Tuesday 24 September 2013

மன வருத்தம் தந்த சினிமா நூற்றாண்டு விழா


செப்டம்பர் 21 ஆம் தேதி முதல்வர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவின் சில அம்சங்கள் திரையுலகினருக்கும், பிறருக்கும் மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கியமாக திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் தரப்படவில்லை. விழாவுக்கு முந்தைய நாள் வரை இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு அழைப்பிதழ் தரவில்லை என அவரே இன்னொரு மேடையில் தெரிவித்தார்.

பாலுமகேந்திரா தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைமொழி கொண்ட படைப்பாளி. தமிழின் சிறந்த பத்துப் படங்களை தேர்வு செய்தால் அவரின் வீடு படமும் இடம்பெறும். திரைப்படத்தை எப்படி அணுக வேண்டும், எப்படி அதனை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தமிழ் சினிமா துறையில் அறிமுகப்படுத்தியவர் அவரே. அவரிடம் உதவி இயக்குனர்களாக யார் இருந்தாலும் தினம் ஒரு கதையை படித்து அதன் கதைச் சுருக்கத்தை எழுதித்தர வேண்டும். கண்டிப்பான தினம் ஒரு கதையாவது வாசிக்க வேண்டும்.

இதன் காரணமாகதான் வேறு எந்த இயக்குனருக்கும் இல்லாத அளவுக்கு பாலா, வெற்றிமாறன், ராம், சீனு ராமசாமி என அவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் தமிழின் முன்னணி இயக்குனர்களாக பரிணமித்திருக்கிறார்கள் அவருக்கே அழைப்பில்லை.


இதில் உச்சகட்ட சோகம் நம்ம இளைய தளபதியை ஓரம்
கட்டியதுதான். பொதுவான விழாவுக்கு சொந்த கோபதாபங்களை காட்டுவது சரியானதல்ல. ஆனால் காலங்காலமாக அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. கடைசி சீட்டில் உட்கார வைப்பதால் விஜய்யின் மவுசு எதுவும் குறைந்துவிடப் போவது இல்லை. அதே நேரம் மனரீதியாக தொடுக்கப்படும் இந்த தாக்குதல்கள் எந்த நடிகருக்கும் நெருக்கடியானதே.

இதுபோன்ற நெருக்கடிகளை வெளிப்படையாக அணுக முடியாத மொண்ணையான அமைப்பாக திரைத்துறை இருப்பதுதான் கவலைக்குரியது. கேரளாவிலோ, ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ இப்படி ஒரு நடிகரை தனியாக கட்டம் கட்ட முடியுமா?

விழா நடந்த அரங்கில் அழைப்பிதழ் வைத்திருந்த திரையுலகினர் பலரும் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் அழைப்பிதழ் இல்லாத அதிமுக பிரமுகர்கள் போலீஸால் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதல்வர் கிளம்பியதும் கூடவே கிளம்பிச் சென்றது முக்கியமானது.

திரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கிய போது பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் முன் வரிசையில் அமர்ந்திருக்க விவேக், சிம்ரன், த்ரிஷாவுக்கெல்லாம் விருதுகள் வழங்கப்பட்டன. பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், எம்.எஸ்.விஸ்வநாதன் போன்றோருக்கு விருதில்லை. அதேபோல் கே.ஆர்.விஜயா, அஞ்சலி தேவி உள்ளிட்ட மூத்த கலைஞர்களும் முறையாக அழைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. குரூப் போட்டோ எடுத்த போது பின்வரிசையில் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார் ரஜினிகாந்த்.


விழா சரியாக திட்டமிடப்படவில்லை திறமையான பலரும் விருது வழங்கி கௌரவிக்கப்படவில்லை என பரவலான அதிருப்தி உள்ளது. கலை நிகழ்ச்சிகளும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. கன்னட திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகள் நேற்று நடந்த போது முக்கால்வாசி அரங்கம் காலியாக இருந்தது. சென்னை வந்திருக்கும் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் திரளாக விழாவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் யாரையும் காணவில்லை.

இயக்குனர்கள் சங்கம் சார்பில் விழா மலர் ஒன்றை வெளியிடுவதாக இருந்தனர். தொடக்கநாள்வரை அந்த மலர் தயாராகவில்லை. தமிழுக்காக அல்லும் பகலும் பாடுபடுகிறேன் என்று அங்கீகாரம் கோரும் ஆர்.கே.செல்வமணி போன்றவர்கள் நிறைந்திருந்தும் இயக்குனர்கள் சங்கத்தால் ஒரு மலரை குறிப்பிட்ட தேதியில் தயாரிக்கவோ, வெளியிடவோ முடியவில்லை.

தமிழின் முக்கிய படங்கள், ஆரம்பகால சினிமாக்கள் அழிந்துவிட்டன. முதல் தமிழ் மௌனப் படமான கீசகவதத்தின் பிரதி யாரிடமும் இல்லை. கீசகவதம் மட்டுமின்றி நடராஜ முதலியார் எடுத்த எந்தப் படத்தின் பிரதியும் இன்று நம்மிடம் இல்லை. இருக்கிற படங்களையாவது டிஜிட்டலில் முறைப்படி பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் அரசின் செவிகளை எட்டவில்லை. பாலுமகேந்திராவின் பல படங்களின் பிரதிகூட இன்று இல்லை. இப்படியொரு சூழலில் அவற்றை பாதுகாக்க ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் அதுதான் ஆக்கப்பூர்வமாக அமைந்திருக்கும். கோடிகள் செலவழித்து டான்ஸ் புரோக்கிராம் நடத்துவதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. தொலைக்காட்சியில் ஒளிபரப்பி காசு பார்க்கலாம்.

பழைய படங்களை ஆவணப்படுத்தும் முயற்சி எப்போது மேற்கொள்ளப்படுகிறதோ அப்போதுதான் சினிமா நூற்றாண்டு விழா போன்ற கொண்டாட்டங்களுக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.

நன்றி!

2 comments:

Manimaran said...

சினிமாவில் புகழ் பெற்று முதல்வர் ஆன ஒருவருக்கு திரையுலகத்தினரை மதிக்க தெரியவில்லை... வெட்கக்கேடு..

திண்டுக்கல் தனபாலன் said...

தண்டச் செலவு...