வாலி என்றாலே ஜாலிதான். கவிதையாகட்டும், பேச்சாகட்டும் எதுகைக்கும் மோனைக்கும் நடுவில் ஹாஸ்யம் உருண்டோடும். பொதிகையில் 82 வாரங்கள் வாரம் ஒருமுறை வாலி பேசியதை கேட்டவர்கள் பாக்கியவான்கள். அவருக்கே அந்த 82 வாரமும் வசந்தகாலம்தான். அவரே சொல்லியிருக்கிறார். விகடனில் படம் வரைந்த மாலியைப் போல நீயும் வரணும் என்று ரங்கராஜனுக்கு அவரது நண்பர் வைத்த பெயர்தான் வாலி. அப்போதே தொடங்கிவிட்டது எதுகையும் மோனையும்.
அந்த 82 வார நிகழ்ச்சியை அப்படியே எழுத்து வடிவில் புத்தகமாக்கியிருக்கிறார் நெல்லை ஜெயந்தா. பெயர் வாலிப வாலி. வாலியை ஆரம்ப காலத்தில் எழுதத் தூண்டியவர்கள் இருவர். கவிஞரும் எழுத்தாளருமான ந.பிச்சமூர்த்தி. இன்னொருவர் என்.எஸ்.கிருஷ்ணன்.
என்.எஸ்.கிருஷ்ணனிடம் வாலியை அறிமுகப்படுத்துகிறார்கள். என்.எஸ்.கே. எப்படிப்பட்ட ஆள். "ஓஹோ நீரு கவிஞரா" எனக் கேட்டு முயல் ஆமை கதையை கூறியிருக்கிறார்.
"முயல் ஆமையிடம் ஏன் தோற்றது?" - இது என்.எஸ்.கே.
"முயல் தூங்கிப் போச்சு அதனால் தோற்றது" - இது வாலி.
ஒத்துப்பாரா என்.எஸ்.கே.? மறுபடியும் அதே கேள்வி. மறுபடியும் அதே பதில். ஒருவழியாக விளையாட்டு முடிந்து, என்.எஸ்.கே. சொன்னார்.
"முயல் ஆமையால் தோற்றது."
அதையே நாலைந்து முறை சொல்லச் சொல்கிறார்.
முயல் ஆமையால் தோற்றது... முயல் ஆமையால் தோற்றது... முயல்லாமையால் தோற்றது... முயலாமையால் தோற்றது...
யுரேகா... வாலி கண்டுபிடிச்சிட்டார். முயலாமையால் முயல் ஆமையிடம் தோற்றது.
என்.எஸ்.கே. வாலியிடம் இப்படி சொல்லியிருக்கிறார்.
"கண்டுபிடிச்சே. ஆனா தாமதமாதான் கண்டுபிடிச்சே. அதனால தமிழ் உனக்கு தாமதமாத்தான் சோறு போடும்."
அந்த காலகட்டத்தில் திராவிட பேச்சாளர்களையும், பெரியாரையும் கடந்துதான் யாராக இருந்தாலும் வர வேண்டும். பெரியாரும் அவரது கழகமும் அப்போது சுனாமி மாதிரி.அந்தச் சுழலில் இருந்து யாராலும் தப்ப முடியாது. சூரியகாந்தி நாடகத்தின் நூறாவது நாள் விழாவில் பெரியார் கையால் கேடயம் வாங்கினார் வாலி. அன்றைக்கும் நாடகம் போட்டார்கள். மேடைக்கு எதிரே ஜமுக்காளம் விரித்து தனது நாயுடன் அமர்ந்துவிட்டார் பெரியார். ஒரு காட்சியில் பெரியார் வேடத்தில் ஒருவர் வர பெரியாரின் அருகிலிருந்த நாய் ஓடிச் சென்று அந்த டம்மி பெரியாரின் வேட்டியை கிழித்திருக்கிறது. பெரியார் கைத்தடியை தட்டி நாயை அழைத்த பிறகே அது அடங்கியிருக்கிறது. கம்பன் வீட்டு கட்டுத்தறி கவிபாடுகையில் பொரியாரின் நாய் ரௌத்திரம் பழகியதில் என்ன வியப்பு.
நாடகம், சிறுகதை, ஓவியம் என்று அலைபாய்ந்த வாலியை திரைப்படப் பாடல்களை நோக்கி இழுத்தது ஒரு பாடல். படம் பாசவலை. தீபாவளிக்கு திருச்சி வெலிங்டன் டாக்கீஸில் படம் வெளியாகியிருக்கிறது. செம பாட்டுப்பா என்று ஒரே பேச்சு. அப்படி என்னதான் பாட்டு என்று வாலியும் பாசவலைக்கு போயிருக்கிறார்
குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி தப்பி வந்தா
குறவனுக்குச் சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனா
எட்டடிதான் சொந்தம்"
வாழ்க்கை தத்துவத்தை எட்டே வரியில் நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரியான பாடல். எழுதியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பாட்டை கேட்ட வாலிக்கு பிறகு யோசிக்க எதுவும் இருக்கவில்லை. வாலிக்குள் அலைந்து கொண்டிருந்த ஓவியனையும், சிறுகதையாசிரியனையும், நாடகக்காரனையும் அந்த எளிமையான தத்துவப்படல் துடைத்தெறிந்தது. புதிய பாடலாசிரியன் அன்று பிறந்தான்.
வாலியின் பேச்சிலர் வாழ்க்கையில் அவரின் சாயந்திர துணை ஸ்காட்ச் விஸ்கி. வழக்கம் போல பாட்டிலை திறந்து மோனத்தில் இருக்கையில் அவரைத் தேடி ஆள் வந்திருக்கிறது. செட்டியார் வெயிட் பண்றார் என்று சொல்லி. அழைக்க வந்த ஆளுக்கும் ஸ்காட்ச் தந்து, அவரை அழைக்க வேறு ஆளை வரவைத்திருக்கிறார் வாலி.
காத்திருப்பது மெய்யப்ப செட்டியார். சர்வர் சுந்தரத்தில் வாலி பாட்டெழுத வேண்டுமாம். அரை மணியில் தயாராகி பாட்டில் தந்த மயக்கத்திலேயே வாலி எழுதிய பாடல்தான் அவளுக்கென்ன அழகிய முகம்...
வார்த்தையெல்லாம் நல்லாதான் இருக்கு, வாசனைதான் சரியில்லை என்று சொல்லி ஊதுபத்தி வைக்கச் சொல்லியிருக்கிறார் செட்டியார்.
நான் ஆணையிட்டால் பாடலை வாலி முதலில் வேறு மாதிரி எழுதியிருந்தார். நான் அரசன் என்றால், என் ஆட்சி என்றால், இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்... படத்தை தயாரித்த நாகிரெட்டிக்கு உடன்பாடில்லை. ரொம்ப அரசியல் என்றிருக்கிறார். சென்சார் உறுப்பினர் பத்து வரியை நீக்கச் சொல்லியிருக்கிறார். கடைசியில் பஞ்சாயத்து வந்தது எம்ஜிஆரிடம். நானாக இருந்தால் பிள்ளையார் சுழியைத் தவிர எல்லாத்தையும் நீக்கச் சொல்லியிருப்பேன் என்றிருக்கிறார். பின்னே... அண்ணா இருக்கையில் எம்ஜிஆர், நான் அரசன் என்றால், என் ஆட்சி என்றால்... பாடுவதா? கடைசியில் அண்ணாதான் வாலிக்கு வார்த்தை தந்தார். நான் ஆணையிட்டால் தமிழகத்தில் எந்த ரயிலும் ஓடாது என்று பொதுக்கூட்டத்தில் அண்ணா பேசியதை வைத்து நான் அரசன் என்றால் நான் ஆணையிட்டால் என மாறியது. பாட்டும் இன்றுவரை சூப்பர்ஹிட்.
படகோட்டி சமயம் வாலிக்கு ஃப்ளூ காய்ச்சல், 104 டிகிரி. 7 பாடல்களில் 6 முடித்தாயிற்று. ஒன்று பாக்கி. வாலியை தொந்தரவு பண்ண வேண்டாம் வேறு யாரையாவது எழுதச் சொல்லலாம் என்கிறார் தயாரிப்பாளர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.க்கு அதில் உடன்பாடில்லை. இசைக்கசக்ரவர்த்திக்கு ஏது ஈகோ. ஆர்மோனிய பெட்டியுடன் வாலியின் வீட்டுக்கே சென்று டியூன் போட, படுத்துக் கொண்டே வாலி பாட்டெழுதினார்.
வாலி ஸ்காட்ச் அடித்தும் பாட்டெழுதியிருக்கிறார், காய்ச்சலில் படுத்தும் எழுதியிருக்கிறார். ஆரோக்கியம் இதேபோல தொடர்ந்தால் வயசில் சென்சுரி அடித்தும் எழுதுவார்.
இவை வாலி என்னும் வார்த்தை கடலின் சில துளிகள் மட்டுமே. அள்ளி குடிக்க விரும்புகிறவர்களுக்கு நெல்லை ஜெயந்தனின் வாலிப வாலி ஒரு தெள்ளிய நீரோடை என்ற நூலில்..
|
|
Tweet |
6 comments:
/// ஊதுபத்தி வைக்கச் சொல்லியிருக்கிறார் /// ஹா....ஹா....
இவரின் பல பாடல் தொகுப்புக்கள் உண்டு... சிலவற்றை எனது பதிவுகளிலும் வாசிக்கலாம்...
என்னா கவிஞர்ன்னே கருத்திற்கு நன்றி தனபால் அண்ணே
வாலிக்கும் குடிப் பழக்கம் உண்டா ? நான் அறியாத செய்தி, பல புது தகவல்கள்
வருகைக்கு நன்றி முரளிதரன் சார்
அருமை
//வாலிக்கும் குடிப் பழக்கம் உண்டா ? நான் அறியாத செய்தி, பல புது தகவல்கள் //
எல்லாப் பழக்கமும் உண்டு. ஆனந்தவிகடனில் ஆனந்தமாக எழுதியுள்ளார்.
ஆனால் நல்லாப் பாட்டும் எழுதுவதால், பொறுக்க வேண்டியதே!
பொதிகையில் பேசியது யுருயூபில் கிடைக்குமா?
தகவலுக்கு நன்றி!
Post a Comment