நூறாண்டு காண வேண்டிய வாலியை காலன் 82ல் எடுத்துக் கொண்டான். அதனால் என்ன. நீலக்கடல் காயலாம், வார்த்தை சமுத்திரம் வற்றவா போகிறது.
1. பாடல் எழுதுவதற்கு சிலர் மூட் வேணும் என்பார்கள். வாலிக்கு அப்படியில்லை, எந்த சூழலிலும் எழுதுவார். பாடல் வரி எழுத வரலைன்னாதான் மூட் சரியில்லைன்னு வேடிக்கையாகச் சொல்வார்.
2. புதிய இசையமைப்பாளர் என்றால், நாலஞ்சு படம் பண்ணுங்க, அப்புறம் பார்த்துட்டு உங்க இசையில எழுதறேன் என்று திருப்பி அனுப்பி விடுவார். ஜென்டில்மேனுக்காக ரஹ்மானிடமும் அதேதான் சொன்னார். நான் சேகரோட மகன் என்று ரஹ்மான் சொன்னதும் ஆச்சரியப்பட்டு பாடல் எழுத சம்மதித்தார். அந்தப் பாடல்தான் ஜென்டில்மேனில் வரும் சிக்கு புக்கு ரயிலே.
3. இளம் கவிஞர்களின் பாடல் வரிகள் சிறப்பாக இருந்தால் பாராட்ட தயங்க மாட்டார். ந.முத்துக்குமார் சிவா மனசுல சக்தி படத்தில் எழுதிய, ஒரு கல் ஒரு கண்ணாடி பாடலை கேட்டு, எம்ஜிஆர் இருந்திருந்தால் இந்த பல்லவிக்கே ஒரு வீடு பரிசளித்திருப்பார் என பாராட்டியிருக்கிறார்.
4. வாலி எழுதிய சில பாடல்கள் பயங்கர எதிர்ப்பை சந்தித்தன. முக்கியமாக சகலகலாவல்லவனில் வரும் நேத்து ராத்திரி யம்மா, இந்துவில் வரும் சக்கரவள்ளி கிழங்கே சமைஞ்சது எப்படி. மிகப்பொpய வார்த்தை தாக்குதல்களை சமைஞ்சது பாடலுக்காக வாலி எதிர்கொண்டார்.
5. வாலியும், நாகேஷும் வாடா போடா நண்பர்கள். வாய்ப்பு தேடிய காலத்தில் தி.நகர் காபி ஹவுஸில் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். வாலிக்கு பேப்பர் வாங்கித் தந்து, எதையாவது எழுது என ஊக்கப்படுத்தியவர் நாகேஷ்.
6. இளையராஜா இசையில் வாலி முதலில் எழுதிய பாடல், பத்ரகாளி படத்தில் இடம்பெற்ற, வாங்கோண்ணா...
7. திருச்சி ஆல் இந்தியா ரேடியாவில் வாலி வேலை பார்த்த போது அவர் எழுதிய நாடகங்களுக்கு மனோரமா நடித்திருக்கிறார்.
8. வாலியின் தந்தை ஸ்ரீனிவாச அய்யங்கார், தாய் பொன்னம்மாள். வாலிக்கு ஒரு மூத்த சகோதரர், மூன்று மூத்த சகோதரிகள்.
9. உழைப்பில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். விடா முயற்சியும், உழைப்புமே தன்னை இப்படியொரு உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறது என்று அடிக்கடி சொல்வார். என்றாவது ஒருநாள் உங்கள் வியர்வை உங்கள் உயர்வை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்பார் வாலி.
10. சின்ன வயசிலேயே எழுத்தும், கவிதையும், ஓவியமும் வாலியை ஆக்கிரமித்துவிட்டன. ஸ்ரீரங்கத்தில் இருந்த போது நேதாஜி என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் பிரபல எழுத்தாளர் கல்கி.
11. சிலேடைப் பேச்சில் வித்தகர். பாய்ஸ் படத்துக்காக பொருள் இல்லாமல் ஒரு பாடல் (டேட்டிங் பாடல்) வேண்டும் என வாலியிடம் இயக்குனர் ஷங்கர் கேட்ட போது வாலியின் பதில், பொருள் இல்லாமல் நான் பாடல் எழுதறதில்லை (அந்தப் பாடலுக்கு மட்டும் ஒரு லட்சம் பெற்றதாக கேள்வி).
12. வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். அவரை அவரது தயார் ரங்கப்பா என்றுதான் அழைப்பார்.
13. கண்ணதாசன் மீது அதிக மரியாதை கொண்டவர். அவர் இறந்த போது, எழுதப் படிக்கத் தெரியாதவர்களில் எமனும் ஒருவன். அழகிய கவிதைப் புத்தகத்தை கிழித்துவிட்டான் என்று எழுதினார்.
14. சென்னைக்கு பாடல் எழுதுவதற்காக முதலில் வந்த போது வாலி திருவல்லிக்கேணியில் உள்ள சுந்தர மூர்த்தி விநாயகர் தெருவில் நண்பர்களுடன் தங்கியிருந்தார். வாடகை மாதம் ஐந்து ரூபாய்.
15. நன்றி மறக்காதவர். எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்தப் பிறகுதான் தனக்கு இந்த வாழ்வு கிடைத்தது என்பதை எல்லா மேடைகளிலும் சொல்வார். எம்எஸ்வியை சந்திக்கும் முன்பு எனக்கு சோத்துக்கே வழியில்லை, அவரை சந்தித்த பிறகு சோறு திங்கவே நேரமில்லை என்றும், எம்எஸ்வியை சந்திப்பதற்கு முன் தரித்திரம் என்னை தொட்டது, அவரை சந்தித்த பிறகு சரித்திரம் தொட்டது எனவும் கூறுவார்.
16. சக கலைஞர்களைப் பாராட்டி திடீர் கவிதை புனைவார். கவிஞர் முத்துலிங்கத்தை பற்றியும் எழுதியிருக்கிறார். பாடகி பி.சுசீலாவை குறித்து அவர் எழுதியது,
சுசீலாவே - நீ
விளைந்த இடம் விஜயவாடா
கடவுள் கலந்து வைத்தான்
நீ விளையும் போதே
குரல்வளையில் விஸ்கி, சோடா.
17. கண்ணதாசனுடன் எம்.ஜி.ஆருக்கு சிறிய மனக்கசப்பு ஏற்பட்டிருந்த நேரத்தில்தான் வாலி படகோட்டி படத்தின், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடலை எழுதினார். அதனை கேட்ட எம்.ஜி.ஆர் அன்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் என்னுடைய படங்களின் பாடல்களை இனி வாலி எழுதுவார் என அறிவித்தார்.
18. ஏவிஎம் முக்காக வாலி எழுதிய முதல் பாடல், அவளுக்கென்ன அழகிய முகம்... சர்வர் சுந்தரம் படத்தில் இடம் பெறுவது. இரவு நேரம் தான் போதையில் இருந்த போது மெய்யப்ப செட்டியார் ஆள்விட்டு அழைத்து அந்தப் பாடலை எழுதி வாங்கியதாக வாலி தெரிவித்திருக்கிறார்.
19. வாலி கேமராமேன் மாருதிராவுடன் இணைந்து வடைமாலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
20. வாலிக்கு சென்டிமெண்டில் நம்பிக்கை உண்டு. ம வரிசையில் அவர் எழுதியப் பாடல்கள் வெற்றி பெற்றதை ரஹ்மான் சுட்டிக்காட்டிய பிறகு ம வரிசையில் பல பாடல்களை எழுதினார். அழகிய தமிழ்மகனில் வரும் முன்னால் முன்னால் வாடா... சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் முன்பே வா அன்பே வா... ஆகியவை அப்படி எழுதியவை.
21. கருணாநிதியின் எங்கள் தங்கம் படத்தில் வரும் நான் அளவோடு ரசிப்பவன் பாடல் வாலி எழுதியது. இரண்டாவது வரிக்காக அவர் யோசனையில் இருந்த போது, எதையும் அளவின்றி கொடுப்பவன் என இரண்டாவது வரியை சொன்னவர் கருணாநிதி.
22. வாலியின் மனைவி ரமண திலகம். தனது லவ் லட்டர் நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க வந்த அவரை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்தார் வாலி.
23. வாலி பார்த்தாரே பரவசம், ஹேராம் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். முதல் படம், பாலசந்தரின் பொய்க்கால் குதிரை.
24. எம்.ஜி.ஆர். நெருக்கமானவர்களை அன்பு மிகுதியில் ஆண்டவனே என விளிப்பார். அப்படி விளிக்கப்பட்டவர்களில் வாலியும் ஒருவர்.
25. பாடல் எழுதி வாங்க வாலியின் வீட்டிற்கு எம்.எஸ்.வி. தொடங்கி ரஹ்மான்வரை அனேகமாக தமிழின் இன்றைய இசையமைப்பாளர்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள். இது வாலிக்கு மட்டுமே உள்ள சிறப்பு.
24. கோபக்காரர். வாலின்னாலே கோபம்தான் ஞாபகம் வரும் என்று கமல் ஒருமுறை கூறினார். இதையே ரஜினியும் கூறியிருக்கிறார்.
25. சக கவிஞர்களை மதிப்பதில் வாலிக்கு நிகர் வாலிதான். அதேநேரம் சிறந்த பாடல்களை கேட்டால் எப்படி நாம் அதனை தவறவிட்டோம் என நினைக்கக் கூடியவர். கவிஞர் தாமரையின் ஒரு பாடலை கேட்டு இரவு தூங்க முடியலை என்று கூறியிருக்கிறார்.
26. பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்கு சும்மா கிடைத்துவிடவில்லை. கே.வி.மகாதேவன் பாடல் வாய்ப்பு கேட்டுப் போன வாலியை அவர் காது படவே திட்டி அனுப்பியிருக்கிறார். எம்.எஸ்.வி.யும் வாலிக்கு சினிமாவுக்கு பாடல் எழுத வராது, பேசாமல் வானொலி வேலையை பார்க்கச் சொல் என்று வாலியின் நண்பரிடம், வாலி விஸ்வநதனை சந்திக்கச் சென்ற போது கூறியிருக்கிறார்.
27. எம்.ஜி.ஆருடன் வாலிக்கு 25 வருடகால நீண்ட நெருக்கமான பழக்கம் உண்டு. எம்.ஜி.ஆரை அண்ணா என்றுதான் அழைப்பார்.
28. வாலிக்கு நெடுங்காலமாக மது அருந்தும் பழக்கம் உண்டு. பேச்சிலராக இருந்த போது அவரது மாலைப்பொழுது ஸ்காட்ச் விஸ்கியுடன்தான் தொடங்கும்.
29. ரோஷக்காரர். பாரதவிலாஸ் படத்தில் வாலி எழுதிய இந்தியா என்பது என் வீடு பாடலுக்கு தேசிய விருது தருவதற்காக வாலியிடம் அவரது பயோடேட்டாவை கேட்டனர். வாலி தரவில்லை. அந்தப் பாட்டுக்கு தேசிய விருதுக்கான தகுதியிருந்தா யாரு எழுதினது என்று பார்க்காமல் விருது தரணும், எங்கிட்டயே நான் யார்னு கேட்டு தர்றதுக்கு எந்த விருதாக இருந்தாலும் வேண்டாம் என்று தேசிய விருதையே மறுத்தார்.
30. ஈகோ இல்லாமல் எதையும் முன் வைப்பவர். வாலி அவதார புருஷன் எழுதுவதற்கான தூண்டுதல்களில் ஒன்று, மு.மேத்தாவின் நபிகள் காவியம். ஒரு இந்து விளக்கை ஒரு இஸ்லாமிய விளக்குதான் ஏற்றி வைத்தது என அதனை குறிப்பிட்டார்.
31. வாலியையும் வார்த்தையையும் பிரிக்க முடியாதது போல அவருடன் இருந்த இன்னொரு பழக்கம் தாம்பூலம் போடுவது. ஐம்பது வருடங்களுக்கு மேல் தாம்பூலம் போட்டு வந்தார் வாலி. வார்த்தைகள் சரியாக அமையாத போது கவிஞரே தாம்பூலம் போடுங்க என்று நெருக்கமானவர்கள் சொல்வதுண்டு. தாம்பூலம் போட்டால் வாலி புத்துணர்ச்சியடைவார்.
32. பாடல் வரிகளில் சம்பந்தப்பட்டவர்களை இணைத்து விடுவதில் வாலி கில்லாடி. இளையராஜாவின் தாய் பெயர் சின்னதாய். தளபதியில் ஸ்ரீவித்யா சின்ன வயசிலேயே ரஜினியை பெற்றெடுப்பார். அதனை பயன்படுத்தி சின்னதாய் அவள் என்று பாட்டு எழுதியிருப்பார்.
33. வாலியை நாடகத்தின்பால் திருப்பியது, கருணாநிதியின் மருதநாட்டு இளவரசி படத்தின் வசனங்கள். அதன் பிறகே நாடகம் எழுதுவதில் வாலி ஆர்வம் காட்டினார்.
34. புரியாத வார்த்தைகளில் பாடல் புனைவதில் முன்னோடி. மாருகோ.. மாருகோ..., முக்காலா முக்காபுலா, டாலாக்கு டோல் டப்பிமா... சில உதாரணங்கள்.
35. தனித்தமிழை பயன்படுத்தாததற்கு வாலி வருத்தப்பட்டதில்லை. மாறாக அது சரிதான் என வாதிட்டிருக்கிறார். யானையை நால்வாய் என்றும், மானை புல்வாய் என்றும் சொன்னால் யாருக்கு தெரியும், மக்களை சென்றடைய வேண்டும் என்பதே பிரதானம் என்பார்.
36. எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்பை பேணி வந்தவராக இருந்தும், எம்.ஜி.ஆர், சிவாஜி யார் நடித்தாலும் எம்.ஆர்.ராதா படத்தில் இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அப்போது இருந்தது என்று உண்மையை வெளிப்படையாக கூறியவர் வாலி. இதற்காக எம்.ஜி.ஆர். ரசிகர்களின் கடும் கண்டனத்துக்கு அவர் ஆளாக நேர்ந்தது.
37. ஒரு இசையமைப்பாளர் வேண்டம் என்று திருப்பி அனுப்பிய பாடல்கள் வேறெhரு இசையமைப்பாளரின் இசையில் வெளிவந்து பெரிய ஹிட்டான சரித்திரம் வாலிக்கு உண்டு. வாலியின் எவர்கிரின், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் யாருக்காக கொடுத்தான்… இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனால் நிராகரிக்கப்பட்டதுதான்.
38. வாலி மொத்தம் 17 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அதில் பாக்யராஜின் சாட்டை இல்லாத பம்பரம் படமும் ஒன்று.
39. வார்த்தை விளையாட்டில் வல்லவர். சட்டென்று வார்த்தையால் அடிக்கிற திறமை அவரைப் போல் சிலரிடம்தான் உள்ளது. மூப்பனாரை பற்றி பேசும் போது மூப்பனார் என் தோப்பனார் என்றார். அதேபோல் கற்பில் மேலானவர் மாதவியா கண்ணகியா என்று பட்டிமன்றம். நீர் யாரை சொல்றீர் என்று கண்ணதாசன் வாலியை கேட்க, வாலியின் பதில். இரண்டு பேருமே மேலானவர் இல்லை, இரண்டு பேருமே ஃபீமேல்.
40. நான் ஆணையிட்டால் பாடலை நான் அரசன் என்றால் என் ஆட்சி என்றால் என்றுதான் வாலி முதலில் எழுதியிருந்தாராம். ரொம்ப அதிகமாக இருக்கிறது என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் நான் ஆணையிட்டால் என்று மாற்றி எழுதினார்.
41. பாடல் எழுத கண்ணதாசன் முதற்கொண்டு பலரும் அசிஸ்டெண்டுகள் வைத்திருந்தனர். படி எடுப்பதற்கு அவர்கள் உதவுவார்கள். வாலி கடைசி காலம்வரை அசிஸ்டெண்டுகள் வைத்துக் கொண்டதில்லை. தனது வரியை தானே தன் கைப்பட எழுதுவார். கணினியும் உபயோகிப்பதில்லை.
42. நியூ படத்தில் வரும் சக்கரை இனிக்கிற சக்கரை பாடலின் சிச்சுவேஷனை எஸ்.ஜே.சூர்யா போனில் சொல்ல, சக்கர இனிக்கிற சக்கர... அதில் எறும்புக்கு என்ன அக்கறை.. நான் இக்கரை... நீ அக்கரை... என்று போனிலேயே வரிகள் சொல்லியிருக்கிறார்.
43. பல நூறு படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் ஆரூர்தாஸ் வாலியை, தென்றலே என்றுதான் விளிப்பார். விருதுகளுக்கெல்லாம் மேலானது என்பார் வாலி.
44. எதிர்நீச்சல் படத்தை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் பார்த்த அண்ணா, அதில் வரும் வெற்றி வேண்டுமா போட்டுப்பாராடா எதிர்நீச்சல் பாடலை எழுதியது யார் என பாலசந்தரிடம் கேட்டுத் தெரிந்து, ரொம்ப பிரமாதமாக இருக்கு என வாலியிடம் சொல்லச் சொல்லியிருக்கிறார்.
45. வாலி படிப்பாளி. பரந்த படிப்பில்தான் அறிவு வளரும் என்பதில் நம்பிக்கை உள்ளவர். நவீன இலக்கியத்தையும் விடுவதில்லை. சாரு நிவேதிதா, குட்டி ரேவதி போன்றவர்களின் ஆக்கங்களை சமீபத்தில் படித்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார். பிடித்த எழுத்தாளர் காண்டேகர். ஜெயகாந்தனையும் பிடிக்கும்.
46. சிவாஜி கணேசன் வாலியை வாத்தியார் என்று அழைப்பதுண்டு. நாடகத்தில் வசனம் எழுதுகிறவர்களை அப்போது வாத்தியார் என்று அழைக்கும் மரபு இருந்தது.
47. ஆன்மீகவாதி ஆனால் ஆடம்பரவாதியல்ல. வாலியின் திருமணம் 1985 ஏப்ரல் 7 ஆம் தேதி அழைப்பிதழ், போட்டோ எதுவுமில்லாமல்தான் நடந்தது. அதிலும் அன்றைக்கு அவர் கவிஞராக உச்சத்தில் இருந்தார்.
48. ஏவி மெய்யப்ப செட்டியார் சொன்னதன் பேரில் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்துக்கு முதல் பாட்டெழுதினார் வாலி. அப்போதும் சம்பளம் குறைவாக இருக்க தனக்கான நியாயமான ஊதியத்தை கேட்டு பெற்றுக் கொண்டார்.
49. பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்காமல் மதுரைக்கு டிவிஎஸ் சில் ஏதாவது வேலை பார்க்கலாம் என வாலி கிளம்ப தயாரான போது பி.பி.ஸ்ரீனிவாஸ் வாலியை பார்க்க வர, இன்னைக்கு என்ன பாடல் பாடினீங்க என்று வாலி அவரிடம் கேட்டிருக்கிறார். பி.பி.ஸ்ரீனிவாஸ் அன்று பாடியது, கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா வாழ்விலே குழப்பமா.. பாடல். அதைக் கேட்ட வாலி அந்த நிமிடமே உற்சாகமும் தன்னம்பிக்கையும் பெற்று ஊருக்குப் போகும் முடிவை ரத்து செய்தார்.
50. அதேபோல் அவரை பாடல் எழுத சென்னைக்கு வரவழைத்ததும் பாசவலை படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல்தான். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியது.
குட்டி ஆடு தப்பி வந்தா
குள்ள நரிக்குச் சொந்தம்
குள்ள நரி தப்பி வந்தா
குறவனுக்குச் சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படிப் பார்க்கப் போனா
எட்டடிதான் சொந்தம்.
51. மது, தாம்பூல பழக்கத்தை பலர் சொல்லியும் வாலி விடவில்லை. எந்த கெட்டப்பழக்கமும் இல்லாத அவரது தந்தை திடீரென அகாலமடைந்ததால் ஏற்பட்ட விரக்தியும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் வாலிக்கு நெருக்கமானவர்கள்.
52. வாலியை அவரது தந்தை ஒவியம் கற்க அனுமதிக்கவில்லை. ஒருமுறை அவர்களின் வீட்டிற்கு வந்த தங்கம்மாள் என்ற அம்மையார் வாலி வரைந்திருந்த ஒரு படத்தைப் பார்த்து, என் தந்தையை அப்படியே இதில் பார்க்கிறேன் என்று அழுதார். அந்தப் படம் மகாகவி பாரதி. அழுதவர் பாரதியின் மகள் தங்கம்மாள் பாரதி. சென்னை ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் வாலியை அதன் பிறகு அவரது தந்தையே சேர்த்துவிட்டார்.
53. ஒருமுறைக்கு பலமுறை திருத்தி எழுதச் சொன்னால் வாலிக்கு கோபம் வரும். கமல்ஹாசன் ஒருமுறை, இந்த ஃபீலிங் போதாது என்று கேட்க நாலுமுறை மாற்றி எழுதினார். கடைசியில் இதுக்கு மேல என்னால ஃபீல் பண்ண முடியாது என்று ரைட்டிங் பேடை துhக்கி எறிந்தார். பிறகு அவர் கடைசியாக எழுதியதே படத்தில் இடம்பெற்றது. அந்தப் பாடல்தான் அபூர்வசகோதரர்களில் வரும், உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே.
54. வாலி வெளிநாடு சென்றதில்லை. அதனால் அவரை பாஸ்போர்ட் இல்லா கவிஞன் என்பார்கள். நான் வெளிநாடுகள் போனதில்லையே தவிர பல வெளிநாடுகள் எனக்குள் போயிருக்கின்றன என தான் வெளிநாட்டு மதுபானம் அருந்துவதை சிலேடையாக சொல்லிக் காட்டுவார்.
55. முருக மற்றும் அம்மன் பக்தர். முருகனை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாட்டில் இழுத்துவிடுவார். உதாரணம்,
வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன்,
வள்ளிக்கணவன் பேரைச் சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்.
56. மனைவி ரமண திலகத்தின் மரணம் வாலியை கடுமையாக பாதித்தது. அவரின் மறைவுக்குப் பின் இப்படி எழுதினார்.
நீ என்னை வெளியே சுமந்த
கருப்பை.
57. வாலி சிலரைப் போல் வதவதவென்று ஒரு பாடலுக்கு பல்லவியும் சரணமும் எழுதுவதில்லை. யாராக இருந்தாலும் நான்கு பல்லவி, நான்கு சரணங்கள். அதிலேயே இயக்குனரும் இசையமைப்பாளர்களும் திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.
58. கவிஞன் வறுமையில் வாட வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லாதவர். 1964 முதல் வருமான வரி கட்டி வந்தார்.
59. எம்.எஸ்.வி.யும், வாலியும் இசையமைப்பாளர், பாலாசிரியருக்கு மேலாக நட்பு வளர்த்துக் கொண்டவர்கள். கலங்கரை விளக்கம் கம்போஸிங். என்னை அசத்துற மாதிரி பல்லவி எழுதினால் இதெல்லாம் உனக்குதான் என்று தனது கழுத்து சங்கிலியையும், ரோலக்ஸ் வாட்சையும் கழற்றி ஆர்மோனியத்தின் மீது வைத்தார் எம்.எஸ்.வி. வாலி பல்லவி சொன்னார். சங்கிலியும், வாட்சும் வாலிக்கு கிடைத்தது. அந்தப் பல்லவிதான், காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்.
60. வாலியிடம் அசிஸ்டெண்டாக சேர மூன்று பேர் முயன்றனர். ஒருவர் கிராமத்தைச் சேர்ந்தவர், இன்னொருவர் மெடிகல் ஷhப் வைத்திருந்தவர். மூன்றாவது ஆள் நாடகம் எழுதுகிறவர். அவர்கள்தான் பிற்காலத்தில் பிரபலமான கங்கை அமரன், ராம.நாராயணன், ஆர்.சி.சக்தி
61. பாடல் எழுத தேவையான நேரம் எடுத்துக் கொள்வார். அரை மணியிலும் பாடல் தயாராகிவிடும். பழசிராஜாவில் இடம்பெறும் பாடல் முஸ்லீம் சம்பந்தப்பட்டது என்பதால் இளையராஜாவிடம் 3 மாதங்கள் காலஅவகாசம் வாங்கியதுதான் அதிகபட்சம்.
62. எல்லோரையும் புகழ்கிறார் என்றோரு விமர்சனம் வாலி மீது உண்டு. எல்லோரையும் புகழ்றது தப்பில்லையே, தூஷணம் செய்தாதான் தப்பு என்பார்.
63. அவதார புருஷன் வாலியின் மாஸ்டர் பீஸ். அதில் பலராலும் பாராட்டப்பட்ட ஏராளமான வரிகளில் ஒன்று,
சர்ப்பத்தில் படுத்தவன் - கோசலையின்
கர்ப்பத்தில் படுத்தான்.
64. ஓவியர் வாலியைப் போல் ஓவியத்தில் சிறந்தவனாக வேண்டும் என்று ரங்கராஜன் என்ற பெயரை வாலியாக மாற்றிக் கொண்டார்.
65. பாடல்கள் எழுதி புகழ் பெற்ற பிறகு வாலிக்கு பாராட்டு கூட்டம் நடந்தது. வெறும் பாடலாசிரியராக இருந்தால் போதாது என்று அவர் எழுதி வெளியிட்டதுதான் அவரது முதல் புத்தகமான அம்மா.
64. ஷங்கர் அமேரிக்கா செல்ல விசா அதிகாரியை சந்தித்த போது, தமிழரான ஒரு அதிகாரி இவர்தான் ஜென்டில்மேன், காதலன் படங்களின் இயக்குனர் என்று அறிமுகப்படுத்தினார். விசா வழங்கும் அதிகாரி கண்டு கொள்ளவில்லை. நீங்க விரும்பி கேட்கும் முக்காலா முக்காபுலா பாடலை இயக்கியது இவர்தான் என்றதும் ஆச்சரியப்பட்ட அதிகாரி உடனே விசா தந்திருக்கிறார். இது ஷங்கரே சொன்னது.
65. கும்பகோணம் தீ விபத்தில் பள்ளிக்குழந்தைகள் தீயில் கருகி மடிந்த போது
வாலி இப்படி எழுதினார்.
நிறைய கோயில்கள் கொண்ட ஊராமே
குடந்தை - அப்படியானால் இந்த அக்கிரமத்துக்கு
அத்துணை தெய்வங்களுமா
உடந்தை.
இதைப் படித்து, ஒரு நாத்திகனால் யோசிக்க முடியாததை எழுதிட்டீங்களே என்று போனில் வைரமுத்து வாலியை பாராட்டினார்.
66. ஸ்ரீரங்கத்தில் வாலி போட்ட முதல் நாடகம் தளபதி. துணைப்பாடத்தில் இடம்பெற்றிருந்த கிங்லியர் கதையை தழுவி இந்த நாடகத்தை வாலி எழுதியிருந்தார்.
67. நவீன பெண் கவிஞர்கள் உடலைக் கொண்டாடுதல் என்று உடல் உறுப்புகளின் பெயர்களை கவிதையில் எழுதுவதை பலர் எதிர்த்தனர். வாலியிடம் அது குறித்து கருத்து கேட்டபோது, ஆணுக்குள்ள எல்லா சுதந்திரமும் பெண்ணுக்கும் உண்டு. ஆண்டாள் எழுதாததா என்று ஒரே வார்த்தையில் எதிர்ப்பாளர்களை நிராகரித்தார்.
68. உங்க பாடல் சரியில்லை என்று சொன்னால் வாலிக்கு கோபம் வரும். எம்.ஜி.ஆரிடம்கூட, உங்களுக்கு புரியலைன்னு சொல்லுங்க, சரியில்லைன்னு சொல்லாதீங்க என்று கோபித்திருக்கிறார்.
69. வாலி எழுதி பத்திரிகையில் பிரசுரமான முதல் சிறுகதை பிராந்தி. வெளியானது கி.வ.ஜா. வின் கலைமகள்.
70. வாலி சினிமாவுக்கு வருவதற்கு முன் எழுதிய பாடல், கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்... இந்தப் பாடலில் மனதை பறிகொடுத்துதான் வாலியை சினிமாவில் பாட்டெழுத சென்னைக்கு வரச்சொன்னார் டி.எம்.எஸ். பிறகு அந்தப் பாடலுக்கு இசையமைத்து அவரே பாடினார்.
71. வாலி நாடகத்துக்காக எழுதிய பாடல்கள் 1956 ல் புதையல் படத்துக்காக வாங்கப்பட்டது. என்றாலும் அப்பாடல்கள் புரட்சி வீரன் புலித்தேவனில்தான் பயன்படுத்தப்பட்டது.
72. வாலிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்ற போது அதற்கான முழுச் செலவை ஏற்றுக் கொண்டதுன், மருத்துவர்களிடம் தனிப்பட்ட முறையில் வாலியை பத்திரமாக கவனித்துக் கொள்ளச் சொன்னவர் கருணாநிதி. அதனால், எனக்கு மறுபிறவி தந்தவர் என்று கருணாநிதியை வாலி குறிப்பிடுவதுண்டு.
73. 1958 ல் அண்ணா கதைவசனத்தில் பா.நீலகண்டனின் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்த நல்லவன் வாழ்வான் படத்துக்கு வாலி பாட்டு எழுதினார். எம்.ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்ததே பெரிய விஷயம் என பா.நீலகண்டன் சொன்ன போது, சம்பளம் வேண்டும் என வாலி கேட்டுப் பெற்றது 250 ரூபாய்.
74. படகோட்டி படத்தின் அத்தனை பாடல்களையும் வாலி எழுதினார். கடைசிப் பாடலின் போது அவர் உடம்புக்கு முடியாமல் வீட்டில் இருந்த போது வேறு ஒருவரை வைத்து கடைசிப் பாடலை எடுப்பது என முடிவானது. எம்.எஸ்.வி. க்கு உடன்பாடில்லை. தனது அசிஸ்டெண்ட் மற்றும் ஆர்மோனியப்பெட்டியுடன் வாலியின் வீட்டிற்கே சென்று ட்டியூன் போட்டு பாட்டை எழுதி வாங்கினார்.
75. பாட்டுக்கு மெட்டு, மெட்டுக்குப் பாட்டு இரண்டிலும் வாலி வித்தகர். இளையராஜா முதல் ரஹ்மான்வரை அனைவரிடமும் இந்த இரண்டு முறையிலும் பாடல் எழுதியிருக்கிறார். சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் நியூயார்க் நகரம் வாலி எழுதிய பின் ரஹ்மான் மெட்டமைத்தது.
76. 1958 ல் அழகர் மலைக்கள்ளன் படத்தில் எழுதிய, நிலவும் தாமரையும் நீயம்மா, உலகம் ஒருநாள் உனதம்மா பாடல்தான் வாலியின் முதல் திரையிசைப் பாடல்.
77. இரண்டே வரிகளில் அடிப்பதில் வாலியை அடிக்க ஆளில்லை. கோவலன் கதையை இரண்டே வரிகளில் சொல்ல முடியுமா என்று கேட்ட போது அவர் சொன்னது.
புகாரில் பிறந்தான்
புகாரில் இறந்தான்
78. எம்.ஜி.ஆர். படமென்றால் அரசியலை பாட்டில் நுழைக்காமல் இருக்க மாட்டார். அரசியலே இல்லாத அன்பே அன்பே படத்தில், உலகம் பிறந்தது எனக்காக பாடலில், உதயசூரியன் உதிக்கையிலே என்று எழுதினார். எதிர்பார்த்தது போல் சென்சாரில் பிரச்சனையாகி புதிய சூரியன் என மாற்றினர்.
79. பிரபுதேவாவுக்கு டான்சராக புகழ் வாங்கித் தந்த பாடல்கள் அனைத்தையும் வாலியே எழுதினார். பிரபுதேவா முதலில் தனியாக சினிமாவில் நடனமாடியது கதிரின் இதயம் திரைப்படத்தில். ஏப்ரல் மே யிலே பசுமையே இல்லை என்ற அந்தப் பாடலை எழுதியவர் வாலி. ஜென்டில்மேன் சிக்குபுக்கு ரயிலே, வால்டர் வெற்றிவேல் சின்ன ராசாவே சித்தெறும்பு உன்னை கடிக்குதா... சூரியன் லாலாக்கு டோல் டப்பிமா.. எல்லோமே வாலி எழுதியவைதான்.
80. பாடலின் டியூன் சிச்சுவேஷனுக்கு அந்நியமாக இருந்தால் இசையமைப்பாளர்களிடம் சுட்டிக்காட்டி மாற்றச் சொல்வார். இளையராஜா முதல் ரஹ்மான்வரை எல்லா இயக்குனர்களும் அப்படி மாற்றியும் இருக்கிறார்கள். பார்த்தால் பரவசம் படத்துக்கு வாலியின் கையில் இரவு ஏழு மணிக்கு டியூன் கிடைக்கிறது. சிச்சுவேஷனுக்கு டியூன் சரியில்லை என திருப்பி அனுப்புகிறார். 10.30 க்கு ரஹ்மானே வாலியின் வீடு தேடி வருகிறார். 12 மணிக்கு புதிய டீயூன் தயாராகிறது. அந்தப் பாடல்தான், மூன்றெழுத்து கெட்ட வார்த்தை சிஷ்யா...
81. கவிஞர் கண்ணதாசன் மீது மரியாதை கொண்டவர். ஒருமுறை போதையேறிய கண்ணதாசனுடன் இரவில் சென்ற போது பாண்டிபஜார் போலீஸார் இருவரையும் லாக்கப்பில் அடைத்த அனுபவமும் வாலிக்கு உண்டு.
82. பாடல் எழுத வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்ட போது கண்ணதாசனுக்கு அசிஸ்டெண்டாக சேரும் வாய்ப்பு வாலிக்கு வந்தது. மாதச் சம்பளம் 300 ரூபாய். நான் கண்ணதாசனுக்கு எதிரே கடைவிரிக்க வந்தவன் என்று கூறி அதனை மறுத்தார்.
மக்கள் மனதில் என்றும் அவர் நிலைத்து இருப்பார்.
நன்றி - சினிமா செய்திகள்
|
|
Tweet |
2 comments:
நல்லதொரு தொகுப்பு... (ஹைலைட் செய்யப்பட்டது...)
அன்பின் சக்கர கட்டி - பல தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நன்று - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
Post a Comment