Sunday 14 July 2013

'சிங்கம் 2' மூன்று நாளில் 50 கோடி வசூல் சாத்தியமா?


சிங்கம் 2 சக்சஸ் மீட்டிங்கில் பேசிய தயாரிப்பாளர் மூன்று தினங்களில் 50 கோடியை படம் வசூலித்ததாக தெரிவித்தார். தமிழ் சினிமாவுக்கு இதுவொரு நற்செய்தி. அதிரடியாக வசூல் செய்யும் படங்களால்தான் சினிமாதுறை வாழ்ந்து கொண்டிருக்கிறது.

எந்தவொரு படமாக இருந்தாலும் அது வெளியானவுடன் நேர்மறையாகவே அப்படம் சம்பந்தப்பட்டவர்களின் பேச்சு இருக்கும். தோல்விப் படமான கந்தசாமி ஒரு வாரத்தில் 45 கோடிகள் வசூலித்ததாக தயாரிப்பாளர் தரப்பு சொன்னதை இந்த நேரத்தில் நினைவு கொள்வது பொருத்தமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம், ஒரு படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கான எந்த உள்கட்டமைப்பும் இங்கு இல்லை.

எண்பதுகளில் ஒரு படம் ஆரம்பிக்கும் போதே விநியோகஸ்தர்கள் அப்பட தயாரிப்பாளர்களுக்கு பணம் தருவதுண்டு. ஒவ்வொரு ஷெட்யூல்ட் முடியும் போதும் பணம் வந்து கொண்டிருக்கும். ஒரு படத்தின் மொத்த சுமையும் தயாரிப்பாளரை அழுத்தாமல் அது காத்தது. உற்பத்தியில் பங்கு கொண்டவர் என்ற வகையில் விநியோகஸ்தர்களுக்கு அந்தப் படம் தரப்படும். லாப, நஷ்டத்தை பகிர்ந்து கொள்வது எளிதாக இருந்தது.

இன்று விநியோகஸ்தர்கள் படம் தயாரிப்பில் இருக்கும் போது பணம் தருவதில்லை. படம் முடிந்த பிறகு படத்தைப் பார்த்து ஒரு தொகையை நிர்ணயிக்கிறார்கள். அது பெரும்பாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ரஜினி, விஜய் போன்ற சில நடிகர்களின் படங்கள் மட்டுமே மினிமம் கியாரண்டி என்ற முறையில் வாங்கப்படுகின்றன. மற்ற படங்களின் கதி இன்றளவும் சொல்லும்படி இல்லை. நேரடியாக படத்தை திரையரங்குகளுக்கு கொடுப்பதும் சிக்கலானது. அரங்கு நிறைந்தாலும் கூட்டம் வரவில்லை என தயாரிப்பாளர் ஏமாற்றப்பட வாய்ப்பு உண்டு. விநியோகஸ்தர்களில் பலரும் இதேபோன்றே நடந்து கொள்கின்றனர். உற்பத்தியில் பங்கு பெறாத ஒருசாரர் உற்பத்தி பொருள் மீது ஆதிக்கம் செலுத்துவது தமிழ் சினிமாவில் மட்டும்தான். இந்த சீரழிவு காரணமாக ஏவிஎம் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பிலிருந்து முழுமையாக விலகிவிட்டன.

ஒரு படத்தின் உண்மையான வசூலை தெரிந்து கொள்ள முடியாமலிருப்பதற்கு இதுபோன்று பல காரணங்கள் உள்ளன. இப்படியொரு சூழலில் தயாரிப்பாளர் சொல்லும் நம்பர்களை நாம் நம்ப வேண்டியதை தவிர வேறு வழியில்லை. துரதிர்ஷ்டவசமாக அவை பல நேரங்களில் உண்மையாக இருப்பதில்லை.

சிங்கம் 2 மூன்று நாளில் 50 கோடியை வசூலித்திருக்குமா என்ற சந்தேகம் பரவலாக இருக்கிறது. படத்தின் முதல் நாள் வசூல் - தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மூன்று மாநிலங்களும் சேர்த்து 8.15 கோடிகள் என செய்தி வெளியானது. சனி, ஞாயிறுகளில் கணிசமான அளவு வசூல் அதிகரித்தாலும் முப்பது கோடிகளை தாண்ட வழியில்லை. படத்தின் வெளிநாட்டு வசூலை சேர்த்தாலும் ஐம்பது கோடி என்பது எட்ட முடியாத வசூல். யுஎஸ், யுகே இரண்டும் சேர்த்து 2.1 கோடி மட்டுமே 3 நாட்களில் படம் வசூலித்திருக்கிறது.

இந்த புள்ளி விவரங்களை வைத்து 3 நாளில் 50 கோடி என்பது கற்பனையான பேச்சு என்கிறார்கள். சமீபத்தில் வெளியான இந்திப் படம் ஹே ஜவானி ஹைய் திவானி; மூவாயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியானது. இந்தியாவில் சிங்கம் 2வை விட இரண்டு மடங்கு அதிக திரையரங்குகள். முதல் மூன்று தினங்களில் 95 முதல் 100 சதவீத கலெக்ஷன். அப்படத்தின் முதல்நாள் வசூல் 19.45 கோடிகள். மூன்று தினங்களில் 62.11 கோடிகள். சிங்கத்தின் முதல் நாள் வசூல் 8.15 கோடிகள். மூன்று தினங்களில் 50 கோடிகள். சந்தேகம் கிளம்ப இந்த ஒப்பீடும் ஒரு காரணம்.

சிங்கம் 2வைப் போன்ற ஒரு வெற்றிப் படம் ஓபனிங் மூன்று தினங்களில் செய்யும் வசூலைப் போல் மூன்று மடங்கு வசூலை பெறும் என்பது நிபுணர்களின் கருத்து. அதாவது மூன்று தினங்களில் பத்து கோடியை வசூலித்தால் அப்படம் மொத்தமாக முப்பது கோடி அளவுக்கு வசூல் செய்யும். இது மக்களின் பேராதரவை பெற்ற படங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஹே ஜவானி ஹைய் திவானி இதுவரை 190 கோடி அளவுக்கு வசூலித்துள்ளது. அதாவது ஒபனிங்கைப் போல் மூன்று மடங்கு. சிங்கம் 2 வின் ஓபனிங் வசூல் 50 கோடி என்றால் மொத்தமாக 150 கோடிகளை வசூலிக்க வேண்டும். மூன்று தினங்களில் முப்பது கோடிக்கு மேல் வசூலித்த துப்பாக்கி, நூறு கோடியை எட்டியது. சென்னையில் துப்பாக்கியின் முதல் ஆறு நாள் வசூல் சுமார் 4.8 கோடிகள். மொத்தமாக 14 கோடி அளவுக்கு சென்னையில் வசூலித்தது. அதாவது (சுமாராக) மும்மடங்கு. சிங்கம் 2 வின் முதல் மூன்று நாள் வசூல் 2.7 கோடி. பத்து கோடியை அனாயாசமாக தாண்டும். எனில் தயாரிப்பாளரின் கணக்குப்படி மொத்தமாக 150 கோடியை படம் தொட வேண்டும். அது சாத்தியமா?

ஒரு படம் 50 கோடியை மூன்று தினங்களில் வசூலிப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழ் சினிமாவின் பொருளாதார தூண்களை வலுப்படுத்தக் கூடியது. தயாரிப்பாளர்கள் சொல்லும் வசூல் கணக்கு எப்படி இருந்தால் என்ன, யாரை பாதிக்கப் போகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. வசூலை அதிகப்படுத்தி சொல்லும் போது சம்பந்தப்பட்ட ஹீரோவின் சந்தை மதிப்பும் போலியாக உயர்த்தப்படுகிறது. பத்து கோடி வாங்குகிறவர் அடுத்தப் படத்தில் பதினைந்தாக சம்பளத்தை உயர்த்திவிடுகிறார்.

சிங்கம் 2 வின் ஓபனிங் வசூல் எதுவாக இருந்தாலும் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தரப்போகும் வெற்றிப் படம். அதனை ஏற்கனவே படம் நிரூபித்துவிட்டது.

நன்றி;வெப் துனியா

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல் பொய் என்றால் அ.சிங்கம்...!

Unknown said...

தனபாலன் அண்ணே டைமிங் சூப்பர் ஹாஹா