Saturday, 20 July 2013

புரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன்!


“You offended my family and offended the shaolin temple” என்று வில்லனை நோக்கி நிலைகுத்திய கூர்பார்வையுடன் கூறிவிட்டு, அவனோடு மோதுவதற்கு தயாராக, தனக்கே உரித்தான சண்டைத் துவக்க பாணியில் புரூஸ் லீ காலை விரித்துவைத்து, தனது கைகளை உயர்த்தியதும் திரையரங்குகிளில் விசில் சத்தம் காதைப் பிளந்தது.

எண்டர் த டிராகன் படத்தின் இறுதிக் காட்சியில் வில்லனைத் துரத்திக்கொண்டு புரூஸ் லீ துரத்திச் செல்ல, அவன் தனக்குப் பாதுகாப்பான கண்ணாடி அறைக்குள் புகுந்துவிட, மிக எச்சரிக்கையாக அவனை கண்டுபிடித்ததும், நேருக்கு நேர் பார்த்து இவ்வாறு கூறிவிட்டு அவர் செய்த சண்டைக் காட்சியை பார்த்த எந்த ரசிகனும் மறந்திருக்க முடியாது.

சென்னை ஆனந்த திரையரங்கில் எண்டர் த டிராகன் படம் வெளியிடப்பட்டபோது புரூஸ் லீ உயிரோடு இல்லை. 1976ஆம் ஆண்டில் இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால் புரூஸ் லீ 1973ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார் என்ற உண்மை அப்போது எந்த ரசிகருக்கும் தெரியாது.

ஓடு ஓடு என்று ஓடியது எண்டர் த டிராகன். முதல் தடவை திரையிடப்பட்டு 25 வாரங்கள் ஓடியதை விடுங்கள். மீண்டும் திரையிடப்பட்டபோது 100 நாட்கள் ஓடியது. இந்தியாவில் இந்தப்படம் வசூலைக் குவிக்காத நகரமே இல்லை என்றானது.

ஒரு சாதாரணக் கதைதான் (ஒரு விதத்தில் பழி வாங்கும் கதையும் கூட) எண்டர் த டிராகன். ஹாங்காங்கிற்கு அருகில் உள்ள ஹான்ஸ் தீவை சொந்தமாக வைத்துக்கொண்டு போதைப்பொருள் தயாரித்து அதனை உலகளாவிய அளவில் கடத்தி விற்றுவந்தவனை ஆதாரப்பூர்வமாக பிடிக்க முயன்ற ஹாங்காங் காவல்துறை பல உளவாளிகளை அனுப்புகிறது. அவர்களில் பலர் பெண்கள். ஓரளவிற்கு உண்மை தெரிகிறது. உண்மையை அறிந்து வெளியே செல்ல முயன்றவர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த நிலையில் - தற்காப்புக் கலையில் கைதேர்ந்த - அவனை முடிக்க தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கும் வீரனை தேர்ந்தெடுத்து அனுப்புகிறது ஹாங்காங் காவல் துறை. அவர்தான் புரூஸ் லீ.

ஹான்ஸ் தீவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தற்காப்பு கலைப் போட்டியில் பங்கேற்க புரூஸ் லீ அனுப்பப்படுகிறார். உலக அளவில் சிறந்த விளங்கிய கராத்தே, பாக்சிங் உள்ளிட்ட பல கலைகளில் சிறந்த வீரர்களும் கலந்துகொள்ள வருகின்றனர்.

போட்டியின் முதல் சுற்றிலேயே, தனது தங்கையை கற்பழித்துக் கொன்றவனும், வில்லனின் மெய்க்காப்பாளனுமாகிய கராத்தே வீரனை (பாப் வால்) தோற்கடிக்கிறார் (கண்ணிமைக்கும் நேரத்தில் குத்துகள் விழுகின்றன) புரூஸ் லீ. தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாத அவன் புரூஸ் லீயைக் கொல்ல பாட்டில்களை உடைத்துக்கொண்டு குத்துவதற்குப் பாய, அவனுடைய கழுத்தில் வெட்டு உதை கொடுத்து கொன்றுவிடுகிறார் புரூஸ் லீ. அவனைக் கொன்ற நிலையில், குரூர முகத்துடன் வில்லனை ஒரு பார்வையும் பார்த்துவிட்டுச் செல்வார். இந்தக் காட்சி திரையில் ஓடும்போது திரையரங்கில் மயான அமைதி நிலவியது.

வில்லனின் போதை சாம்ராஜ்யத்தின் ரகசியங்களை அறிந்துகொள்ள ஒவ்வொரு இரவும் புரூஸ் லீ ரகசிய உளவில் ஈடுபடுவதும், ஒரு நாள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அங்கிருந்த வில்லனின் காவலாளிகளைப் பந்தாடுவதும், ஏராளமானவர்களை தன்னைச் சூழ்ந்துவிட்ட நிலையில், தான் மறைத்து வைத்திருந்த நன் சாக்கு ஆயுதத்தை எடுத்து கையிலெடுத்து கண்ணில் பிடிபடாத வேகத்தில் சுழற்றுவதும், பிறகு அவர்களை அடித்து வீழ்த்திவிட்டு வில்லனிடம் சிறைபடுவதும் அபாரமான காட்சிகள். அதுவரை திரைப்பட ரசிகர்கள் பார்த்திராதவை.

அவர் பாம்பு ஒன்றைப் பிடித்து பைக்குள் அடக்கிக்கொள்வதும், தனக்கு ஒத்தாசையாக அதனைப் பயன்படுத்துவதும் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தின.

இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த கராத்தே வீரர் (ஜிம் கெல்லி) அருமையாக சண்டையிட்டு வெற்றி பெற்ற பிறகு வில்லனால் அடித்துக் கொல்லப்படுவதும், அதனைக் கண்டு மற்றொரு போட்டியாளர் (ஜான் சாக்சன்) மிரள்வதும் ரசிகர்களை அச்சுறுத்திய காட்சிகள்.

பிறகுதான் உச்சக் கட்டம். புரூஸ் லீயும், ஹான்ஸ் (இவர் புரூஸ் லீயின் மாமன்தான்) மோதல் காட்சி. துண்டிக்கப்பட்ட கையில் எஃகு ஆயுதங்களைத் தரித்து ஹான்ஸ் சண்டையிட, அதில் சிக்காமல் லாவகமாக விலகி அவரை புரூஸ் லீ அடித்து வீழத்த ஒன்றரை மணி நேரத்தில் படம் முடிந்துவிடுகிறது. பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தனர். 30 தடவைப் பார்த்தேன், 40 தடவைப் பார்த்தேன் என்று பெருமையாக செல்லிக்கொள்ளும் ரசிகர்கள் ஏராளம்.

இந்திய ரசிகர்கள் நெஞ்சில் புரூஸ் லீயின் வடிவமும், அவர் சண்டையிட்ட விதமும் மறையாமல் இன்றும் வாழ்கிறது.

இப்படத்தில் லேலோ ஸ்கீஃபனின் இசை மிக அற்புதமானது. குறிப்பாக, போட்டியாளர்கள் ஹாங்காங் துறைமுகத்தில் படகு பிடித்து தூரத்தில் நிற்கும் பாய்மரக் கப்பலிற்கு செல்லும் காட்சியில் அவருடைய இசையமைப்பு மிக அழகானது.

தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே இத்திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக்ஷன் படங்களை விரும்பிப்பார்க்கும் எம்.ஜி.ஆர். ரசிகர்களை புரூஸ் லீயின் அதிரடி மிகவும் ஈர்த்தது.

தற்காப்புக் கலைஞன் ஒருவனின் திறமையில் நம்பிக்கை வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பின்னாளில் ஏராளமான சண்டைப்படங்களை தயாரிக்க வைத்தது. ஒரு கால் நூற்றாண்டுக் காலத்திற்கு ஹாங்காங்கில் பல சண்டைத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் வித்திட்டது எண்டர் த டிராகன். புரூஸ் லீ!

பின் குறிப்பு: 

காலத்தால் அழியாத அந்த கலைஞன் மரணமடைந்த 40வது நினைவு நாள் இன்று. தனது 32வது வயதில் 1973ஆம் ஆண்டில் இறந்த புரூஸ் லீ நடித்த வே ஆஃத டிராகன், பிக் பாஸ், பிஸ்ட் ஆஃப் ஃபியூரி, கேம் ஆஃப் டெத் ஆகியன குறிப்பிடத்தக்க படங்கள்.

குங் ஃபூ கலையில் தேர்ந்தவராக இருந்த புரூஸ் லீ, ஜீத் குனி டோ என்ற தற்காப்புக் கலையை வடிவமைத்து அதனை கற்றுக்கொடுத்து வந்தார். இக்கலையை அவரிடம் பயின்ற பலர் தற்காப்புப் கலைகளில் சிறந்த விளங்கியவர்களான பாப் வால், ஜிம் கெல்லி, சக் நாரிஸ் ஆகியோர்.

எண்டர் த டிராகன் திரைப்பட வருகைக்கு பின்னர்தான் இந்தியாவில் கராத்தே கலையும் பலமாக வேரூன்றத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி-வெப் துனியா

12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மறக்க முடியாத படம்...

40வது நினைவு நாள் : சிறப்பத்தமைக்கும் வாழ்த்துக்கள்....

கவியாழி said...

அப்போது நானும் பார்த்து மகிழ்ந்தேன்

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தனபாலன் அண்ணே

Unknown said...

கண்ணதாசன் அண்ணே நான் டி வி யில் தன பார்த்து இருக்கிறேன்

jscjohny said...

வாவ்! அருமையான தொகுப்பு ஜி!

அஞ்சா சிங்கம் said...

சக்கர கட்டி said...

கண்ணதாசன் அண்ணே நான் டி வி யில் தன பார்த்து இருக்கிறேன்
////////////////////

இதுதான் ஊமை குத்து கவியாழி அண்ணே..........

Unknown said...

அஞ்ச சிங்கம் தல ஏன் இப்படி கோர்த்து விடுறிங்க

வெற்றிவேல் said...

அழகான தொகுப்பு!

பால கணேஷ் said...

குறுகிய காலமே வாழ்ந்தாலும், மிகக் குறைந்த படங்களையே எடுத்திருந்தாலும் உலகளவில் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியவர் ப்ரூஸ்லி! தற்காப்புக் கலை என்றால் அவர்தான் நினைவுக்கு வருமளவுக்கு சாதித்த சாதனையாளன்! இங்கே அவரைப் பற்றிய நினைவுப் பதிவைப் படித்து மிக ரசித்தேன்.

'பரிவை' சே.குமார் said...

அருமையான படம்...

நல்ல பகிர்வு.

புரூஸ்லியின் நினைவை மீட்டிய பகிர்வு.

Athisaya said...

வணக்கம்சொந்தமே!அருமையான தொகுப்பு..ஒரு காலத்தில் கற்க ஆசைப்பட்டு பின்னர் பலவந்தமாய் நிறுத்தப்பட்ட கராத்தே வகுப்பு நினைவில் தோன்றுகிறது.வாழ்த்துக்கள்.பகிர்விற்கு நன்றி!உ

Unknown said...

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

பாலகணேஷ் அண்ணா

இரவின் புன்னகை

சே.குமார்

முதன் முதலாய் என் தளத்திற்கு வருகை தந்த அதிசயா

அனைவருக்கும் நன்றி