Tuesday, 1 October 2013

எம்.என்.நம்பியார்- நேசிக்க வைத்த வில்லன்!


எம்.என்.நம்பியார்… தமிழ் சினிமாவில் அழுத்தமான தடம் பதித்த நடிகர்களில் ஒருவர். கையை பிசைந்து, கழுத்தை சிறுத்து, கட்டை குரலில் அவர் நாயகியை மிரட்டத் தொடங்கும்போது திரையரங்கு சூடேற ஆரம்பிக்கும். எம்.ஜி.ஆர் என்ற ஆற்றல்மிகு ஹீரோவுக்கு இறுதிவரை ஈடுகொடுத்த ஒரே வில்லன்.

எம்.என்.நம்பியார் எ‌ன்ற மன்சரி நாரயண நம்பியார் பிறந்தது கேரளாவில் உள்ள கண்ணூர். வருடம், 1919 மார்ச் 7. சின்ன வயதிலேயே அவரது மனதில் நடிப்பு ஆசை துளிர்விடத் தொடங்கியது. தனது 13வது வயதில் நவாப் ராஜமாணிக்கம் குருப்பில் சேர்ந்தார் நம்பியார். அன்றிலிருந்து நடிப்பே அவரது வாழ்க்கையின் எல்லாமுமாக மாறியது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நம்பியார் என்ற பெயர் உருவாக்கும் பிம்பம் அனைவரும் அறிந்தது. ஏழைகளின் விரோதி, காமுகன், பணத்தாசை பிடித்தவர் இன்னும் தவிர்க்க வேண்டிய அனைத்து குணங்களின் கருவறை அவர். திரை உருவாக்கிய இந்த மாய பிம்பங்களுக்கு நேரெதிரான வாழ்க்கையை இறுதிவரை கடைபிடித்தவர் அவர் என்பது ஆச்சரியமான உண்மை.

நம்பியார் புலால் உண்பதில்லை, புறணி பேசுவதில்லை, ஆடம்பர செலவுகளை ஒருபோதும் விரும்பியதில்லை. பாய்ஸ் நாடக கம்பெனியில் பணிபுரிந்தபோது தனக்கு சம்பளமாக கிடைத்த 3 ரூபாயில் ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி இரண்டு ரூபாயை தனது தாய்க்கு தவறாமல் அனுப்பி வைத்தவர் அவர்.

நம்பியாரின் திரைப்பிரவேசம் 1935ல் தமிழ், இந்தி இரு மொழிகளில் உருவான பக்த ராமதாஸ் படத்தில் நிகழ்ந்தது. வில்லனாக அறிமுகமான அவர் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தும் இறுதிவரை வில்லன் முத்திரையுடனே அறியப்பட்டார்.

ஏறக்குறைய 1,000 படங்கள் நடித்திருக்கிறார் ஏழு தலைமுறை நடிகர்களுடன் பணிபுரிந்திருக்கும் இந்த பழம்பெரும் நடிகர். தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களுடன் ஆங்கில படமொன்றும் இவரது கணக்கில் வருகிறது. 1952ல் வில்லியம் பர்க்கின் இயக்கத்தில் வெளியான ஜங்கிள் படத்தில் சிறிய வேடமொன்றில் இவர் நடித்துள்ளார். கணவனே கண்கண்ட தெய்வம் படம் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டபோது அதில் நம்பியாரும் நடித்தார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என அன்றைய அனைத்து முன்னணி நடிகர்களுடனும் திரையை பங்கு போட்டிருக்கிறார் நம்பியார். அவருக்கு பிடித்தமான நடிகர் எம்.ஆர்.ராதா என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். பிடித்த நடிகை சாவித்திரி.

அனைவரும் அறிந்த நடிகராக இருந்தும் நடிகன் என்ற எல்லை தாண்டி தனது பிரபலத்தை விலை பேச அவர் ஒருபோதும் முயன்றதில்லை என்பது பலரிடம் காண முடியாத அரிய குணம்.


படத்தில் நடிக்க தொடங்கிய பிறகும் அவரது நாடக ஆசை தணியவில்லை. சொந்தமாக நம்பியார் நாடக மன்றம் என்ற பெயரில் நாடக கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார். அந்த நாடக கம்பெனி கவியின் கனவு, கல்யாண சூப்பர் மார்க்கெட் ஆகிய இரு நாடகங்களை அரங்கேற்றியது. அதில் கல்யாண சூப்பர் மார்க்கெட் நகைச்சுவை நாடகம் என்பது நம்பியாரின் ரசனை அவரது திரை பிம்பத்திலிருந்து மாறுபட்டது என்பதற்கு சிறந்த உதாரணம்.

நம்பியாரின் ஆன்மீக முகம் பிரசித்தமானது. ஐய்யப்பனின் சீரிய பக்தர். 65 வருடங்களுக்கு மேல் சபரிமலை சென்று ஐய்யப்பனை தரிசித்தவர். குருசாமிகளுக்கெல்லாம் மேலான மகா குருசாமி. அவர் மாலை அணிவித்து சபரிமலை அழைத்து சென்ற நட்சத்திரங்கள் ஏராளம். தனது ஆன்மீக செயல்பாட்டை பொது வாழ்வில் அதிகாரத்தை கைப்பற்றும் ஆயுதமாக ஒருபோதும் அவர் பயன்படுத்தியதில்லை.

நம்பியார் இரு படங்களில் நாயகனாக நடித்துள்ளார். கல்யாணி, கவிதா என்ற அந்தப் படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. திகம்பரசாமியார் என்ற படத்தில் பதினொரு வேடங்களில் அவர் நடித்தது பலரும் அறியாத ஆச்சரியம்.

உடம்பை பேணுவதில் நம்பியாருக்கு நிகராக சொல்ல யாருமில்லை. வயதான காலத்திலும் உடம்பை கட்டுக் கோப்பாக பேணியவர் அவர். அதன் முக்கியத்துவத்தை இளையவர்களுக்கு பலமுறை போதித்தும் இருக்கிறார். தான் நடித்த படங்களில் நம்பியாருக்கு பிடித்தமான படங்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம். எம்.ஜி.ஆருடன் நடித்ததில் ஆயிரத்தில் ஒருவன், சிவாஜியுடன் நடித்ததில் அம்பிகாபதி, ஜெமினியுடன் மிஸ்ஸியம்மா, ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு. சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலன் சீ‌ரியலிலும் நடித்தார்.

எம்.ஆர்.ராதா, சிவாஜி போன்றவர்களுடன் ஒப்பிடும்போது நடிகராக நம்பியாரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ள அதிகம் இல்லை என்றாலும், குரூரம் தெறிக்காத அவரது வில்லத்தனம் தமிழ் சினிமாவில் தனி அத்தியாயமாக என்றும் நிலைத்திருக்கும். வில்லனாக நடித்தே தமிழ் மனங்களின் நேசத்துக்குரியவரானவர் அவர். நடிகர்களின் திரை பிம்பத்தை அப்படியே நம்பும் பாமர ரசனையை தனது நெறி பிறழாத வாழ்க்கையால் முறித்துப் போட்டவர்.

எப்படிப் பார்த்தாலும் நம்பியாரின் இழப்பு ஈடு செய்ய முடியாததுதான்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருப்பது சில பேர்... இவருக்கு முதலிடம்...

வெங்கட் நாகராஜ் said...

திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜ வாழ்வில் பலருக்கு ஆதர்ஸ ஹீரோ இவர் தான்.

சமீபத்தில் திகம்பர சாமியார் படம் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் திரையிட்டார்கள்.... சில காட்சிகள் மட்டும் தான் பார்த்தேன்....

aavee said...

அசத்தல் பதிவு. நம்பியார் அவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது..

ராஜி said...

சின்ன வயசுல திரையில் வரும் பிம்பத்தை மட்டுமே பார்த்து பயந்து பிடிக்காத நடிகர். ஆனா, அவரை புரிந்த பின் இப்போ ரொம்பவும் பிடிச்ச நடிகர்.