Wednesday, 6 November 2013

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா ?


ஐந்து முதலமைச்சர்களை தமிழ் சினிமா தந்த பிறகும் சினிமா என்பது வெறும் பொழுதுப்போக்கு என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களை என்ன செய்வது. நம்முடைய பிரச்சனை அரசியல் பார்வை இல்லாதது. அரசியல் என்றால் கட்சி அரசியல் மட்டுமே என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ‌ரிலையன்ஸ் போன்ற கடைகளில் காய்கறி வாங்காமல் கடைத்தெருவில் இருக்கும் கிழவியிடம் வாங்கினால் அதுவும் ஒரு அரசியல் செயல்பாடே.

தனியார் தொலைக்காட்சியில் டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கல்லூ‌ரி மாணவி குறித்து மாணவிகள் பேசினர். ஒவ்வொருவ‌ரின் பேச்சிலும் ஆவேசம் பொங்கியது. எங்களுக்கு விருப்பமில்லாதவர்கள் காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள், முடியாது என்றால் கேவலமாக பேசி டார்ச்சர் செய்கிறார்கள் என ஆவேசப்பட்டனர். உண்மை. அவர்களின் ஆவேசம் நியாயமானது. அப்படியே சினிமா பக்கம் வருவோம்.

இன்றைய முன்னணி நாயகர்கள் அனைவரும் நாயகியிடம் வம்பு செய்கிறவர்களாகதான் படத்தில் வருகிறார்கள். ஏண்டி நான் உன்னை லவ் பண்றேண்டி என்று வலுக்கட்டாயமாக ஹீரோயினை காதலிக்க வைப்பவர்கள்தான். ஆனால் இந்த வன்முறையை நாம் திரையில் ரசிக்கிறோம். அட, இதைத்தானே ரசிக்கிறார்கள் என்று படம் பார்க்கிற விடலைகளும், நான் உன்னை லவ் பண்றேண்டி என்று தெருவில் பார்க்கிற பெண்களையெல்லாம் டார்ச்சர் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் நாயகன் வேலை வெட்டி இல்லாதவன். பெண்கள் பின்னால் சுற்றுகிறவன். அதுவும் எல்லா பெண்கள் பின்னாலும். படிக்கிற மாணவியின் கையில் லவ் லட்டர் தந்து அவளின் டீச்சருக்கு தரச் சொல்கிறவன். திரையில், சும்மா பொழுதுபோக்குதானே என்று பல்லை காட்டி சி‌ரிக்கிறோம். அதுவே நிஜமாக நடந்தால்? அந்த கதாபாத்திரத்ததைதான் ஜனங்கள் திரையில் விரும்புகிறார்கள், அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவன்தான் தமிழக இளைஞர்களின் ரோல் மாடல்.

எனில் படம் பார்க்கிற பதின்ம வயசு பசங்களும் அவன் செய்த அதே செயலைத்தானே செய்வார்கள். அதுதானே நடக்கிறது. ஒருபுறம் தூண்டிவிட்டு மறுபுறம் புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. தொலைக்காட்சியில் ஆவேசப்பட்ட பெண்களில் ஒருவராவது திரையில் நாயகியை டீஸ் செய்யும் நாயக கதாபாத்திரத்தை விமர்சித்தது உண்டா? காமெடி என்ற பெய‌ரில் திரையில் கொட்டும் குப்பைகளுக்கு பல்லை காட்டாமல் கொஞ்சம் அரசியல்பூர்வமாக நாம் சிந்திக்க பழக வேண்டும்.

ஐந்து முதலமைச்சர்களை சினிமாவிலிருந்து தேர்வு செய்த பிறகும் சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று எவனாவது இனியும் சொன்னால் அவனை மிதிக்கதான் வேண்டும்.

6 comments:

விமல் ராஜ் said...

சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.. படம் ஓப்பீடு அருமை.. மேலும் சில படங்களை உதாரணப்படுத்தி சொல்லி இருக்கலாம்..

MANO நாஞ்சில் மனோ said...

சினிமா அம்புட்டு கவர்ச்சியை கொடுத்துருக்கு தமிழ்நாட்டுக்கு....!

Manimaran said...

அதானே...! நச்சுனு சொல்லியிருக்கீங்க.

Bagawanjee KA said...

நீங்கள் நூற்றுக்கு நூறு உண்மை !சினிமா எப்படி வாலிபர்களை சீரழித்துக் கொண்டு இருக்கிறது என்று நடந்த சம்பவங்களை அடிப்படையாய் கொண்டு கடந்த மாதம் நான் போட்ட பதிவு இதோ >>>
http://jokkaali.blogspot.com/2013/10/blog-post_2861.html

PARITHI MUTHURASAN said...

ஐந்து முதலமைச்சர்களை சினிமாவிலிருந்து தேர்வு செய்த பிறகும் சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று எவனாவது இனியும் சொன்னால் அவனை மிதிக்கதான் வேண்டும்...........மதயானையை விட்டு மிதிக்கவேண்டும் ஹா...ஹா..

Anonymous said...

வணக்கம்
சில படங்களை ஒப்பிட்டு கூறிய விதம் அருமை சரியான சாட்டையடி....பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-