தமிழ் சினிமாவில் சில வார்த்தைகளை வகைதொகையில்லாமல் பயன்படுத்தி அந்த வார்த்தையை கேட்டாலே பேதியாகிற அளவுக்கு செய்துவிட்டார்கள். புரட்சி என்று சொன்னால் சே குவேராவே நடுங்குகிற அளவுக்கு தமிழ் சினிமா முழுக்க புரட்சியாளர்கள். இப்படி பட்டறை இரும்பாக அடிபட்ட சில 'கெட்ட' வார்த்தைகளை தொகுத்துப் பார்க்கலாமே என்று ஒரு அசட்டு ஆசை. புரட்சியிலிருந்தே தொடங்குவோம்.
10. புரட்சி
இந்த பரந்த பூமியில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே புரட்சியாளர்கள் இருப்பதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் தடுக்கினால் ஏதாவது புரட்சிக்காரர் மீதுதான் விழவேண்டும். சமயத்தில் தடுக்கியவரும், தடுத்தவரும் புரட்சியாளராக இருப்பதுண்டு. சாலிக்கிராமத்தில் ஐவரில் ஒருவர் புரட்சிக்காரர் என்கிறது புள்ளி விவரம்.
புரட்சி கலைஞர், புரட்சி தமிழர், புரட்சி தளபதி, புரட்சி இயக்குனர் என உயர்திணையிலும் புரட்சிகரமான கதை, புரட்சிகரமான இயக்கம், புரட்சிகரமான நடிப்பு, புரட்சிகரமான வசனம் என அஃறிணையிலும் சினிமாவில் புரட்சி நொதித்துக் கொண்டிருக்கிறது.
இந்த இட நெருக்கடி காரணமாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் புரட்சி குறித்த அதிருப்தி தெரிகிறது (முன்னோர்கள் தேய்த்த தேய்ப்பு அப்படி). ஒருகாலத்தில் ஓகோவென்றிருந்த புரட்சியின் மகத்துவம் இப்போது குறைந்து வருவதை - ஒருவகையில் புரட்சி என்றுதான் கூற வேண்டும்.
9. ஜானர்
வெளிநாடுகளில் நிழல் உலகத்தைப் பற்றி படம் எடுத்தால் அந்த உலகத்தை தாண்ட மாட்டார்கள். காமெடி என்றால் அது மட்டுமே இருக்கும். அப்படிதான் ஆக்ஷன், ரொமான்டிக் எல்லாம். அதனால் ஜானர் என்ற சொல்லுக்கு அங்கு அர்த்தம் உண்டு.
தமிழுக்கு ஜானர் புத்தம் புதிய வெளியீடு. நியூ ரிலீஸ். இப்பொழுதுதான் பேசி பழகுகிறார்கள். இரண்டு உதவி இயக்குனர்கள் (அல்லது இயக்குனர்கள்) சந்தித்தால் என்ன கதை என்று கேட்பதில்லை. என்ன ஜானர்? இதுதான் இப்போது பேஷன்.
சமீபத்தில் இரண்டு இயக்குனர்கள் பேசியதை கேட்க நேர்ந்தது.
"கையிலே என்ன ஜானர் வச்சிருக்கீங்க"
"ரொமான்டிக்"
"இப்போ காமெடிதான் போகுது"
"அதுவும் இருக்கு" பிரபலமான காமெடியன் ஒருவாpன் பெயரைச் சொல்லி, "அவர் மெயின் ரோல் பண்றார்."
"அப்ப சரி. பைட்?"
"நாலு வச்சிருக்கேன்"
இப்படி அவரின் ரொமான்டிக் ஜானாரில் காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் என எல்லா ஜானர்களும் உண்டு. உலகில் எங்கு ஜானர் அழிந்தாலும் தமிழில் வாழ்வாங்கு வாழும்.
8. ட்ரெண்ட் செட்டர்
ஆர்வ மிகுதியில் (கோளாறு என்றும் சொல்லலாம்) இருப்பவர்கள் அடிக்கடி உபயோகிக்கும் சொல். இவர்களை தனித்து அடையாளம் காணலாம். கூண்டிலிட்ட கரடியாக ஒரே இடத்தில் அலைபாய்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் கடைசியாகப் பார்த்த படம் அனேகமாக தில்லானா மோகனாம்பாளாக இருக்கும்.
பெரும்பாலான இயக்குனர்கள் இந்த கட்டத்தை தாண்டியவர்கள். கூச்சம் கருதி ட்ரெண்ட் செட்டர் என்ற வார்த்தையை தவிர்த்தாலும் அவர்களின் நண்பர்கள் (உண்மையில் இவர்கள்தான் நிஜ எதிரிகள்) அவரோட படம் ஒரு ட்ரெண்ட் செட்டர் என்று சம்பந்தப்பட்டவர்களை பொது மேடைகளில் நெளிய வைப்பார்கள்.
இவர்கள் ட்ரெண்ட் செட்டர் என குறிப்பிடும் படங்களைப் பார்த்து, இவர்கள் ட்ரெண்ட் செட்டரை சொல்கிறார்களா இல்லை டெண்ட் கொட்டாயை சொல்கிறார்களா என்று வரலாற்றாய்வாளர்கள் திரிபு மயக்கம் கொள்வதுண்டு.
7. கதைக்கேற்ற கிளாமர்
உலகில் அர்த்தம் கண்டுபிடிக்கப்படாத எட்டு வார்த்தைகளில் ஒன்றாக ஹார்வர்ட் பல்கலை இதனை வகைப்படுத்தியிருக்கிறது. காத்து கருப்பு மாதிரி எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய விஷயம். கோடம்பாக்கத்தில் சித்த சுவாதீனமில்லாமல் திரிகிறவர்களில் சமபாதி பேர் இந்த வார்த்தைக்கு அர்த்தம் தேடி புறப்பட்டவர்கள்.
நடிகையின் வாழ்வியலை வைத்து இதற்கு ஏகதேசமாக ஒரு மேப் வரைந்திருக்கிறார்கள்.
நடிகை அறிமுகமாகும் போது கெடுபிடி அதிகமிருக்கும். அப்போது கதைக்கேற்ற கிளாமர் என்பது கணுக்காலை தாண்டாது.
நான்கைந்து படங்கள் முடியும் போது, கதைக்கேற்ற கிளாமர் முட்டிக்கு மேல் ஏறி நிற்கும்.
அதன் பிறகு பாய்மரப் படகின் பாயை சுருட்டி மேலேற்றிய கதைதான். கதைக்கேற்ற கிளாமர் அப்போது எதற்கேற்ற மாதிரியும் மாறியிருக்கும். இந்த வார்த்தை அர்த்தம் இழக்க ஆரம்பிப்பதே அந்த இடத்தில்தான் என மொழியியலாளர்கள் சுட்டுகின்றனர்.
6. கெமிஸ்ட்ரி
சினிமா ஒரு விஞ்ஞானம் என்பதால், எதற்கும் இருக்கட்டும் என பெயர் தெரியாத ஏதோ புண்ணியவான் வேதியலை இழுத்துவிட்டிருக்கிறhர். இசை வெளியீட்டு விழா, படத்தின் அறிமுக விழா போன்றவை கெமிஸ்ட்ரி கொலு வீற்றிருக்கும் இடங்கள். ஞஇந்தப் படத்துல ஹீரோ, ஹீரோயினோட கெமிஸ்ட்ரி செமையா வொர்க் அவுட் ஆகியிருக்கு என இயக்குனர்கள் பூரிப்பார்கள்;.
மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் கெமிஸ்ட்ரியை இம்போசிஷன் செய்ததில், கெமிஸ்ட்ரிக்கும் அவருக்கும் வொர்க் அவுட்டாகி, கலா மாஸ்டரின் பரம்பரை சொத்து போலிருக்கிறது, அதை நாம் பயன்படுத்தி, பேடண்ட் உரிமை அது இதுவென வழக்கு போட்டால்...? எதற்கு வம்பு என சினிமாக்காரர்கள் இப்போதெல்லாம் அதிகமாக கெமிஸ்ட்ரியாவதில்லை.
தாங்க்ஸ் கலா மாஸ்டர்.
5. மக்கள்
ஐந்தாவது இடத்தில் இருந்தாலும், நமது டாப் 10 ல் இதற்குத்தான் முதலிடம். தமிழ் சினிமாவுக்கு வெளியேயும் சகல மரியாதையுடன் வலம் வரக்கூடியது. அதிக நுகர்வோரின் ஆதரவு தேவைப்படும் வியாபாரங்களில் - சினிமா, அரசியல் முதலானவை - இதற்குத்தான் பரிவட்டம், முதல் மரியாதை எல்லாம். ஜனங்கள், பொதுமக்கள் என்று வெவ்வேறு பெயர்களிலும் இது சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களை என்டர்டெயின் செய்வதுதான் என்னுடைய வேலை, மக்களுக்காகதான் படம் எடுக்கிறேன், மக்கள் என்னை நடிகனாக அங்கீகரித்திருக்கிறார்கள் என மக்களுக்காக பிறந்து மக்களுக்காக வளர்ந்து மக்களுக்காக உழைத்து மரணிக்கும் தியாகிகளால் நிரம்பியது தமிழ் சினிமா. இவர்கள் பெரும்பாலும் பிரயோகிக்கும் ஆயுதம், மக்கள்.
இந்த ஆயுதத்தை எதிரிகளின் முன்னால் சும்மா வீசினால் போதும், எதிரி தொலைந்தான். உதாரணமாக, "நான் படம் நடிப்பது மக்களுக்காகதானே தவிர விமர்சகர்களுக்காக இல்லை" என்று ஒரு நடிகன் சொன்னால், டமார்... அடுத்தகணம் விமர்சகன் காலி. "மக்களின் அங்கீகாரம்தான் எனக்கு மிகப்பெரிய விருது" டமார்... விருது காலி.
இப்படி விமர்சகன், விருதை மட்டுமில்லை யாரை வேண்டுமானாலும் காலி செய்யலாம். "விவசாயிகள் தண்ணீருக்காக சாலை மறியல் பொதுமக்கள் அவதி" என்று விவசாயிகளையும், "ஓட்டுநர்கள் உண்ணாவிரதம், பேருந்தின்றி மக்கள் தவிப்பு" என ஓட்டுநர்களையும்கூட கட்டம் கட்டலாம். இப்போது இயல்பாகவே ஒரு கேள்வி வரும். விமர்சகன், ஓட்டுநர்கள், விவசாயிகள் எல்லாம் மக்கள் கிடையாதா? அப்படியானால் மக்கள் என்பது யாரை குறிக்கிறது?
கலைடாஸ்கோப்பின் வர்ணஜாலம் எப்படி ஒரு மாயையோ அதேபோலதான் இந்த மக்கள் என்ற வார்த்தையும். செட்டப் செய்யப்பட்ட மாயை. கலைடாஸ்கோப்பை பிரித்தால் சில கண்ணாடி சில்களும், நாலைந்து வளையல் துண்டுகளும் கிடைக்கும். மக்களையும் பிரித்துவிட வேண்டும். எப்படி? விவசாயிகள், ஆசிரியர்கள், கிரிமினல்கள், ஊழல் அரசியல்வாதிகள், மிகப்பெரிய ஊழல் அரசியல்வாதிகள், ஐடி அலுவலர்கள், சாக்கடை சரி செய்பவர்கள், சாலை போடுகிறவர்கள், சாமிக்கு தீபம் காட்டுகிறவர்கள், சாமியே இல்லை என்பவர்கள், இடைத் தரகர்கள், காசுக்கு உடலை விற்பவர்கள், அவர்களுக்கு ஆள் பிடிக்கும் மாமாக்கள்...
ரயிலை காலில் கயிறு கட்டி நிறுத்தும் ஹீரோவிடம், ஏன் சார் இப்படி என்றால், மக்களுக்கு என் படம் பிடிச்சிருக்கு என்பார். சரி, எந்த மக்கள்? கட் அவுட்டுக்கு பால் ஊத்துகிறவன், விசிலடிச்சான் குஞ்சு போன்றவர்கள்தானே? பாருங்கள்... மக்கள் என்று சொல்லும் போது கிடைக்கும் அந்த மாய கௌரவம் அவர்களை பிரித்து சொல்லும் போது எப்படி நிறமிழந்து போகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விருது, நாலு ஜுரிகள் தேர்வு செய்து தரும் விருதைவிட சிறந்தது என்று சொல்லும் போது கேட்க நன்றாகதான் இருக்கிறது. ஆனால் எந்த மக்கள் தேர்வு செய்தது? கட் அவுட்டுக்கு பால் ஊத்துகிறவன், ரிலீஸ் அன்று ஐம்பது ரூபாய் டிக்கெட்டை ஐநூறுக்கு வாங்கிப் பார்ப்பவன்... இவர்களைவிட அனுபம் கேர், ஷியாம் பெனகல் போன்ற ஜுரிகளின் ரசனை மோசமானதா?
மக்கள் என்ற வார்த்தை பெரும்பாலும் பெரும்பான்மையினர் என்ற அர்த்தத்தை ஒட்டியே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நடிகன், மக்கள் என்னுடைய படத்தை ரசிக்கிறார்கள் என்பது, பெரும்பான்மையினர் என்னுடைய படத்தை ரசிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில்தான். வசூல்ரீதியாக வெற்றி பெற்ற படத்தை விமர்சிக்கையில் வரும் முதல் எதிர்வினை, நீ என்ன வேணா எழுதிக்கோ, படம் சூப்பராக போய்கிட்டிருக்கு, மக்களுக்கு பிடிச்சிருக்கு என்பதாகதான் இருக்கும்.
பெரும்பான்மையினர் அங்கீகரித்தால் அதுதான் சரி என்பது அடிப்படை இல்லாத வாதம். சினிமா தவிர்த்து வேறு எதிலும், யாரும் இதனை பின்பற்றுவதுமில்லை. அதிமுக பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சி அமைத்ததால் கருணாநிதியைவிட ஜெயலலிதாதான் சிறந்த தலைவர் என்று எந்த திமுக காரனும் ஒப்புக் கொள்வதில்லை. உலகில் அதிகமானோர் பின்பற்றுவது கிறிஸ்தவத்தை என்பதால் அவர்தான் உண்மையான கடவுள் என்று இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் பிற மதத்தினர் ஒப்புக் கொள்வார்களா? எனில் சினிமாவில் மட்டும் பெரும்பான்மைக்கு ஏன் கட்டுப்பட வேண்டும்?
நடிகன், அரசியல்வாதி, ரசிகன், தொண்டன் என யாராக இருந்தாலும் தங்களின் பலவீனத்தை மறைக்கவும், தங்களின் தேர்வை நியாயப்படுத்தவுமே மக்கள் என்ற பதத்தை பயன்படுத்துகிறார்கள். மக்கள் என்ற கலர்பேப்பரில் பொதிந்து தரும்போது ரயிலை கயிறு கட்டி நிறுத்தியதையும், தொப்புளில் ஆம்லெட் போட்டதையும், ஒரு ரூபாயில் பல ஆயிரம் கோடி சம்பாதிப்பதையும் தமிழ் சினிமாவால் நியாயப்படுத்த முடிகிறது. நமது ரசனையை மேம்படுத்தாதவரை உலகமகா அபத்தங்களையும், மக்களுக்கு பிடிச்சிருக்கு என்று சொல்லியே நமது தலையில் கட்டுவார்கள். மேலும், அடுத்தமுறை யாராவது மக்கள் என்று சொல்லும் போது எந்த மக்கள் என்று உஷாராக கேளுங்கள். சொந்த ரத்தத்தில் பிறந்த மக்களாகவும் இருக்கலாம்.
4. எளிமை
சினிமாவில் இதுவொரு மங்களகரமான ஜால்ரா வாத்தியம். எங்கும் அடிக்கலாம், யாருக்கும் அடிக்கலாம். அதன் சத்தம் பெரும்பாலும், "எவ்ளோ பெரிய ஸ்டாரு, எப்படி இருப்பாரோன்னு நினைச்சேன். ஆனா மனுசன் ரொம்ப எளிமைங்க" என்பதாக இருக்கும். காந்தியே எட்டிதான் நிற்கணும். அவர்கள் எளிமையை பேணுகிற விதமே தனி. பயணிப்பது ஒன்று ஒன்றரை கோடி மதிப்புள்ள காரில், ரெஸ்ட் எடுப்பது தினம் பத்தாயிரம் வாடகை தரும் கேரவனில், கோழிக்கு ஒரு ஹோட்டல் (பைவ் ஸ்டார் அவசியம்) குழம்புக்கு ஒரு ஹோட்டால், சோறுக்கு ஒரு ஹோட்டல். தலைவர் கவுண்டரி ன் பாஷையில் சொன்னால் எளிமையோ... எளிமை.
ஆட்டோ, பேருந்துகளில் பயணிக்கும் ஆடம்பரவாசிகள் இந்த எளிமை கிளப்பில் இடம்பெற முடியாது. குறைந்தபட்சம் ஒரு பிஎம்டபுள்யூ வாவது வேண்டும். ஹம்மர், ரோல்ஸ் ராய்ஸ் என்றால் (இனி வருவதை, அந்த குழந்தையே நீங்கதான் மாடுலேஷனில் வாசிக்கவும்) அந்த எளிமையே நீங்கதான்.
காமராஜரையும் கக்கனையும் எளிமைன்னு சொல்றக்ங்க, இவங்களையும் எளிமைன்னு சொல்றாங்க. அப்படீன்னா இந்த எளிமைங்கிறது என்ன என்பதை கண்டறிய செம்மொழிதுறையில் புதிதாக எளிமை துறை ஒன்று மிக எளிமையான முறையில் திறக்கப்பட உள்ளது.
நல்லவேளையாக இந்த நவீன எளிமைகளை தரிசிக்கிற பாக்கியம் காந்திக்கும், காமராஜருக்கும் கிட்டவில்லை, லக்கி கைய்ஸ்.
3. இதுதான் பெஸ்ட்
தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்து மாதிரிதான் இந்த, 'இதுதான் பெஸ்டங' பாடலும். படத்தின் புரமோஷன் தினத்தில் இந்த பாடலை புராதன கிராமபோனில் நடிகர்கள் ஒலிக்கவிடுவார்கள்.
'இந்தப் படம்தான் நான் நடிச்சதிலேயே பெஸ்ட்... லலலலா...
இந்தப் படத்துக்கு கஷ்டப்பட்டது போல் எந்தப் படத்துக்கும் கஷ்டப்பட்டதில்லை... லலலலா...'
இரண்டே வாப்கள். அடுத்தடுத்தப் படங்களின் ப்ரமோஷனில் இதே வரிகளை ஒலிக்கவிட்டு காதில் ரத்தம் எடுப்பார்கள்.
2. உண்மைச் சம்பவம்
படத்தை அறிமுகப்படுத்தும் போது, வாய்ஸை குறைத்து சீரியஸ் பாவனையில், "இதுவொரு உண்மைச் சம்பவங்க" என்பார்கள். அவங்க உண்மையைத் தவிர வேற எதையும் எடுப்பதில்லை. உயர்தர உண்மைகள் மட்டுமே பரிமாறப்படும். அப்படி என்ன உண்மைங்க? சமீபத்தில் ஒரு உயர்தர உண்மை சப்ளையரிடம் கேட்ட போது இப்படி சொன்னார். 'ரவுடி ஒருத்தன் ஒரு பொண்ணால திருந்துறான் சார்.'
தமிழ் சினிமாவில் பொண்ணாலதான் ரவுடி திருந்துவான், போலீஸ் அடிச்சா திருந்துவான்.
இதேபோன்று ரவுடியை கொல்லும் ரவுடி, ரவுடியால் சாகும் ரவுடி, ரவுடிக்கு ரவுடி மற்றும் ரவுடியோ ரவுடி போன்ற உண்மைச் சம்பவ சப்ளையர்கள் கோடம்பாக்கத்தில் குறைவில்லாமல் இருக்கிறார்கள். ஹோல்சேலுக்கு இயக்குனர் சஞ்சய் ராம்.
1. வித்தியாசம்
லூமியர் சகோதரர்கள் சினிமாவுக்கான முயற்சியில் இறங்கிய காலகட்டத்திலேயே இந்த வார்த்தை கோடம்பாக்கத்தில் முளைவிட தொடங்கியதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமடைகின்றனர். கதை, நடிப்பு, இசை என்று எதுவுமில்லாத பாலைவனச்சூழலிலும், இந்த அனைத்துமே சீரழிந்துப்போன சதுப்புநிலங்களிலும்கூட இது செழித்து வளரக் கூடியது.
இதுவொரு வித்தியாசமான கதைங்க... உண்மையிலேயே இது வித்தியாசமான படம்... பைட்டை டிபரண்டா எடுத்திருக்கோம்... ஆக்சுவலி படத்துல வித்தியாசமான ஒரு பாடல் வருது... டோட்டலி டிபரண்ட் லொகேஷன்... வித்தியாசமா ஒரு கெட்டப் ட்ரை பண்ணியிருக்கோம்...
இப்படி எல்லாவிதங்களிலும் கதற கதற அடிப்பதால், தங்களின் வித்தியாசத்தை வித்தியாசப்படுத்திக் காட்ட, "எல்லோரும் வித்தியாசமான கதைன்னு சொல்வாங்க. பட் எங்களோடது உண்மையிலேயே வித்தியாசமான கதைங்க" என்று உண்மையான வித்தியாசம், வித்தியாசத்தில் வித்தியாசம், இதுதான்டா வித்தியாசம் என வித்தியாசத்துக்கு பல விழுதுகளும்கூட இறங்கிவிட்டது. வளர்ப்பானேன். அதிக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வார்த்தை என போலீஸ் ரிக்கார்ட்லேயே பதித்திருக்கிறார்கள்.
நாய்கள் ஜாக்கிரதை, திருடர்கள் ஜாக்கிரதை...
வித்தியாசம் ஜாக்கிரதை.
நன்றி; இணையம்