Sunday 18 August 2013

தமிழ் சினிமாவின் அட்டகத்திகள் !


தலைவாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. சிலரின் உண்மையான வீரம் என்ன என்பதையும் அது கோடிட்டு காட்டியிருக்கிறது. இந்தப் படிப்பினையை பால பாடமாக மனதின் ஓரத்தில் வைத்திருப்பது அவசியம்.

தலைவா வெளியாகவிருந்த திரையரங்குகளுக்கு வந்த வெத்து வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பிரச்சனை ஆரம்பித்தது. படத்தை வெளியிட்டால் பிரச்சனை வெடிக்கும் என்று காவல்துறை அச்சம் தெரிவித்ததை தொடர்ந்து காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. படத்தின் பேனர்கள், கட் அவுட்களை அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஊர்பேர் தெரியாத யாரோ சிலரின் வெடிகுண்டு மிரட்டலுக்கு எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையாக அவை தெரியவில்லை. வெடிகுண்டு மிரட்டலை காரணமாக வைத்து அதிகார மையம் தலைவா படத்தை முடக்க நினைத்தது. அதை அவர்கள் வெற்றிகரமாக செய்து காட்டினார்கள். திரையரங்கு உரிமையாளர்களின் பேச்சில் அது வெளிப்பட்டது.

தலைவா அரசுக்கு எதிரான படம். அரசுக்கு எதிரான காட்சிகளை நீக்கி, அரசு சம்மதித்தால் மட்டுமே படத்தை திரையிடுவோம் என அவர்கள் கூறினர். படத்தைப் பார்த்த வரிச்சலுகை அளிக்கும் குழு, வரிச்சலுகைக்கு தகுதியில்லை என நிராகரித்தது. அதற்கு மிகவும் எளிய காரணங்களை தெரிவித்தனர். இதே காரணங்களுடன் வெளிவந்த பல படங்கள் வரிச்சலுகை பெற்றதை உதாரணமாக காட்ட இயலும். யாரோ சிலரின் அல்லது ஒருவரின் கட்டளைகள் அதிகாரத்தின் துணையுடன் நிறைவேற்றப்பட்டன.

அடுத்த சிஎம் கனவுடன் யார் காய் நகர்த்தினாலும் அதனை இரண்டு திராவிடக் கட்சிகளுமே விரும்புவதில்லை. மக்கள் இயக்கம், தனிக்கொடி என்று அரசியலுக்குரிய தாளலயத்துடன் விஜய்யின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை. காவலன் படப்பிரச்சனை காரணமாக சென்ற தேர்தலில் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். திமுக வுக்கு எதிரான நடவடிக்கையாக அது அமைந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரன் பல இடங்களில் அதிமுக-வை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதிமுக அமோக வெற்றி பெற்றது. அந்த வெற்றியில் நானும் ஒரு அணிலாக உதவினேன் என்று பூரித்தார் விஜய்.

ஆனால் ஜெயலலிதா அவர்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகள் காட்டின. முக்கியமாக, எதிர்காலத்தில் நான்தான் அண்ணா, விஜய்தான் எம்ஜிஆர் என்று எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளிப்படையாக பேசியது அவருக்கு அதிருப்தியை தந்தது. முதல்வேலையாக விஜய்யின் பிரமாண்ட பிறந்தநாள் விழா முடக்கப்பட்டது. விஜய்யால் எதுவும் செய்ய முடியவில்லை. பிறந்தநாள் விழாவை அரசியலுக்கான ஆரம்ப விழா என்று சிலர் திரித்துவிட்டார்கள், நடிப்பதற்கே நேரம் இல்லாத எனக்கு அரசியல் செய்ய நேரமும் இல்லை, ஆசையும் இல்லை என நமத்துப்போன தன்னிலை அறிக்கையை மட்டுமே அவரால் தர முடிந்தது.

அந்த கொந்தளிப்பான சூழல் ஆறி தணிவதற்குள் வந்தது தலைவா படத்தின் வெளியீடு. அதன் பிறகு நடந்ததை நாடறியும். தலைவா படத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒரு காரணமாக கூறப்பட்டு படம் எப்படி முடக்கப்பட்டதோ அதேபோல் விஸ்வரூபத்துக்கு முஸ்லீம்களின் எதிர்ப்பு காரணமாகக் காட்டப்பட்டது.


இரண்டுமே ஏறக்குறைய ஒரே பிரச்சனைதான். ஆனால் அதனை விஜய்யும், கமலும் கையாண்டவிதம் வேறு. கமல் மீடியாவின் மூலம் நேரடியாக மக்களை சந்தித்தார், பிரச்சனைகளை பேசினார். தடை செய்த அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். படத்தை வெளியிடக் கூடாது என்பதற்கு அரசு சொன்ன சொத்தை வாதங்களை உதாரணங்களுடன் மடக்கினார். முக்கியமாக, விஸ்வரூபம் வெளியாகாததற்கு அரசின் நியாயமற்ற எதிர்ப்புதான் காரணம் என்பதை மக்கள் முன் வெட்ட வெளிச்சமாக்கினார். திரைமறைவில் அவர் எந்த ரகசிய பேரத்திலும் ஈடுபடவில்லை.

ஆனால் விஜய்யும் அவரது தந்தையும் ரகசியமாக முதல்வரை சந்திக்க முயன்றனர். முதல்வரைப் புகழ்ந்து விஜய் அறிக்கை வெளியிட்டார். தலைவா வெளியாகாததற்கு யார் காரணம் என்பதை தெரிவிக்காமலே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர். பிரச்சனையை நேருக்கு நேர் எதிர்கொள்ளாமல் அவர்களின் ஒவ்வொரு நகர்வும் ரகசிய நடவடிக்கையாகவே அமைந்தது. ஒரே வரியில் சொல்வதென்றால், தனது சொந்தப் பிரச்சனைக்காக அவரால் எதிர்த்துப் போராட முடியவில்லை.

இன்னொருபுறம் சரத்குமார் தலைவா பிரச்சனைக்காக போராடுகிறார் என தெரிவிக்கப்பட்டது. நடிகர் சங்கத் தலைவர் வெளிப்படையாக எதுவும் பேசவில்லையே என்ற கேள்வி எழுந்த போது, சத்தம் போட்டுவிட்டு எதுவுமே செய்யாமல் இருப்பது நல்லதா, சத்தம் போடாமல் காரியமாற்றுவது நல்லதா என சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் ட்வீட்டரில் தெரிவித்தார். அங்கேயும் எல்லாமே ரகசியம்தான். இது என்ன இந்தியாவின் பாதுகாப்பு பிரச்சனையா? இல்லை தாவூத்தை பிடிக்க ரகசிய திட்டம் போடுகிறார்களா?

விஜய், சரத் என்றில்லை, தமிழ் சினிமாவின் 24 சங்கங்களில் ஒன்றுகூட தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. ஒரு படத்துக்கு அதிகார மையத்தால் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் இந்த சங்கங்கள் கள்ள மௌனத்தின் மூலமே அதனை கடந்திருக்கின்றன. ஜெயலலிதா முதல்வராகும் போது கருணாநிதியை கிண்டல் செய்து கலை நிகழ்ச்சி நடத்துவதும், கருணாநிதி முதல்வராகும் போது ஜெயலலிதாவை கிண்டல் செய்வதுமாக சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்துதான் இவர்கள் சலுகைகளை பெறுகிறார்கள் என்பது கண்கூடு. காவிரிக்காக நெய்வேலியில் திரையுலகம் திரண்டது ஜெயலலிதாவின் ஆணையின் பேரில் என்பதும், சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்தது கருணாநிதியின் கண்ணசைவில் என்பதும் ஊர் அறிந்த ரகசியம். கடந்த இரு பத்தாண்டுகளில் ஈழத்துக்காக ராமேஸ்வரத்தில் இயக்குனர்கள் தன்னெழுச்சியாக மேற்கொண்ட போராட்டத்தை தவிர்த்து திரையுலகம் ஒன்று கூடிய அனைத்துப் போராட்டங்களுமே ஆள்பவர்களின் விருப்பத்தின் பேரில் நடத்தப்பட்டவையே. ஆள்பவர்களின் விருப்பத்துக்கு மாறான சின்ன அசைவை வெளிப்படுத்தவே திரையுலகம் பதறுகிறது. நேர்மையான உரிமைகளை போராடிப் பெறாமல் கூழைக்கும்பிடில் காரியம் சாதித்து அரசை அண்டிப் பிழைப்பதாகவே திரையுலக சங்கங்கள் தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளன.


கூழைக்கும்பிடு, சந்தாப்பவாதம், ரகசிய பேரம் என பை பாஸில் பயணிக்கிறவர்களால் எந்தப் பிரச்சனையையும் நேருக்குநேர் எதிர்கொள்ள முடியாது என்பது சரித்திரம். சொந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாதவர்களிடம், காவிரிப் பிரச்சனைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை, ஈழப்பிரச்சனையை ஏன் முன்னெடுக்கவில்லை என்று நாம் கேட்டுக் கொண்டிருப்பது கேலிக்குரியது. ஒருமுறை கூடங்குளம் பிரச்சனையில் சிறை சென்ற பெண்ணை சந்திக்க நேர்ந்தது. நடுத்தர வயது மீனவப் பெண். படிக்காதவர். சிறை சென்று தினம் கஷ்டத்தை அனுபவிக்கும் போதும் அணு உலை கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். பேருந்தில் கையில் விலங்கிட்டு நீமன்றத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட போது, பேருந்தில் இருந்த சிலர் பிரியாணிக்காகவும், ஐநாறு ருபாய்க்காகவும் இப்படி கஷ்டப்பட வேண்டுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டிருக்கிறார்கள். நான் ஆயிரம் ரூபாயும், பிரியாணியும் தர்றேன் நீ இந்த மாதிரி கையில் விலங்கோடு சிறைக்கு போகத் தயாரா என்று இவர் திருப்பி கேட்டிருக்கிறார். ரூபாய்க்காகவும், பிரியாணிக்காகவும் அவர்கள் போராடவில்லை. அது உரிமைக்கான போராட்டம், எதிர்காலத்துக்கான போராட்டம். அந்த மீனவப் பெண்ணிடம் காணப்பட்ட உறுதியிலும், நெஞ்சுரத்திலும் கால்வாசி இல்லாதவர்கள் நமது சினிமா அட்டக்கத்திகள். இவர்களைப் போய் தலைவா என்றும், தலைமை ஏற்க வா என்றும் கூவுவதைவிட கேவலம் என்ன இருக்கிறது? இந்த அட்டக்கத்திகள் திரையரங்கு இருட்டில், இருந்தால் இமயமலை எழுந்தால் எரிமலை என்று சுயபுகழ்ச்சி பாடுகையில் கைத்தட்டுகிற ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேவலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.

திரைப்படம் பார்ப்போம், திரைப்படத்தை ரசிப்போம், சினிமா நட்சத்திரங்களையும் ரசிப்போம். அவர்களுக்கு செம்பு அடிப்பதையும், பல்லக்கு தூக்குவதையும் விட்டுவிடுவோம். சுயமரியாதையான சமூகத்தில்தான் சுயமரியாதையான அரசு சாத்தியம்.

நன்றி-இணையம்

10 comments:

தனிமரம் said...

திரைப்படம் பார்ப்போம், திரைப்படத்தை ரசிப்போம், சினிமா நட்சத்திரங்களையும் ரசிப்போம். அவர்களுக்கு செம்பு அடிப்பதையும், பல்லக்கு தூக்குவதையும் விட்டுவிடுவோம். சுயமரியாதையான சமூகத்தில்தான் சுயமரியாதையான அரசு சாத்தியம்.//தீர்க்கமான வார்த்தைகள் ஐயா!

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிகராக இருந்தால் பரவாயில்லை... வெறியராக இருந்தால்...

கவிதை வானம் said...

ஆக..சினிமா வேறு வாழ்க்கை வேறு என்பதை சினிமாக்காரங்களுக்கு தெரியுது... காசு கொடுத்து படம்பார்ப்பவர்களுக்கு தெரியவில்லை...அப்படித்தானே?
எல்லாம் சாயா...மாயா...

Swami said...

அற்புதமான பதிவு. எந்த காழ்புணர்ச்சியும் இல்லாம நேர்மைய நடுநிலையா நாகரிகமா எழுதப்பட்ட பதிவு மிகுந்த பாராட்டுக்கு உரியது.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
கடைசியில் அருமையா முடிச்சிருக்கீங்க...

வெற்றிவேல் said...

திரைப்படம் பார்ப்போம், திரைப்படத்தை ரசிப்போம், சினிமா நட்சத்திரங்களையும் ரசிப்போம். அவர்களுக்கு செம்பு அடிப்பதையும், பல்லக்கு தூக்குவதையும் விட்டுவிடுவோம். சுயமரியாதையான சமூகத்தில்தான் சுயமரியாதையான அரசு சாத்தியம்.,,,

அழகா முடிச்சிருக்கீங்க... நல்ல நடுநிலைமையான அலசல்...

Unknown said...

விஜயின் ஸ்டன்ட் பல்டிகள் பிடிக்கவேயிலை சுயநலத்திற்காக ரசிகர்களின் கேபத்தில் குளிர்காய்கிறார்.
படித்ததிலேயே இதுதான் விரிவான அலசல்

சாய்ரோஸ் said...

மிக அற்புதமான நடுநிலைமையான எழுத்து... சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்காமல் வெறிபிடித்து அலையும் ரசிகர் கூட்டங்களின் மனதில் உறை(தி)க்க வேண்டிய பாடம் இது... அரசியலுக்கான பாதையாக சினிமாவை மாற்றியது மக்களேயன்றி வேறு யாராகமுடியும்... மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்...

Unknown said...

அருமையான பதிவு ,நன்றி நண்பரே ...

கும்மாச்சி said...

அருமையான பதிவு. சினிமாவை வெறும் பொழுது போக்காகவே பார்க்கவேண்டும்.