Sunday, 13 October 2013

சாப்ளின் என்ற கோமாளி


சார்லி சாப்ளினின் படங்களைப் பார்ப்பது மனதை உற்சாகப்படுத்தும் நிகழ்வாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. திரையில் பார்க்கும் அந்த நாடோடி நம்முடைய வாழ்வை காலங்கள் கடந்தும் புனரமைப்பது ஆச்சரியமான நிகழ்வு.

சமீபத்தில் வார இதழ் ஒன்றில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு வேடத்தை எப்படி கமல் திரையில் கொண்டு வந்தார் என்பதை விளக்கியிருந்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தைப் பற்றி பேசும் போதெல்லாம் - குறிப்பாக குள்ள அப்புவை பேசும் போது சார்லி சாப்ளினின் த சர்க்கஸ் திரைப்படம்தான் நினைவுக்கு வரும்.

வழக்கம் போல இந்தப் படத்திலும் வீடு, சொந்தபந்தம் எதுவுமில்லாத நாடோடி சாப்ளின். தெருவோர கலை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்iயில், பிக்பாக்கெட்காரன் தப்பிப்பதற்காக தான் அடித்த பர்ஸை சாப்ளினின் பாக்கெட்டில் வைக்க, பிரச்சனை ஆரம்பமாகும். சாப்ளினின் பாக்கெட்டில் தான் வைத்த பர்ஸை அவன் எடுக்க முனைகையில் போலீஸில் மாட்டிக் கொள்வான். பர்ஸின் திடீர் சொந்தக்காரர் ஆவார் சாப்ளின். இப்போது பர்ஸின் நிஜ சொந்தக்காரர் வர சாப்ளின் திருடனாகிவிடுவார். அதன் பிறகு போலீசுக்கும், சாப்ளினுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் சேஸிங் அவரை கொண்டு சேர்ப்பது ஒரு சர்க்கஸ் கூடாரத்துக்கு.

எதிர்பாராத நிகழ்வுகள் ஒரு கதையின் தொடக்கமாக மாறும் விசித்திரத்தை சாப்ளினின் படங்களில் காணலாம். பிக்பாக்கெட்காரன் இயல்பாக செய்யும் திருட்டுத்தனம் சாப்ளினை சர்க்கஸ் கூடாரத்துக்கு அழைத்து வந்து அவரையொரு சர்க்கஸ் கோமாளியாக மாற்றி, ஒரு பெண்ணை காதலிக்கவும் வைக்கும். சிட்டி லைட்ஸ் படத்தை எடுத்துக் கொண்டால், போலீஸுக்கு பயந்து நிற்கின்ற காரில் ஏறி காரின் அந்தப்பக்கம் உள்ள பிளாட்பாரத்தில் இறங்குவார் சாப்ளின். கார் கதவு திறக்கப்படும் சத்தத்தை வைத்து கண் தெரியாத பூ விற்கும் இளம் பெண் அவரை ஒரு பணக்காரர் என்று தவறாக புரிந்து கொள்வாள். இந்த புரிதல்தான் படத்தை முன்னகர்த்தி செல்லும். இதுபோல் பல உதாரணங்கள்.


படத்தின் ஆரம்பம் மட்டுமின்றி கதை நகரும் ஒவ்வொரு பகுதியைம் இப்படியான அசந்தர்ப்பமான சூழல்களை வைத்தே சாப்ளின் பின்னுகிறார். சாப்ளின் தப்பிக்க நுழையும் சர்க்கசானது திவாலாகும் நிலையில் உள்ளது. கோமாளிகளால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடிவதில்லை. எதிர்பாராமல் உள்ளே நுழையும் சாப்ளின் போலீஸிடமிருந்து தப்பிக்க செய்யும் சேஷ்டைகள் அவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. அந்த சர்க்கஸின் கோமாளியாக அவர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். அவரால் சர்க்கஸ் களைகட்டுகிறது.

ஆனாலும், குறைந்த சம்பளத்தில் அடிமட்ட வேலைக்காரராக அவர் நடத்தப்படுகிறார். இந்த சர்க்கஸே அவரால்தான் களைகட்டுகிறது என்று சர்க்கஸ் முதலாளியின் (வளர்ப்பு) மகள் அவருக்கு புரிய வைக்கிறாள். அவள் மீது சாப்ளினுக்கு காதல் வருகிறது. அவளுக்கு பரிசளிக்க மோதிரம் வாங்குகிறார். இந்நிலையில் சர்க்கஸுக்கு புதிதாக வரும் கயிறு மேல் நடக்கும் வித்தைக்காரரின் மீது சர்க்கஸ் முதலாளியின் மகளுக்கு காதல் வருகிறது. பொறாமையில் சாப்ளினும் கயிறு மேல் நடக்கும் வித்தையை முயற்சி செய்கிறார். ஒருமுறை அந்த சாகஸக்காரன் காணாமல் போகையில் கயிறு மேல் நடக்கிற வித்தையை செய்யும் சந்தர்ப்பம் சாப்ளினுக்கு கிடைக்கிறது. இந்தப் பகுதியை சாப்ளினின் அதியற்புத திறமையின் உதாரணமாகச் சொல்லலாம்.

கயிறு வித்தையின் தொடர்ச்சி சர்க்கஸ் முதலாளியுடனான கைகலப்பில் முடிய, சர்க்கஸிலிருந்து சாப்ளின் வெளியேற்றப்படுகிறார்.


தனது வளர்ப்பு தந்தையின் கொடுமையை சகித்துக் கொள்ள முடியாமல் சாப்ளினின் ஒருதலை காதலியும் உடன் வருகிறாள். இறுதியில் அவளுக்கும், அவள் காதலித்த அந்த சாகஸக்காரனுக்கும் சாப்ளின் திருமணம் செய்து வைக்கிறார். புது ஜோடியுடன் சர்க்கஸ் வேறு இடத்துக்கு கிளம்புகிறது. சாப்ளின் முதல் காட்சியில் தோன்றிய அதே நாடோடியாக சர்க்கஸ் செல்லும் திசைக்கு எதிர்திசையில் நடக்க ஆரம்பிக்கிறார்.

அபூர்வ சகோதரர்களுக்கு முன்பே கமல்ஹாசன் த சர்க்கஸை பார்த்திருப்பார். என்னுடைய அலுவலகத்தில் இருக்கும் ஒரே படம் சாப்ளினுடையது என்று அவர் முன்பு சொன்னதாக ஞாபகம். சாப்ளினால் இன்ஸ்பயர் ஆகாமலிருந்தால்தான் ஆச்சரியம். சாப்ளினேகூட த சர்க்கஸ் திரைப்படத்தை அவரின் விருப்பத்துக்குரிய பிரெஞ்ச் நகைச்சவை நடிகர் மேக்ஸ் லிண்டரின் த கிங் ஆஃப் த சர்க்கஸ் திரைப்படத்தின் பாதிப்பில் எடுத்ததாக கூறுகிறார்கள்.

த சர்க்கஸில் மீண்டும் மீண்டும் ஆச்சரியப்படுத்தும் விஷயம் சாப்ளினின் டைமிங். அவர் மட்டுமில்லை, படத்தில் வரும் சிங்கம், குரங்குகள், குதிரை என்று விலங்குகளும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. போலீஸுக்குப் பயந்து தெருவோர கலைநிகழ்ச்சிக்குள் சாப்ளின் காட்டும் வித்தைகள் சிரிப்பை வரவழைப்பவை. முக்கியமாக கண்ணாடிகளால் சூழ்ந்த அரங்கத்துக்குள் எப்படி கேமரா தெரியாமல் படமாக்கினார்கள்? த சர்க்கஸ் வெளியானது 1928 ல் என்பதை இங்கு நினைவுகூர்வது சாலப்பொருத்தம்.

சிங்கத்தின் கூண்டுக்குள் தெரியாமல் சிக்கிக் கொள்ளும் போது நடக்கும் சம்பவங்களை இன்றைய தொழில்நுட்ப யுகத்தில்கூட எடுக்க முடியுமா? கயிறு மேல் சாப்ளின் நடக்கையில் குரங்குகள் அவர் உடையை அவிழ்த்து, மூக்கை கடித்து, வாயில் வாலைவிட்டு... அத்தனை குரங்கு குறும்புக்கு நடுவிலும் சாப்ளின் கயிற்றில் தள்ளாடிக் கொண்டே பேலன்ஸ் செய்வது... சாப்ளினால் மட்டுமே ஆகக்கூடிய சாகஸங்கள்.


படங்கள் பேச ஆரம்பித்த பிறகும் சாப்ளின் மௌனப் படங்கள் எடுப்பதையே விரும்பினார். வசனம் படத்தின் கற்பனையை, பன்முகத்தன்மையை அழித்து ஒருபடித்தானதாக்கிவிடும் என்று அவர் நம்பினார். அவரின் படங்களில் எழுத்துக்களில் விளக்கம் முக்கியமான தருணங்களில் மட்டுமே வரும். பெரும்பாலும் தத்துவ தெறிப்பாக அல்லது சூழலை விளக்கும்விதமாக அவை இருக்கும். சர்க்கஸ் முதலாளி, சாப்ளினால்தான் சர்க்கஸ் களைகட்டுகிறது என்ற விவரம் சாப்ளினுக்கு தெரிய கூடாது என்பதில் குறியாக இருப்பார். அது தெரியாத அளவுக்கு அவரிடம் அதிகமாக வேலை வாங்கு என்று தனது ஆளிடமும் அறிவுறுத்துவார். பண்ணையார் யுகத்திலிருந்து ஐடி யுகம்வரை இதுதான் நடக்கிறது. தனக்கு கீழ் உள்ளவர்களை அடக்கி ஆள மேலிருப்பவர்கள் செய்யும் தந்திரம் இது. அவர்களால் எதுவுமே நடக்கவில்லை, முதலாளிகள்தான் பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு வேலை தருகிறார்கள் என்ற தோற்றம் ஒவ்வொரு நிறுவனத்தின் அதிகாரத்துக்கும் தேவைப்படுகிறது.

கலை என்பது ஆற்றொழுக்காக மேலெழுவது. அசந்தர்ப்பங்களால் கட்டமைக்கப்பட்டது. திட்டமிட்ட வழியில் அதனை சாத்தியமாக்குவது இயலாத காரியம். தொழில்முறை சர்க்கஸ் கோமாளிகளின் திட்டமிட்ட வித்தைகளை சாப்ளினால் கற்றுக் கொள்ள முடிவதில்லை. ஒவ்வொருமுறையும் தவறிவிடுகிறார். ஆனால் அந்த சட்டகத்தை தாண்டி அவர் செய்யும் கோமாளித்தனங்கள்தான் பார்வையாளர்களை கவர்கிறது. அவர்களை தன்னை மறந்து சிரிக்க வைக்கிறது. கலை குறித்த இந்த நுண்ணுணர்வு படத்தில் போகிற போக்கில் சொல்லப்படுகிறது.

படத்தின் கதையை எழுதி சாப்ளினே இயக்கி, இசையமைத்திருக்கிறார். நகைச்சுவை காட்சிகளுக்கு எப்படி இசையமைப்பது என்பதற்கு இந்தப் படமும் ஒரு சிறந்த உதாரணம். சாப்ளின் தனது படங்களில் நகைச்சுவையின் நடுவே வாழ்வின் சாராம்சத்தை, அதன் வலியை, மகத்துவத்தை, கொண்டாட்டத்தை பொதிந்து தருகிறார். நாம் அந்த சாராம்சத்தை விடுத்து கோமாளித்தனத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். சாப்ளினை இன்றும் ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமே பெரும்பாலானவர்களின் மனதில் தங்கிப் போனது காலக்கொடுமை.

சாப்ளின் கோமாளிதான், சாகஸக்காரர்தான். அதேநேரம் அந்த கோமாளி தோற்றத்தில் அவர் சுட்டிக் காட்டுவது - த சர்க்கஸ் படத்தின் இறுதிக் காட்சியைப் போல் - எப்போதும் கோமாளித்தனத்துக்கு எதிர்திசையைதான். அதனை புரிந்து கொள்ளாமல் சாப்ளினின் படத்தைப் பார்ப்பது, குருடன் யானையை தடவிப் பார்ப்பதற்கு ஒப்பானது.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முழுதாக அறிந்தவர்களுக்கு தெரியும்...

Anonymous said...

வணக்கம்

பதிவு அருமை வாழ்த்துக்கள் ஒரு நகைச்சுவை நடிகன்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

சாப்ளின் ஒரு அற்புதக் கலைஞன்...
நல்ல பகிர்வு...

Manimaran said...

சாப்ளின் ஒரு மகா கலைஞன்... ! உங்கள் விமர்சனமும் பார்வையும் அருமை.

கவிதை வானம் said...

1977-80 காலக்கட்டங்களில் மதுரையில் படிக்கும் போது ரீகல் திரையரங்கில் இவரது படங்கள் பார்த்தது.......உங்கள் பதிவு என் பழைய நினைவுகளை புதுசாக அசைபோட வைத்தது நன்றி

வெங்கட் நாகராஜ் said...

சமீபத்தில் பார்த்த அவரது படம் நினைவுக்கு வந்து போகிறது.

நல்ல கட்டுரை.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...