Thursday 3 October 2013

சச்சினின் 200வது டெஸ்டை வைத்து அரசியலா? வியாபாரமா?


நியாயமாக தென் ஆப்பிரிக்காவில்தான் சச்சின் டெண்டுல்கரின் 200வது டெஸ்ட் பிரவேசம் நடந்திருக்கவேண்டும். ஆனால் இடையில் இந்தியாவில் அதனை நடத்த மேற்கிந்திய தீவுகளை அவசரம் அவசரமாக வரவழைத்து 2 டெஸ்ட் போட்டித் தொடரை பிசிசிஐ நடத்துவதில் எங்கோ இடிக்கிறது.

சச்சினின் 200 வது டெஸ்ட் என்ற ஒரு பிம்பத்தை வத்து கல்லா கட்ட நினைக்கிறதோ பிசிசிஐ என்ற ஐயம் எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நடந்தால் அதனால் பிசிசிஐ.-யிற்கு என்ன லாபம் இருக்க முடியும் என்பதும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் விவகாரம்தான்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்க தலைவராக ஹரூன் லோர்கட் நியமிக்கப்பட்டதை பிசிசிஐ பகிரங்கமாக எதிர்த்தது. அவர் ஏதோ 2011 உலகக்கோப்பை நடத்தப்பட்ட விதம் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தாராம்! பிசிசிஐ-யிற்குத்தான் விமர்சனம் என்றாலே அலர்ஜியாயிற்றே?

ஐசிசி.யில் எதிர்கால பயணத்திட்டம் என்பது முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாகும். அதனை நாடுகளின் வாரியங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க பயணத்திற்கான ஷெட்யூல் ரொம்ப கச்சடாவாக இருக்கிறது என்று பிசிசிஐ. ஆட்சேபணை தெரிவித்தது. அதனால் ஒரு நல்ல தொடர் குறைக்கப்பட்டுள்ளது.


ஹரூன் லோர்கட்டிற்கும், பிசிசிஐ.யிற்கும் இடையே இருக்கும் சொந்தப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை பகடைக்காயாக வாரியம் பயன்படுத்துகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

200டெஸ்ட் ஆடி விட்டு சச்சின் ஓய்வு பெறலாம் என்பது போன்ற தேவையற்ற செய்திகளை அசட்டு ஊடகங்கள் பரப்பிவந்ததும் பிசிசிஐ-யின் இந்த தந்திரோபாயத்திற்கு மறைமுகமாக உதவி புரிந்தது.

சொந்த நாட்டில், சொந்த மண்ணில் சச்சின் 200வது டெஸ்ட் போட்டியை விளையாடவேண்டும் என்பதெல்லாம் சச்சின் டெண்டுல்கருக்கே பிடித்தமான விஷயமா என்பதில் பலத்த சந்தேகங்கள் உள்ளன. ஒரு கிரிக்கெட் வீரராக எங்கு வேண்டுமானாலும் ஆடும் மனோ பலம் படைத்தவர்தான் சச்சின். எனவே சச்சின் கூறி இதனை பிசிசிஐ செய்திருக்கும் என்பதில் நியாயமில்லை.

ஏனெனில் சச்சின் டெண்டுல்கர்...அடுத்த ஆண்டு லார்ட்ஸில் ஆடுவார் என்று ரவி சாஸ்திரி கூறியதையத்து சச்சின் ஓய்வு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

எனவே சச்சினின் கடைசி டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறவேண்டும், அவரது சொந்த மண்ணில் அவர் ஓய்வு பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பிசிசிஐ செயல்பட்டிருக்குமா என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது.


பிசிசிஐ-யிடம் பெரும் ஸ்பான்ஸர்கள் உள்ளனர். அவர்களிடம் இந்த ஆண்டு ஒன்றும் இல்லை என்று கூறுவது எவ்வளவு கடினமோ அதேபோல்தான் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திற்கும்.

அவர்களும் ஏன் இதனை முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கேட்க நியாயம் உண்டு.

ஒரு வீரரை முன் வைத்து ஒரு நாடு எதிர்கால பயணத்திட்டத்தை மாற்றுவது கூடாது. ஒருவரின் லாபத்திற்காக அடுத்த கிரிக்கெட் வாரியத்தை நஷ்டமடையச் செய்வது வணிக அறம் அல்ல.

சொந்த விறுப்பு வெறுப்புகள் கிரிக்கெட்டில் தலைகாட்டுவது சரியல்ல. ஏன் மேற்கிந்திய தீவுகள் திடீரென அழைக்கப்பட்டது என்பதை பிசிசிஐ வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதற்குத் தகுதியானவர்கள்தான்! பிசிசிஐ இதில் மௌனம் சாதிப்பது சச்சின் டெண்டுல்கர், தோனி கூறியதால்தான் மேற்கிந்திய தீவுகள் அழைக்கப்பட்டது என்ற முடிவுக்கு தேவையில்லாமல் அனைவரையும் நகர்த்துகிறது.

பிசிசிஐ வெளிப்படையாக பதில் அளிக்குமா?

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அடப் போங்கப்பா...

'பரிவை' சே.குமார் said...

சச்சினின் 200வது டெஸ்ட் இந்தியாவில் நடக்கட்டும்.... ஒரு சாதனையாளனுக்கு தாய்நாட்டில் கிடைக்கும் மரியாதையாக நினைப்போம்.

வெங்கட் நாகராஜ் said...

என்னமோ போங்க.... எல்லாத்துலேயும் அரசியல்.

Unknown said...

இதிலும் பேட்டிங் ..இல்லை இல்லை ...பெட்டிங் நடக்கும் !