Tuesday 14 May 2013

வீரர்களின் குணத்தை மாற்றுகிறதா - ஐபிஎல்?

(கோவப்படும் கல்லிஸ்) 
கடந்த வெள்ளிகிழமை புனே வாரியர்ஸ் அணி கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி எடுத்த 152 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு ஆடியது. உத்தப்பாவும், ஆரோன் ஃபின்சும் ஆடி வந்தனர்.

ஆட்டத்தின் 3வது ஓவரை வீச வருகிறார் காலிஸ், உத்தப்பா நேராக அடிக்க பந்து காலிஸ் காலில் பட்டு வந்தது போல் தெரிந்தது, நேராக ரன்னர் முனை ஸ்டம்பைத் தாக்கியது. ஃபின்ச் மிகவும் வெளியே இருந்தார் என்பதில் ஐயமில்லை. எனவே பந்து காலிஸின் ஷூவில் பட்டு ஸ்டம்பை தாக்கியதா என்பதை அறிய 3வது நடுவர் அழைக்கப்பட்டார்.

ஏகப்பட்ட ரீப்ளேக்கள் காண்பிக்கப்பட்டும் காலிஸ் ஷூவை பந்து தொட்டு விட்டு வந்ததற்கான சாட்சியங்கள் இல்லை. ஆனால் காலிஸ் தீவிரமாக தன் காலில் பட்டுத்தான் பந்து ஸ்டம்பில் பட்டது என்பதில் தெளிவாக இருந்தார். ஆனால் நாட் அவுட் என்று 3வது நடுவர் தீர்ப்பளித்தார்.

கடுப்பானார் காலிஸ், "நான் என்ன ஏமாற்றுக்காரனா?" என்று கடும் கோபமாக நடுவர் சுதிரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எப்போதும் மூக்கை நுழைக்கும் கம்பீர் இந்த முறை பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

நடுவரிடம் காலிஸ் கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பானது. ஆனால் அதே ஓவரில் பின்ச் விக்கெட்டை பவுல்டு மூலம் வீழ்த்திவிட்டு நடுவர் சுதீரை ஒரு பார்வை பார்த்தாரே காலிஸ், அதில் அவரது அனைத்துக் கோபங்களும் வெளிப்படையாக தெரிந்தது.கடைசி பந்தை வீசி முடித்த பிறகும் நடுவரிடம் பேசியபடியேதான் இருந்தார் காலிஸ்.

இதில் நடுவரின் தவறென்ன இருக்கிறது? சந்தேகமிருந்தால் 3வது நடுவரை அழைக்கவேண்டியதுதான்! ஆனால் 3வது நடுவர் போதிய சாட்சியங்கள் இல்லாததால் நாட் அவுட் என்றார். ஆனால் தன் ஷூவில் பட்டது பவுலருக்குத்தானே தெரியும்? நாட் அவுட் என்றவுடன் கோபம் வந்தது காலிசுக்கு 'நான் என்ன ஏமாற்றுக்காரனா? என்று கடுப்படித்தார்.

(மோதலில் கம்பீர் கோக்லி)

ஐபிஎல். கிரிக்கெட்டில் ஏகப்பட்ட பணம் புரள்கிறது. வீரர்கள் ஏகப்பட்ட தொகைகளுக்கு ஏலம் எடுக்கப்படுகின்றனர். இது தவிர ஒவ்வொரு போட்டிகளுக்கும் கடுமையாக செலவழிக்கப்படுகிறது.

இவையனைத்தும் வீரர்களின் மனோநிலையில் பிரதிபலிக்கிறது. உலகின் சிறந்த ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட் உள்ளவர்களையும் இந்த ஐபிஎல் மிக மோசமான மனிதராக, வீரராக மாற்றிவிடுவதுதான் நடந்தேறி வருகிறது.

இந்த முறை காலிஸ், உலகிலேயே மிகவும் சாந்தமான வீரர் என்று இவரை கூறலாம். பாருங்கள் அவரே, ஒரு ரன் அவுட் மறுக்கப்பட்டதை ஏதோ தன்னை ஏமாற்றுக்காரன் என்று அது பறைசாற்றுவதகா நினைத்து நடுவரை கடுப்படிக்கிறார்.
(கோவத்தில் பட்டேல்)

கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் ஆட்டம் என்பதை தகர்க்கும் மிகப்பெரிய ஒரு சீரழிவை ஏற்படுத்துவதைத் தவிர ஐபிஎல் கிரிக்கெட் வேறு என்னதான் செய்து விட முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். ஆனால் நாட்டுக்காக ஆடும்போது இந்த உத்வேகத்தில் பாதியைக் கூட காணும்.! இங்கிலாந்திலும் ஆஸ்ட்ரேலியாவிலும் மீண்டும் இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராகவும் கடும் உதைகளை இந்தியா சந்தித்தபோது ஒரு வீரர் முகத்திலாவது ஒரு வெறுப்புணர்வோ, அல்லது ஏமாற்றவுணர்வோ, குற்றவுணர்வோ ஏற்படவில்லையே ஏன்?

நடுவர் தவறாக அவுட் கொடுத்ததற்கு சச்சினே ஒரு முறை நடப்பு ஐபிஎல் தொடரில் மூஞ்சியை காண்பித்துச் சென்றார். சச்சின் போன்ற அமைதியின் உருவத்தையே பணம் குணத்தை மாற்றிவிடுவதை நாம் பார்க்கிறோம்.

இது குறித்து உங்கள் கருத்துகளை கூறுங்களேன்.

நன்றி;வெப்துனியா 

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சண்டை போட கூட பணம் விளையாடுவதாக கேள்விப்பட்டேன்...!

Unknown said...

இந்த காலத்துல்ல எல்லாத்துக்கும் காசுதான் தனபால் அண்ணே

தினகரன் said...

ஜெண்டில்மேன் ஆட்டம் என்பதெல்லாம் மலையேறி மாமாங்கம் ஆகி விட்டது . . பணம் . அது மட்டுமே பிரதானம் என்றாகி விட்டது தான் ஐபிஎல் கிரிக்கெட் . .

Unknown said...

சரியாய் சொன்னிங்க தினகரன் சார் நன்றி

ADMIN said...

பணம் குணத்தை மாற்றும் வல்லமை உடையது என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. வேறென்ன சொல்ல.. அனைவருமே மனிதர்கள்தான்.. யாரும் மகாத்மாக்கள் அல்ல என்பதை சொல்லாமல் சொல்கிறது இத்தகைய செயல்கள்...!!

மகாத்மாவே கடுமையாக நடந்துகொண்டிருக்கிறார் என கேள்விப்பட்டிருக்கிறேன்..

மனிதன் அனைத்து குணங்களையுமே எதாவது ஒரு தருணத்தில் வெளிப்படுத்தவே செய்கிறான்..அதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல..

Unknown said...

மனிதன் அனைத்து குணங்களையுமே எதாவது ஒரு தருணத்தில் வெளிப்படுத்தவே செய்கிறான்..அதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல.. ///////////

உண்மையான வரிகள் தங்கம் பழனி நன்றி