Thursday 5 September 2013

உங்களை நம்புங்கள் - வெற்றி நமதே !



தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடா முயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் சொல்லுகிறோம் இவைகளையெல்லாம் சும்மா வெறுமனே பின்பற்ற முடியாது, தன்னம்பிக்கை இருந்தால்தான் அவைகளெல்லாம் கைகூடும். எனவே எல்லாவற்றிர்க்கும் அடிப்படை தன்னை நம்புதலாகும். ஒரு வாகனத்தை, ஒரு இரயில் வண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தி தள்ளி விடுகிறதல்லவா, அது போல தன்னம்பிக்கை என்னும் மனித சக்தி நம்மில் நிறைந்திருந்தால்தான் அது முன்னேற்ற பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும்.

சிறிதளவேனும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது, பிச்சைக்காரன் கூட நான் பிச்சையெடுத்தால் இவ்வளவு சம்பாதிப்பேன் என்ற தன்மீதுள்ள நம்பிக்கையில்தான் களத்தில் இறங்குகிறான், இயற்கையிலே நாம் நம்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம், ஆனால் அது போதுமான அளவு இருப்பதில்லை அதை வளர்த்துக் கொள்வதே நம் வளச்சிக்கான சரியான வழியாகும். சிறிதளவே நம்பிக்கையை வைத்துக்கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம், முழுவதுமாக நிரம்பப்பெற்ற நம்பிக்கையே வெற்றியின் உச்சியில் நம்மை கொண்டுசெல்லும்.

உங்கள் பலகீனங்களை விட பலத்தை அதிகப்படுத்துங்கள், சோம்பல்களை விட உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள், அறியாமையை விட அறிவை அதிகப்படுத்துங்கள், எதிர்மறை சிந்தனைகளை விட நேர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துங்கள் இப்படி உங்களிடமுள்ள அழிவு சக்திகளை விட ஆக்க சக்திகளை அதிகரிக்கச் செய்யும்போது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அப்படி ஏற்படும் நம்பிக்கையை குறைக்கவிடாமல் தினந்தோறும் அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். நேற்றைவிட இன்று வளர்சியடைந்துள்ளேன், இன்றை விட நாளை வளர்ச்சியடைவேன் என்பதில் உறுதியாயிருங்கள்

தன்னம்பிக்கைக்கும் ஆழ்மனதிற்கும் நெருங்கிய தொடர்புண்டு, ஆழ் மனதின் வல்லமையை தட்டி எழுப்ப நம்பிக்கை தருகின்ற விஷயங்களை, வார்த்தைகளை அதற்கு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். எத்தனை தோல்விகளை நீங்கள் சந்தித்திருந்தாலும் 'வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு' எனவே விழித்துக்கொள், வெற்றியை நோக்கி விரைந்திடு சற்றும் தாமதியாதே என்று ஆழ்மனதில் பதித்துக்கொள்ளுங்கள், உங்கள் லட்சியத்தையும் பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள்.

வெறுமனே ஒரு மொபைல் போன் வாங்குவதையோ, டிவி வாங்குவதையோ, கம்ப்யூட்டர், பைக், கார், அழகான வீடு போன்றவற்றை வாங்குவதையோ லட்சியமாக கொள்ளாதீர்கள் அவைகள் லட்சியத்தின் சிறு பகுதியாகவே இருக்கட்டும். , நீங்கள் இதைவிடவும் பெரிய லட்சியத்தை கொண்டிருங்கள், ஏனைனில் பெரும்பாலும் கார், பங்ளா போன்ற இவைகளெல்லாம் தன்னம்பிக்கையினால் கிடைப்பதாக இருக்காது அளவுகடந்த ஆசையின் வேகத்தினாலே கிடைப்பதாகவே இருக்கும், எனவே தன்னம்பிக்கை என்னும் உந்து சக்தியை உயர்ந்த குறிக்கோளை நோக்கி வைங்கள்.

இவனா! இவனுக்கு என்ன தெரியும், இவனுக்கு ஒன்றுமே தெரியாது, இவனிடம் அப்படி ஒன்றுமில்லை இப்படி உங்களைப் பற்றி பேசுகிறவர்களுக்கு நீங்கள் நிரூபிக்க வேண்டியது உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்பதைதான். நீங்கள் யாராகவும் இருக்கலாம், படிக்காதவர்களாக இருக்கலாம் பரவாயில்லை தன்னம்பிக்கை கொள்ளுங்கள், உங்கள் ஆர்வத்தை, திறமையை சற்று கண்ணோட்டமிடுங்கள் அடுத்த கணமே களத்தில் இறங்குங்கள் எதையாவது சாதியுங்கள், திரும்பி பார்க்க வேண்டாம் உங்கள் கண்முன்னே தெரிவதெல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக இருக்கட்டும், வெற்றி படிகளில் பயணியுங்கள் மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணியாகுங்கள் இனி நாளை காலம் என்றும் நம்மோடுதான்.

இது ஒரு மீள் பதிவு..

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நம்மிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்பதை நாம் உணர்ந்தால் போதும்... அடுத்தவர்களுக்காக என்று ஆரம்பித்தால்...............................................