Thursday 20 March 2014

சந்திரபாபுவை ஏழையாக்கிய மாடி வீட்டு ஏழை


ஒரு சிலருக்கே ஆண்டவன் தனித்துவமான குரல் வளத்தையும், நடனம் ஆடும் ஆற்றலை இறைவன் வழங்கி இருப்பான். அவ்வாறு இரண்டையும் ஒரு சேர பெற்றவர் தான் சந்திரபாபு. அவரது பாட்டிற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவர் பாடிய அனேக பாடல்கள் எல்லாம் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கும். அவரது நடனமும் தனித்துவம் வாய்ந்தது. அது மட்டும் இல்லாமல் நகைச்சுவையில் பின்னி எடுப்பார். நகைச்சுவையால் பலரை மகிழ்வித்த அவரது சொந்த வாழ்க்கை மிக சோகமானது. அவரை பற்றிய ஒரு நினைவு பதிவு.


சந்திரபாபு எம்.‌ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை படத்தை தயா‌ரித்த போது சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார். முதல் மாடிவரை கார் போவது போன்று வடிவமைக்கப்பட்ட வீடு. வீடு பாதியில் நிற்கும் போது படமும் பாதியில் நின்றது. நாயகிக்கு நடிக்க தெ‌ரியலை, ஆளை மாற்று என்றார் எம்.‌ஜி.ஆர். எழுபது சதவீதம் படம் முடிந்த பிறகு எப்படி மாற்றுவது? - இது சந்திரபாபு. ஆளை மாற்றினால்தான் ஆச்சு என்று எம்.‌ஜி.ஆர். அடம்பிடிக்க, எடுத்தவரைக்குமான ஃபிலிம்களை தீயிட்டு கொளுத்தினார் சந்திரபாபு.


அவருக்கு பைனான்ஸ் செய்தவர்களும் பெரிய இடத்து பிரஷர் காரணமாக சந்திரபாபுவை நெருக்க, அவர் ஆசையோடு கட்டி வந்த வீடு கடன்காரர்களின் கைக்கு போனது. அப்படி மாடி வீட்டு ஏழையை தயா‌ரித்து, ஏழையானார் சந்திரபாபு.


மேற்கத்திய கலாச்சார பாதிப்பில் வளர்ந்தவர் சந்திரபாபு. அண்ணே என்று பவ்யமாக மற்றவர்கள் எம்.‌ஜி.ஆரை சுற்றி நிற்க, கால் மேல் கால் போட்டு மிஸ்டர் ராமச்சந்திரன் என்று பெயர் சொல்லிதான் அழைப்பாராம் சந்திரபாபு. அவரை மட்டுமில்லை, சிவா‌ஜி கணேசனும் அவருக்கு மிஸ்டர் கணேசன்தான்.

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...

சந்திரபாபு புத்திசாலி.