Thursday 15 August 2013

என்னை கவர்ந்த தலைவர் - சே குவேரா


சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

'சே குவேரா' பற்றி தெரிந்தவர்கள் கண்டிப்பாக அவரை சிறிது பிரதிபலிப்பார்கள்,அவரது உருவம் பதித்த உடை மற்றும்பொருட்களை இன்று அணிவது வழக்கமாகிவிட்டது. எல்லோரும் அணிகின்றனர் நானும் அணிகிறேன் என்ற எண்ணமே இப்போது உள்ளது. சே யார்? எதற்காக அவரை உலக மக்கள் கொண்டாடுகின்றனர்? ஏன் சே தலைவானான்?முதலில் சே பற்றி தெரிந்து கொள்ளுங்கள், அவருக்கு தோன்றிய எண்ணங்களில் சிறிதளவு உங்களுக்கு வந்தால் மட்டுமே அவரை பிரதிபலியுங்கள். அவரை பற்றி சிறு துளிகள் மட்டுமே இங்கே....

சே குவேரா பற்றி தெரிந்துகொள்ள சில நிமிடங்கள் செலவழித்தால் அது பயனற்று போகாது, இன்றைய அரசியல் சாக்கடையில் இருக்கும் பன்றிகள் குவேராவின் படத்தை காட்டி தன்னையும் ஒரு போராளியாக காட்ட நினைக்கின்றனர். உண்மையில் சே யார்? தேடுங்கள், தெரிந்துகொள்ளுங்கள்... 'சே'வாக மாறுங்கள்...


சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.

இவ்வளவு புகழ்ச்சிக்கும் உரிய இந்த நாயகன் யார்? உலகமே இவரைக்கொண்டாட காரணம்? என்ன இன்று உலகில் பல அமைப்புக்கள் இவரை முன் மாதிரியாக கொண்டு இயங்கக் காரணம் என்ன?
அசாதாரணமான சாதனைகளையும் மிகச்சிறந்த வெற்றிகளையும் தேடித்தரக்கூடிய அந்த அசாத்தியமான மன உறுதிதான் சேவின் பயணங்களிலயும் அவரின் அரசியல் பார்வையிலும் அவரின் ராணுவ தலைமையிலும் மற்றும் பொருளாதார நிர்வாகத்திலும் வெளிப்பட்டது. எல்லையற்ற இம்மன உறுதியின் ஊற்றுக்கண்ணை விட அதன் தாக்கம் தான் முக்கியம் ஆனது. யோசித்து கூட பார்க்க முடியாத செயல்களை மேற்கொள்வதற்கும் மிகவும் தெளிவான ஈவு இரக்கமற்ற சுய பகுப்பாய்வை நடத்துவதற்கும் எர்னெஸ்ற்றோ குவேராவிட்கு இருந்த தன்னம்பிக்கையை ஒரு சில மனிதர்கள் மட்டுமே பெற்றிருக்கிறார்கள்.

பூர்வகுடிகளாக செவ்விந்தியர்கள் வாழ்ந்த மண்ணில், வந்து விழுந்தான் கொலம்பஸ். புதிதாக ஒரு நாட்டைக் கண்டு பிடித்துவிட்ட உற்சாக வெறி!ஆயிரக்கணக்கான ஸ்பானிய வீரர்கள், பூர்வகுடிகளை கூட்டம் கூட்டமாக வெட்டிச் சாய்த்தனர். எஞ்சியவர்களை அடிமையாக்கினர். பின்னர், ஸ்பானியர்கள் கூட்டம்கூட்டமாக கியூபாவில் குடியேறினர்.
உலகின் சக்கரைக் கிண்ணம் என்று வர்ணிக்கப்படும் நாடு. கிட்டத்தட்ட தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் ஸ்பானிய அமெரிக்கா எனக் குறிப்பிடும் அளவுக்குக் குடியேற்றம் நிகழ்ந்தது. கியூபாவின் வளத்தை ஸ்பானிய அரசு அட்டை போல் உறிஞ்சத் தொடங்கியது. இந்த அடிமை வாழ்வில் அவ்வப்போது புரட்சியின் தீப்பொறிகள் தோன்றி மறைந்தன.


1890ல் ‘ஹொஸே மார்த்தி’ எனும் கவிஞனின் தலைமையில் பூர்வகுடிகள் அணி திரண்டனர். புரட்சி துவங்கிய வேகத்திலேயே, ஸ்பானிய அரசு ஹொஸேவைச் சுட்டுக்கொன்று, புரட்சியை வலுவிழக்கச் செய்தது. ஆனால், மக்களின் நெஞ்சங் களில் அந்த நெருப்பு மட்டும் அணை யாமல் இருந்தது. புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா உதவி செய்ய ஸ்பானிஷ் ,அமெரிக்க யுத்தம் தொடங்கியது. 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். தென் அமெரிக்கா முழுக்கத் தொழுநோய் பீடித்தி ருந்த காலம். அது குறித்து ஆய்வு செய்யவும், அதற்குத் தங்களால் எதுவும் மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற தேடலுமே அந்தப் பயணத்துக்கான ஆரம்பம். 


 பெரு (Peru) நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. தொழுநோயாளிகளின் தங்குமிடங்களைத் தேடித் தேடிச்சென்று, அவர்களின் தோளில் கை போட்டு உண்டு, உறங்கி, கால் பந்தாடிய ‘சே’வின் உள்ளத்தில் பலவிதமான போராட்டங்கள் தொழு நோயாளர்களிடம் அவர் காட்டிய பரிவு மற்ற மனிதர்களிடம் இருந்து அவரை பிரித்துக் காட்டியது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி “மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் உடன் பயணித்த கிரனாடோவால் எழுதப்பட்ட புத்தகம் உலகப் பிரபல்யம் பெற்றது இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

சேவின் வாழ்வை முழுவதுமாக புரட்டிப் போட்ட பயணம் அது. இதுவரையும் அவரின் மேல் புரட்சியின் எந்த சிறுநிழலும் விழுந்திருக்கவில்லை. புத்தக வாசிப்பு, நண்பர்கள், விளையாட்டு என அவரது உலகம் உல்லாசமாக இருந்தது. ஆனால் இந்த பயணம் அவருக்கு பல படிப்பினைகளை தந்தது. தென் அமெரிக்கக் கண்டம் முழுவதும் மக்களின் ஏழ்மை, பிணி, அறியாமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு, வர்க்க வேறுபாடுகளுக்குக் காரணமாக அமெரிக்காவும் அவர்களது சி.ஐ.ஏ. உளவு நிறுவனமும் செயல்படுவதை அறிந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அனைத்துக்கும் வாஷிங்டனும் அதன் முதலாளித்துவமும் மட்டுமே காரண மாகக் கண்டறிந்தார்.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக மார்க்க்சியம் அவர் சிந்தனையில் தோன்றியது. மார்க்சியம் என்றால் மார்க்சியம் என்பது கார்ல் மார்க்கஸ் போன்ற மேய்யியலாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை ஆகும். மார்க்சியம் (Marxism) என்பது கார்ல் மார்க்ஸ், மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய மெய்யியலாளர்களின் ஆய்வுகள், எழுத்துக்கள் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்தப்படும் உலகப்பார்வை ஆகும். மார்க்சியம், பொருளியல், அரசியல், மெய்யியல் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அடிப்படையில் மார்க்சியமானது, இயங்கியல் பொருள்முதல்வாத கருத்தியலின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட மெய்யியலாகும்.

மெய்யியல்கள் எல்லாம் உலகை விளக்குவதையே தமது தன்மையாக கொண்டிருக்க, புரட்சி மூலம் உலகை மாற்றியமைப்பது பற்றி பேசுவதால், மார்க்சியம் உலகில் நிகழும் பல்வேறு போராட்டங்களுக்கும் புரட்சிகளுக்கும் அடிப்படை சித்தாந்தமாக அமைகிறது. இதனை பொது உடமை என்றும் வரையறுக்கின்றார்கள்.


இறுதியாக 1952, ஜூலை மாதம் அந்த நெடிய பயணம் முடிவுக்கு வந்தபோது, ‘சே’ முழுவதுமாக மாறியிருந்தார். இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது.

1955 ஆம் ஆண்டு கியூபா மண்ணின் தலைஎழுத்தை மாற்றிய அந்த சந்திப்பு, ஜூலை மாதம், ஒரு இரவில் மெக்ஸிகோ நகரத்தில் சேகுவேராவும் ஃபிடல் காஸ்ட்ரோ வும் சந்தித்தனர். வெவ்வேறு துருவங்கள். இணைந்த தருணம் கியூபா வளர்ச்சியின் அஸ்திவாரம். அப்போது ‘சே’வுக்கு வயது 27. காஸ்ட்ரோவுக்கு 32. காஸ்ட்ரோவுக்காவது கியூபா தன் சொந்த நாடு. போராட வேண்டிய அவசியம் இயல்பானது. ஆனால் ‘சே’வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தில், அம்மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து ஆயுதம் எடுப்பதென்பது, உலக வரலாற்றில் எப்போதும் எங்கும் நிகழ்ந்திராத ஒன்று. இதனால்தான் ‘சே’ மனிதருள் மாமனிதராக அடையாளம் காணப்பட்டார். அமெரிக்காவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரன் இறுதியில் சுட்டுக்கொள்ளப்பட்டார்.



சே குவேரா கையெழுத்து 
மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதன் தான் சே, சே குவேராவை இன்றும் போற்றும் மக்கள் அவரைப்பற்றி இழிவாக வெளிவரும் செய்திகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்கள் என்பதே உண்மை. இன்றும் மக்களில் பலர் சுதந்திரத்திற்காகக் கதறுகின்றனர், சே குவேராவின் சிந்தனையும் இலட்சியங்களும் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை.

இதனை பகிர்வதற்கு நாம் ஒன்றும் பெறும் போராளியாக இருக்கத் தேவையில்லை, ஒரு போராளியின் எண்ணங்களை சரி என்ற எண்ணத்தில் பின் தொடர்பவனாகவே இதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

நன்றி-இணையம்

4 comments:

வெற்றிவேல் said...

சுதந்திர தின நல் வாழ்த்துகள்... சே பற்றி அனைவருக்கும் தெரியும்... நல்ல மனிதர், இந்த இனிய நாளில் ஒரு பெரும் போராளியைப் பற்றி கூறியுள்ளீர்கள்... மகிழ்ச்சி... ஆனால் இந்த இனிய நாளில் இந்தியப் போராளிகள் பற்றி குறிப்பிட்டுருந்தால் இன்னும் பெருமைப்படுத்தியிருக்கும்...

பகிர்விற்கு நன்றி...

கவியாழி said...

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அருமையான மனிதரைப் பற்றிய பகிர்வு.
இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

விமல் ராஜ் said...

இந்நன்னாளில் சே குவேரா-வை பற்றிய தகவலுக்கு நன்றி .....