Saturday 14 September 2013

சண்டைக்களமாகும் நடிகர் சங்கம்


பெரிய பெரிய ஜாம்பவான்களின் முயற்சியால் உருவானது நடிகர் சங்கம். அன்று மதராசப்பட்டிணமாக இருக்கையில் தென்னிந்திய மொழிப் படங்களுக்கு தமிழகம்தான் சினிமா தலைநகரமாக இருந்தது. மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு மாநிலங்களும் தங்களுக்கென்று தனித்தனி நடிகர் சங்கங்களை உருவாக்கிக் கொண்டன. பொதுவான ஒன்று என எந்த மாநிலத்திலும் இல்லை.

தமிழன் இளிச்சவாயன் ஆயிற்றே. தமிழகத்தில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரில் நடிகர் சங்கம் இயங்கி வருகிறது. கேட்டால் அர்ஜுன், பிரகாஷ்ராஜ் அமலா பால், நயன்தாரா என்று எல்லா மொழி நடிகர்களும் நடிப்பதால் இந்த பெயர் என்கிறார்கள். விளக்கெண்ணைய். மலையாளத்திலும்தான் கமல், மீனா, தேவயானி தொடங்கி எல்லோரும்தான் நடிக்கிறார்கள். தெலுங்கு, கன்னடத்திலும் அப்படித்தானே? தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் என்று பெயர் வைக்கும்வரை என்னுடைய மகன் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆக மாட்டான் என்று சில வருடங்கள் முன் பாரதிராஜா அறிவித்தார். மனோஜ் கே. பாரதி நடிகர் சங்க உறுப்பினரா தெரியாது. ஆனால் பாரதிராஜாவின் கோபத்தில் நியாயம் உண்டு.


கடன் மேலும் கடன் என்று தத்தளித்த சங்கத்தை மீட்டெடுத்தவர் விஜயகாந்த். அவர் தலைவராக இருந்த நேரம் வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி நடத்தி சங்கக் கடனை அடைத்தார். சங்க வங்கிக் கணக்கில் எட்டு கோடிவரை பணமும் கையிருப்பில் இருந்தது. ஆனால் இன்று...?

இந்தக் கேள்விக்குறிதான் இப்போதைய பிரச்சனைக்கு முழுக் காரணம். சரத்குமார் தலைவர், ராதாரவி செயலாளர் என்று ஆன பிறகு முறையாக கணக்கு காட்டப்படவில்லை என்பது முதல் குற்றச்சாட்டு. இரண்டாவது, பொதுக்குழுவின் அனுமதியில்லாமல் தனியாருக்கு சங்க இடத்தை தாரை வார்த்தது.

18 கிரவுண்ட் நிலம் சங்கத்துக்கு சொந்தம். அதில்தான் கம்பீரமாக நின்றது சங்கக் கட்டிடம். அதில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டலாம், செலவேயின்றி நமக்கும் கட்டிடம் கிடைக்கும், தியேட்டர் கிடைக்கும் என்றெல்லாம் ஆசைகாட்டி நிலத்தை தாரை வார்த்தனர். சத்யம் குழுமத்துடன் ஒன்றரை கோடிக்கு 2010 நவம்பர் 25 ஆம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதற்கான அனுமதியை கூட்டம் போட்டு கேட்டது 2011 ஜனவரி 19 ல். சாந்தி முகூர்த்தம் முடிந்த பின் கல்யாணத்துக்கு நாள் குறித்த கதை. முதல் டென்ஷன் இதில்தான் தொடங்கியது. சொந்த தோட்டத்தை விற்று அதில் கூலிக்கு வேலை செய்ய சேர்ந்தால் எப்படியோ அப்படிதான் சங்க நிலத்தை தனியாருக்கு தாரை வார்த்ததும். அதை செய்ய சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் என்ன அதிகாரம் இருக்கிறது என்பது அவர்களை எதிர்ப்பவர்களின் கேள்வி?

முறையாக அனுமதி வாங்காமல் சங்கக் கட்டிடத்தை இடித்ததால் வழக்கு தொடரப்பட்டு கட்டிடம் இருந்த இடம் இப்போது கழிப்பறையாக கேட்பாரின்றி கிடக்கிறது. சங்கத்தின் கையிருப்பு என்னவாயிற்று என்பது இன்னொரு கேள்வி.


இதனை யார் கேட்டாலும் அதிகாரத்தை வைத்தும் சங்க விதிகளை காட்டியும் அவர்களை கட்டம் கட்டும் வேலையை ராதாரவி செம்மையாக செய்து வருகிறார். இவர்களுக்கு மணிகட்ட துணிந்தவர் விஷால். துணைக்கு ஆர்யா, கார்த்தி, சூர்யா என்று இளம் டீம். இவர்களின் கையெழுத்து வேட்டைக்கு ஆதரவாக சிவகுமார், நாசர், கமல்ஹாசன் போன்ற பெரிய தலைகளும் ஆதரவு தந்திருக்கிறார்கள். நெருக்கடி முற்றிய நிலையில் வரும் 18 ஆம் தேதி பேரவை கூட்டத்தை சரத், ராதாரவி தரப்பு கூட்டியிருக்கிறது.

பேரவை கூட்டத்துக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது, உறுப்பினர் அட்டை இல்லாதவருக்கு, அரங்க வாசலில் கையெழுத்து இடாதவருக்கு அரங்கத்தில் அனுமதி இல்லை என ஏக கெடுபிடி. அதேபோல் நிகழ்ச்சி நிரலிலும் அவர்களின் ஆதிக்கம் தான். ஆண்டறிக்கையை - வரவு செலவு கணக்குகளை படித்து ஏற்றுக் கொள்ளுதல். சங்கத்தை பற்றியும், பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களை பற்றியும் விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வந்த நூற்றுக்கணக்கான கடிதங்கள் பற்றி முடிவெடுத்தல் என்று எல்லாமே அதிகாரத்தின் கட்டளைகள் போலிருக்கிறது.

இந்த இடத்தில் இன்னொரு விஷயம். ஒவ்வொரு ஆண்டிற்கான சந்தாவையும் ஜனவரி 31 க்குள் கட்ட வேண்டும். நடிகர் பூச்சி முருகன் உள்ளிட்ட சிலர் ஜனவரி 5 ஆம் தேதியே டிடி எடுத்து அனுப்பியிருக்கிறார்கள். நேரில் பணம் கட்டியிருக்க வேண்டும், டிடி செல்லாது என்று பிப்ரவரியில் டிடி யை திருப்பியனுப்பியிருக்கிறார்கள். அதாவது பூச்சி முருகனும் மற்றவர்களும் சங்க உறுப்பினராக இனி தொடர முடியாது.


இந்நிலையில் பேரவை கூட்டத்தின் நோட்டீஸில் இதற்கு நேரெதிரான வாசகம் ஒன்றை சேர்த்திருக்கிறhர்கள்.

2013 ஆம் ஆண்டு சந்தாவை 31-03-2013 க்குள் செலுத்தத் தவறியதால் சங்க விதி எண் 11 ன்படி உறுப்பினர் பதவி இழந்தவர்கள் சிலர் தங்களுக்கு நிவாரணம் அளிக்கக் கோரி நிர்வாகிகளிடம் கொடுத்த விண்ணப்பங்கள் பற்றி முடிவெடுத்தல்.

சந்தாவை ஜனவரி 31 க்குள் செலுத்தவில்லை என்று பூச்சி முருகன் உள்ளிட்ட சிலரின் உறுப்பினர் உரிமையை ரத்து செய்திருக்கிறார்கள். ஆனால் இதில் கடைசிதேதி 31-03-2013 என குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் வாசகம் உள்ளது.

நடிகர் சங்கத்தில் ராதாரவிக்கு ஆதரவான நாடக நடிகர்கள் அதிகம் பேர் உள்ளனர்.


தேர்தல் நேரத்திலும் இதுபோன்ற இக்கட்டான நேரங்களிலும் அவர்களின் ஆதரவுதான் ராதாரவியையும் மற்றவர்களையும் காப்பாற்றுகிறது. நடிகர் சங்கத்தில் காலாவதியான நாடக நடிகர்கள் எதற்கு என்று நாசர் உள்ளிட்டவர்கள் கேள்வி கேட்பது இதனால்தான். சிவாஜி, பாலையா என்று நடிகர் சங்கத்தை உருவாக்கியவர்களே நாடகத்திலிருந்து வந்தவர்கள்தான் என்று இதற்கு ராதாரவி ஆதரவாளர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். சிவாஜி நாடகத்திலிருந்து வந்திருக்கலாம். ஆனால் அவர் சினிமா நடிகர். ஆனால் இங்கு உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலானோர் சினிமாவில் நடிக்காதவர்கள். ஊரில் செட்டிலாகிவிட்ட காலாவதியான நாடக நடிகர்களை கைக்குள் போட்டு பெரும்பான்மை எங்களுக்குதான் என்று சங்கத்தை புதைகுழியில் தள்ளிக் கொண்டிருக்கிறார் ராதாரவி என்பது எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு. அந்த நாடக நடிகர்களை மீண்டும் உறுப்பினர்களாக்கும் முயற்சியின் வெளிப்பாடுதான், உறுப்பினர் பதவி இழந்தவர்களுக்கு கருணைகாட்டும் மேற்படி வாசகம்.


சங்கத்தின் சொத்துக்களை நிர்வகிக்கவும், வளர்ச்சி பணிகளை கண்காணிக்கவும் உருவாக்கப்பட்ட ட்ரஸ்டில் தலைவர், செயலர், பொருளாளர் உள்பட ஒன்பது பேர் இருக்க வேண்டும். ஆனால் சரத்குமார், ராதாரவி தவிர வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. சர்ச்சைக்குப் பின் வாகை சந்திரசேகரை மட்டும் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். அதேபோல் சங்க செயற்குழுவில் நான்கைந்து பேரைத் தவிர மற்ற அனைவரும் பெயரும் முகமும் தெரியாத ராதாரவி ஆதரவு நாடக நடிகர்கள்.

சங்கம் இன்று ராதாரவி எனும் தனி மனிதனின் ஆட்சிக்குட்பட்ட தனியார் நிறுவனமாகதான் இயங்குகிறது. அதனை கேள்விக்குட்படுத்தும் எவரையும் கட்டம் கட்டுவதற்கு கூட்டப்பட்டதுதான் 18 ஆம் தேதி நடக்கயிருக்கும் பேரவை கூட்டம். ராதாரவியையும், சரத்குமாரையும் தூக்கியெறியாதவரை நடிகர் சங்கத்துக்கு விமோசனமில்லை என்பதுதான் இளம் நடிகர்களின் கூற்றாக இருக்கிறது. நடக்கிற விஷயங்களும் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.

நன்றி-சினிமா செய்திகள்

4 comments:

Manimaran said...

இந்த இடத்தில் விஜயகாந்தின் நிர்வாகத்திறமையை பாராட்டியே ஆகவேண்டும். சிவாஜி தலைவராக இருந்த காலந்தொட்டே கடனில் சிக்கித்தவித்து நடிகர் சங்கம். அந்தக் கடனை மொத்தமாக அடைத்து கையிருப்பு 8 கோடி என்கிற நிலையில் அவர் சங்கத்தை விட்டு போனார். இன்று தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள். யார் கேள்வி கேட்கப்போகிறார்கள் என்கிற மமதையில் ஏற்பட்ட அலட்சியப்போக்கால் இந்த நிலைமையில் வந்து நிற்கிறது.

Selva Kumar said...

Vijayakanth, Radha Ravi, Vaagai Chandrasekar, SS Chandran all are friends. After MGR, Radharavi nadigar sanga thalaivar aanar. Ramarajan uchathil iruntha pothu kooda avaraal vella mudiyavillai. Appuram, Radharavi, Vijayakanthai appoint panninaar. Athukkappuram avar Mapillai Sarathkumar.

சிம்புள் said...

உண்மை விஜயகாந்த் ஒரு கட்சி ஆரம்பித்ததும் தார்மீக பொறுப்பேற்று நடிகர் சங்க தலைவர் பதவியை விட்டு விலகினார்.அதற்கான கரணங்கள்
தான் ஒரு கட்சி ஆரம்பித்தும் நடிகர் சங்கத்தை நடத்தினால் பக்கசார்பாக நடக்கிறார் போன்ற தர்ம சங்கடங்களை சந்திக்க வேண்டிவந்திருக்கும், தான் சொன்னவாறே முழுநேர அரசியல்வாதியாகி விட்டார்.நடிப்பதையும் கைவிட்டு விட்டார். ஆனால் சரத்குமார் கட்சித்தலைவராக இருக்கிறார், நடிக்கிறார், நடிகர் சங்க தலைவராகவும் இருக்கிறார்,குறுகிய வட்டத்துக்குள் பயணிப்பவர்களுக்கு ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது இலகுவாக இருக்கலாம்.ஆனால் இவருக்கு அப்படியா ? போதாது என்று நடிகர் சங்கத்தை முங்கா போட்டாகி விட்டது. பல பிரச்சனைகளுக்கு நடுவில் கட்சியை எப்படி வளர்ப்பார்? அ.தி.மு.க புண்ணியத்தில் கிடைத்த 2 M.L.A பதவிகளோடு ஜால்ரா போடும் ஒரு உதிரி கட்சியாக முடங்கி விட்டது ,அதை எப்படி சரி செய்வார்? தான் ஒரு பிரபலம் என்பதையும் மறந்து இன்னும் ஜட்டி,பனியன் விளம்பரத்தில் நடித்துகொண்டிருக்கிறார். சரி தொகுதி மக்களுக்காவது எதாவது செய்திருக்கிறாரா என்றால், சில மாதங்களுக்கு முன் சிவகாசி M.L.A யை காணவில்லை என்று போஸ்டர் அடித்ததிலேயே புரிகிறது. எதற்காக இவ்வளவு வேண்டாத வேலைகள் ? பலரின் பிழைப்பையும் கெடுத்து தன் பெயரையும் கெடுத்து, நமக்கு எது வருதோ அத ஒழுங்கா செய்யணும், ரெட்ட தோணில கால் வைச்சா இப்படி தான்.

அடுத்து இவர் மனைவி சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராம், அங்கே இவர் பண்ணிய அட்டூழியங்கள் எல்லாம் இப்போது தான் வெளியே வருகின்றன. இப்படி அதிகார பலத்தை காட்டி மொத்த பதவிகளையும் இவர்களின் குடும்பத்துக்கே கொடுத்து விட்டால் மத்தவங்களுக்கு என்ன சட்னியா? ஆட்சியையே 5 வருடத்தி தூக்கி எறியலாம்.,இவர்களை தூக்க வழி இல்லையா? விஷால் மூலமாகவாவது விடிவு கிடைகிறதா பார்க்கலாம்

சாய்ரோஸ் said...

சங்கத்து ஆள அடிச்சது எவன்?... என்ற கைப்புள்ளயின் டயலாக்தான் நியாபகம் வருகிறது... ;-)

சரத்குமார் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டி கிழிச்சகதைய வுட்டுப்புட்டீகளே...