினால் ஏதாவது புரட்சிக்காரர் மீதுதான் விழவேண்டும். சமயத்தில் தடுக்கியவரும், தடுத்தவரும் புரட்சியாளராக இருப்பதுண்டு. சாலிக்கிராமத்தில் ஐவரில் ஒருவர் புரட்சிக்காரர் என்கிறது புள்ளி விவரம்.

புரட்சி கலைஞர், புரட்சி தமிழர், புரட்சி தளபதி, புரட்சி இயக்குனர் என உயர்திணையிலும் புரட்சிகரமான கதை, புரட்சிகரமான இயக்கம், புரட்சிகரமான நடிப்பு, புரட்சிகரமான வசனம் என அஃறிணையிலும் சினிமாவில் புரட்சி நொதித்துக் கொண்டிருக்கிறது.

இந்த இட நெருக்கடி காரணமாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் புரட்சி குறித்த அதிருப்தி தெரிகிறது (முன்னோர்கள் தேய்த்த தேய்ப்பு அப்படி). ஒருகாலத்தில் ஓகோவென்றிருந்த புரட்சியின் மகத்துவம் இப்போது குறைந்து வருவதை - ஒருவகையில் புரட்சி என்றுதான் கூற வேண்டும்.


9. ஜானர்

வெளிநாடுகளில் நிழல் உலகத்தைப் பற்றி படம் எடுத்தால் அந்த உலகத்தை தாண்ட மாட்டார்கள். காமெடி என்றால் அது மட்டுமே இருக்கும். அப்படிதான் ஆக்ஷன், ரொமான்டிக் எல்லாம். அதனால் ஜானர் என்ற சொல்லுக்கு அங்கு அர்த்தம் உண்டு.

தமிழுக்கு ஜானர் புத்தம் புதிய வெளியீடு. நியூ ரிலீஸ். இப்பொழுதுதான் பேசி பழகுகிறார்கள். இரண்டு உதவி இயக்குனர்கள் (அல்லது இயக்குனர்கள்) சந்தித்தால் என்ன கதை என்று கேட்பதில்லை. என்ன ஜானர்? இதுதான் இப்போது பேஷன்.

சமீபத்தில் இரண்டு இயக்குனர்கள் பேசியதை கேட்க நேர்ந்தது.

"கையிலே என்ன ஜானர் வச்சிருக்கீங்க"

"ரொமான்டிக்"

"இப்போ காமெடிதான் போகுது"

"அதுவும் இருக்கு" பிரபலமான காமெடியன் ஒருவாpன் பெயரைச் சொல்லி, "அவர் மெயின் ரோல் பண்றார்."

"அப்ப சரி. பைட்?"

"நாலு வச்சிருக்கேன்"

இப்படி அவரின் ரொமான்டிக் ஜானாரில் காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என எல்லா ஜானர்களும் உண்டு. உலகில் எங்கு ஜானர் அழிந்தாலும் தமிழில் வாழ்வாங்கு வாழும்.


8. ட்ரெண்ட் செட்டர்

ஆர்வ மிகுதியில் (கோளாறு என்றும் சொல்லலாம்) இருப்பவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் சொல். இவர்களை தனித்து அடையாளம் காணலாம். கூண்டிலிட்ட கரடியாக ஒரே இடத்தில் அலைபாய்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் கடைசியாகப் பார்த்த படம் அனேகமாக தில்லானா மோகனாம்பாளாக இருக்கும்.

பெரும்பாலான இயக்குனர்கள் இந்த கட்டத்தை தாண்டியவர்கள். கூச்சம் கருதி ட்ரெண்ட் செட்டர் என்ற வார்த்தையை தவிர்த்தாலும் அவர்களின் நண்பர்கள் (உண்மையில் இவர்கள்தான் நிஜ எதிரிகள்) அவரோட படம் ஒரு ட்ரெண்ட் செட்டர் என்று சம்பந்தப்பட்டவர்களை பொது மேடைகளில் நெளிய வைப்பார்கள்.

இவர்கள் ட்ரெண்ட் செட்டர் என குறிப்பிடும் படங்களைப் பார்த்து, இவர்கள் ட்ரெண்ட் செட்டரை சொல்கிறார்களா இல்லை டெண்ட் கொட்டாயை சொல்கிறார்களா என்று வரலாற்றாய்வாளர்கள் திரிபு மயக்கம் கொள்வதுண்டு.


7. கதைக்கேற்ற கிளாமர்

உலகில் அர்த்தம் கண்டுபிடிக்கப்படாத எட்டு வார்த்தைகளில் ஒன்றாக ஹார்வர்ட் பல்கலை இதனை வகைப்படுத்தியிருக்கிறது. காத்து கருப்பு மாதிரி எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய விஷயம். கோடம்பாக்கத்தில் சித்த சுவாதீனமில்லாமல் திரிகிறவர்களில் சமபாதி பேர் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடி புறப்பட்டவர்கள்.

நடிகையின் வாழ்வியலை வைத்து இதற்கு ஏகதேசமாக ஒரு மேப் வரைந்திருக்கிறார்கள்.

நடிகை அறிமுகமாகும் போது கெடுபிடி அதிகமிருக்கும். அப்போது கதைக்கேற்ற கிளாமர் என்பது கணுக்காலை தாண்டாது.

நான்கைந்து படங்கள் முடியும் போது, கதைக்கேற்ற கிளாமர் முட்டிக்கு மேல் ஏறி நிற்கும்.

அதன் பிறகு பாய்மரப் படகின் பாயை சுருட்டி மேலேற்றிய கதைதான். கதைக்கேற்ற கிளாமர் அப்போது எதற்கேற்ற மாதிரியும் மாறியிருக்கும். இந்த வார்த்தை அர்த்தம் இழக்க ஆரம்பிப்பதே அந்த இடத்தில்தான் என மொழியியலாளர்கள் சுட்டுகின்றனர்.


6. கெமிஸ்ட்ரி

சினிமா ஒரு விஞ்ஞானம் என்பதால், எதற்கும் இருக்கட்டும் என பெயர் தெரியாத ஏதோ புண்ணியவான் வேதியலை இழுத்துவிட்டிருக்கிறhர். இசை வெளியீட்டு விழா, படத்தின் அறிமுக விழா போன்றவை கெமிஸ்ட்ரி கொலு வீற்றிருக்கும் இடங்கள். ஞஇந்தப் படத்துல ஹீரோ, ஹீரோயினோட கெமிஸ்ட்ரி செமையா வொர்க் அவுட் ஆகியிருக்கு என இயக்குனர்கள் பூரிப்பார்கள்;.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் கெமிஸ்ட்ரியை இம்போசிஷன் செய்ததில், கெமிஸ்ட்ரிக்கும் அவருக்கும் வொர்க் அவுட்டாகி, கலா மாஸ்டரின் பரம்பரை சொத்து போலிருக்கிறது, அதை நாம் பயன்படுத்தி, பேடண்ட் உரிமை அது இதுவென வழக்கு போட்டால்...? எதற்கு வம்பு என சினிமாக்காரர்கள் இப்போதெல்லாம் அதிகமாக கெமிஸ்ட்ரியாவதில்லை.

தாங்க்ஸ் கலா மாஸ்டர்.


5. மக்கள்

ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், நமது டாப் 10 ல் இதற்குத்தான் முதலிடம். தமிழ் சினிமாவுக்கு வெளியேயும் சகல மரியாதையுடன் வலம் வரக்கூடியது. அதிக நுகர்வோரின் ஆதரவு தேவைப்படும் வியாபாரங்களில் - சினிமா, அரசியல் முதலானவை - இதற்குத்தான் பரிவட்டம், முதல் மரியாதை எல்லாம். ஜனங்கள், பொதுமக்கள் என்று வெவ்வேறு பெயர்களிலும் இது சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களை என்டர்டெயின் செய்வதுதான் என்னுடைய வேலை, மக்களுக்காகதான் படம் எடுக்கிறேன், மக்கள் என்னை நடிகனாக அங்கீகரித்திருக்கிறார்கள் என மக்களுக்காக பிறந்து மக்களுக்காக வளர்ந்து மக்களுக்காக உழைத்து மரணிக்கும் தியாகிகளால் நிரம்பியது தமிழ் சினிமா. இவர்கள் பெரும்பாலும் பிரயோகிக்கும் ஆயுதம், மக்கள்.

இந்த ஆயுதத்தை எதிரிகளின் முன்னால் சும்மா வீசினால் போதும், எதிரி தொலைந்தான். உதாரணமாக, "நான் படம் நடிப்பது மக்களுக்காகதானே தவிர விமர்சகர்களுக்காக இல்லை" என்று ஒரு நடிகன் சொன்னால், டமார்... அடுத்தகணம் விமர்சகன் காலி. "மக்களின் அங்கீகாரம்தான் எனக்கு மிகப்பெரிய விருது" டமார்... விருது காலி.

இப்படி விமர்சகன், விருதை மட்டுமில்லை யாரை வேண்டுமானாலும் காலி செய்யலாம். "விவசாயிகள் தண்ணீருக்காக சாலை மறியல் பொதுமக்கள் அவதி" என்று விவசாயிகளையும், "ஓட்டுநர்கள் உண்ணாவிரதம், பேருந்தின்றி மக்கள் தவிப்பு" என ஓட்டுநர்களையும்கூட கட்டம் கட்டலாம். இப்போது இயல்பாகவே ஒரு கேள்வி வரும். விமர்சகன், ஓட்டுநர்கள், விவசாயிகள் எல்லாம் மக்கள் கிடையாதா? அப்படியானால் மக்கள் என்பது யாரை குறிக்கிறது?

கலைடாஸ்கோப்பின் வர்ணஜாலம் எப்படி ஒரு மாயையோ அதேபோலதான் இந்த மக்கள் என்ற வார்த்தையும். செட்டப் செய்யப்பட்ட மாயை. கலைடாஸ்கோப்பை பிரித்தால் சில கண்ணாடி சில்களும், நாலைந்து வளையல் துண்டுகளும் கிடைக்கும். மக்களையும் பிரித்துவிட வேண்டும். எப்படி? விவசாயிகள், ஆசிரியர்கள், கிரிமினல்கள், ஊழல் அரசியல்வாதிகள், மிகப்பெரிய ஊழல் அரசியல்வாதிகள், ஐடி அலுவலர்கள், சாக்கடை சரி செய்பவர்கள், சாலை போடுகிறவர்கள், சாமிக்கு தீபம் காட்டுகிறவர்கள், சாமியே இல்லை என்பவர்கள், இடைத் தரகர்கள், காசுக்கு உடலை விற்பவர்கள், அவர்களுக்கு ஆள் பிடிக்கும் மாமாக்கள்...

ரயிலை காலில் கயிறு கட்டி நிறுத்தும் ஹீரோவிடம், ஏன் சார் இப்படி என்றால், மக்களுக்கு என் படம் பிடிச்சிருக்கு என்பார். சரி, எந்த மக்கள்? கட் அவுட்டுக்கு பால் ஊத்துகிறவன், விசிலடிச்சான் குஞ்சு போன்றவர்கள்தானே? பாருங்கள்... மக்கள் என்று சொல்லும் போது கிடைக்கும் அந்த மாய கௌரவம் அவர்களை பிரித்து சொல்லும் போது எப்படி நிறமிழந்து போகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விருது, நாலு ஜுரிகள் தேர்வு செய்து தரும் விருதைவிட சிறந்தது என்று சொல்லும் போது கேட்க நன்றாகதான் இருக்கிறது. ஆனால் எந்த மக்கள் தேர்வு செய்தது? கட் அவுட்டுக்கு பால் ஊத்துகிறவன், ரிலீஸ் அன்று ஐம்பது ரூபாய் டிக்கெட்டை ஐநூறுக்கு வாங்கிப் பார்ப்பவன்... இவர்களைவிட அனுபம் கேர், ஷியாம் பெனகல் போன்ற ஜுரிகளின் ரசனை மோசமானதா?

மக்கள் என்ற வார்த்தை பெரும்பாலும் பெரும்பான்மையினர் என்ற அர்த்தத்தை ஒட்டியே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நடிகன், மக்கள் என்னுடைய படத்தை ரசிக்கிறார்கள் என்பது, பெரும்பான்மையினர் என்னுடைய படத்தை ரசிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில்தான். வசூல்ரீதியாக வெற்றி பெற்ற படத்தை விமர்சிக்கையில் வரும் முதல் எதிர்வினை, நீ என்ன வேணா எழுதிக்கோ, படம் சூப்பராக போய்கிட்டிருக்கு, மக்களுக்கு பிடிச்சிருக்கு என்பதாகதான் இருக்கும்.

பெரும்பான்மையினர் அங்கீகரித்தால் அதுதான் சரி என்பது அடிப்படை இல்லாத வாதம். சினிமா தவிர்த்து வேறு எதிலும், யாரும் இதனை பின்பற்றுவதுமில்லை. அதிமுக பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சி அமைத்ததால் கருணாநிதியைவிட ஜெயலலிதாதான் சிறந்த தலைவர் என்று எந்த திமுக காரனும் ஒப்புக் கொள்வதில்லை. உலகில் அதிகமானோர் பின்பற்றுவது கிறிஸ்தவத்தை என்பதால் அவர்தான் உண்மையான கடவுள் என்று இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் பிற மதத்தினர் ஒப்புக் கொள்வார்களா? எனில் சினிமாவில் மட்டும் பெரும்பான்மைக்கு ஏன் கட்டுப்பட வேண்டும்?

நடிகன், அரசியல்வாதி, ரசிகன், தொண்டன் என யாராக இருந்தாலும் தங்களின் பலவீனத்தை மறைக்கவும், தங்களின் தேர்வை நியாயப்படுத்தவுமே மக்கள் என்ற பதத்தை பயன்படுத்துகிறார்கள். மக்கள் என்ற கலர்பேப்பரில் பொதிந்து தரும்போது ரயிலை கயிறு கட்டி நிறுத்தியதையும், தொப்புளில் ஆம்லெட் போட்டதையும், ஒரு ரூபாயில் பல ஆயிரம் கோடி சம்பாதிப்பதையும் தமிழ் சினிமாவால் நியாயப்படுத்த முடிகிறது. நமது ரசனையை மேம்படுத்தாதவரை உலகமகா அபத்தங்களையும், மக்களுக்கு பிடிச்சிருக்கு என்று சொல்லியே நமது தலையில் கட்டுவார்கள். மேலும், அடுத்தமுறை யாராவது மக்கள் என்று சொல்லும் போது எந்த மக்கள் என்று உஷாராக கேளுங்கள். சொந்த ரத்தத்தில் பிறந்த மக்களாகவும் இருக்கலாம்.


4. எளிமை

சினிமாவில் இதுவொரு மங்களகரமான ஜால்ரா வாத்தியம். எங்கும் அடிக்கலாம், யாருக்கும் அடிக்கலாம். அதன் சத்தம் பெரும்பாலும், "எவ்ளோ பெரிய ஸ்டாரு, எப்படி இருப்பாரோன்னு நினைச்சேன். ஆனா மனுசன் ரொம்ப எளிமைங்க" என்பதாக இருக்கும். காந்தியே எட்டிதான் நிற்கணும். அவர்கள் எளிமையை பேணுகிற விதமே தனி. பயணிப்பது ஒன்று ஒன்றரை கோடி மதிப்புள்ள காரில், ரெஸ்ட் எடுப்பது தினம் பத்தாயிரம் வாடகை தரும் கேரவனில், கோழிக்கு ஒரு ஹோட்டல் (பைவ் ஸ்டார் அவசியம்) குழம்புக்கு ஒரு ஹோட்டால், சோறுக்கு ஒரு ஹோட்டல். தலைவர் கவுண்டரி ன் பாஷையில் சொன்னால் எளிமையோ... எளிமை.

ஆட்டோ, பேருந்துகளில் பயணிக்கும் ஆடம்பரவாசிகள் இந்த எளிமை கிளப்பில் இடம்பெற முடியாது. குறைந்தபட்சம் ஒரு பிஎம்டபுள்யூ வாவது வேண்டும். ஹம்மர், ரோல்ஸ் ராய்ஸ் என்றால் (இனி வருவதை, அந்த குழந்தையே நீங்கதான் மாடுலேஷனில் வாசிக்கவும்) அந்த எளிமையே நீங்கதான்.

காமராஜரையும் கக்கனையும் எளிமைன்னு சொல்றக்ங்க, இவங்களையும் எளிமைன்னு சொல்றாங்க. அப்படீன்னா இந்த எளிமைங்கிறது என்ன என்பதை கண்டறிய செம்மொழிதுறையில் புதிதாக எளிமை துறை ஒன்று மிக எளிமையான முறையில் திறக்கப்பட உள்ளது.

நல்லவேளையாக இந்த நவீன எளிமைகளை தரிசிக்கிற பாக்கியம் காந்திக்கும், காமராஜருக்கும் கிட்டவில்லை, லக்கி கைய்ஸ்.


3. இதுதான் பெஸ்ட்

தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து மாதிரிதான் இந்த, 'இதுதான் பெஸ்டங' பாடலும். படத்தின் புரமோஷன் தினத்தில் இந்த பாடலை புராதன கிராமபோனில் நடிகர்கள் ஒலிக்கவிடுவார்கள்.

'இந்தப் படம்தான் நான் நடிச்சதிலேயே பெஸ்ட்... லலலலா...
இந்தப் படத்துக்கு கஷ்டப்பட்டது போல் எந்தப் படத்துக்கும் கஷ்டப்பட்டதில்லை... லலலலா...'

இரண்டே வாப்கள். அடுத்தடுத்தப் படங்களின் ப்ரமோஷனில் இதே வரிகளை ஒலிக்கவிட்டு காதில் ரத்தம் எடுப்பார்கள்.


2. உண்மைச் சம்பவம்

படத்தை அறிமுகப்படுத்தும் போது, வாய்ஸை குறைத்து சீரியஸ் பாவனையில், "இதுவொரு உண்மைச் சம்பவங்க" என்பார்கள். அவங்க உண்மையைத் தவிர வேற எதையும் எடுப்பதில்லை. உயர்தர உண்மைகள் மட்டுமே பரிமாறப்படும். அப்படி என்ன உண்மைங்க? சமீபத்தில் ஒரு உயர்தர உண்மை சப்ளையரிடம் கேட்ட போது இப்படி சொன்னார். 'ரவுடி ஒருத்தன் ஒரு பொண்ணால திருந்துறான் சார்.'

தமிழ் சினிமாவில் பொண்ணாலதான் ரவுடி திருந்துவான், போலீஸ் அடிச்சா திருந்துவான்.

இதேபோன்று ரவுடியை கொல்லும் ரவுடி, ரவுடியால் சாகும் ரவுடி, ரவுடிக்கு ரவுடி மற்றும் ரவுடியோ ரவுடி போன்ற உண்மைச் சம்பவ சப்ளையர்கள் கோடம்பாக்கத்தில் குறைவில்லாமல் இருக்கிறார்கள். ஹோல்சேலுக்கு இயக்குனர் சஞ்சய் ராம்.


1. வித்தியாசம்

லூமியர் சகோதரர்கள் சினிமாவுக்கான முயற்சியில் இறங்கிய காலகட்டத்திலேயே இந்த வார்த்தை கோடம்பாக்கத்தில் முளைவிட தொடங்கியதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைகின்றனர். கதை, நடிப்பு, இசை என்று எதுவுமில்லாத பாலைவனச்சூழலிலும், இந்த அனைத்துமே சீரழிந்துப்போன சதுப்புநிலங்களிலும்கூட இது செழித்து வளரக் கூடியது.

இதுவொரு வித்தியாசமான கதைங்க... உண்மையிலேயே இது வித்தியாசமான படம்... பைட்டை டிபரண்டா எடுத்திருக்கோம்... ஆக்சுவலி படத்துல வித்தியாசமான ஒரு பாடல் வருது... டோட்டலி டிபரண்ட் லொகேஷன்... வித்தியாசமா ஒரு கெட்டப் ட்ரை பண்ணியிருக்கோம்...

இப்படி எல்லாவிதங்களிலும் கதற கதற அடிப்பதால், தங்களின் வித்தியாசத்தை வித்தியாசப்படுத்திக் காட்ட, "எல்லோரும் வித்தியாசமான கதைன்னு சொல்வாங்க. பட் எங்களோடது உண்மையிலேயே வித்தியாசமான கதைங்க" என்று உண்மையான வித்தியாசம், வித்தியாசத்தில் வித்தியாசம், இதுதான்டா வித்தியாசம் என வித்தியாசத்துக்கு பல விழுதுகளும்கூட இறங்கிவிட்டது. வளர்ப்பானேன். அதிக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வார்த்தை என போலீஸ் ரிக்கார்ட்லேயே பதித்திருக்கிறார்கள். 

நாய்கள் ஜாக்கிரதை, திருடர்கள் ஜாக்கிரதை... 

வித்தியாசம் ஜாக்கிரதை.

நன்றி; இணையம்