Tuesday 25 June 2013

மிஷ்கின் என்னும் தனித்த ஓநாய்


ஓநாய்கள் கூட்டமாக வாழக் கூடியவை. ஆனால் சில தனித்துவமான ஓநாய்கள் தனியாகவே வாழும். கூட்டத்தின் பொதுத்தன்மைக்கு அவைகளால் ஒத்து வாழ முடியாது. அப்படியொரு தனித்த ஓநாயாகதான் மிஷ்கினையும் பார்க்க முடிகிறது.

சித்திரம் பேசுதடி படத்தில் அதனை உணர முடிந்தது. தமிழில் தங்களுக்கென திரைமொழிகளை உருவாக்கி‌க் கொண்டவர்கள் சொற்பம். பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மணிரத்னம் என சிலரை மட்டுமே உதாரணமாக சொல்ல முடியும். இளைய தலைமுறையில் வெற்றிமாறன், செல்வராகவன், மிஷ்கின் என்று மிகச் சிலர். அதில் மிஷ்கின் மீது தீராக்காதல் பலருக்கு உண்டு. அதற்கு காரணம் Film Noir என்ற வகைமை.

அதற்கு முன்னால் திரைமொழியை பார்ப்போம்.

எல்லா கலைகளும் அரூபமான ஒன்றையே கைப்பற்ற முயல்கின்றன. அதற்கு அவை பயன்படுத்தும் கருவிகள்தான் இசையும், நடிப்பும், ஒளிப்பதிவும், கதையும், யதார்த்தமும் எல்லாமும். இங்கு முக்கியம் அந்த கலை கைப்பற்ற முனையும் அந்த அரூபமான ஒன்றுதான். அதனை உருவாக்குபவை என்ற வகையில் மட்டுமே நடிப்பு, கதை, நடிகர், யதார்த்தம் எல்லாமும் முக்கியம் பெறுகிறது.

ஆக, எதை சொல்ல வருகிறோம் என்பதுதான் முக்கியம். எப்படி சொல்கிறோம் என்பது ஒவ்வொரு கலைஞனின் தனித்துவம் சார்ந்தது. இந்த தனித்துவம் ஒருசில‌ரிடம் மட்டுமே உள்ளது. மற்றவர்கள் தாம் பார்த்த சினிமாக்களைப் பார்த்து அதே பொதுத்தன்மையுடன் வேறொரு சினிமாவை உருவாக்குகிறார்கள். மிஷ்கின் போன்ற ஒரு சிலரே தங்களின் கற்பனையில் ரசிகத்தன்மையில் புதியதொரு திரை மொழியை படைக்கிறார்கள்.

சித்திரம் பேசுதடியில் வரும் கதாநாயக கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்வோம். அதன் உடல் மொழி நாடகத்தன்மை வாய்ந்தது. முதல்முதலாக கதாநாயகியின்பால் காதல் கொள்ளும் தருணத்தை மிஷ்கின் எடுத்திருக்கும் விதம் நாடகத்தன்மையின் ஒரு குறிப்பிடத்தக்க உயரம் எனலாம். சாதாரண திரைப்படத்தில் இப்படியொரு உணர்ச்சி கொந்தளிப்பை பார்க்க முடியாது. ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டது போலவே இருக்கும் அந்த கதாபாத்திரத்தின் அவஸ்தை.

படம் நெடுக அந்த நாடகத்தன்மையை மிஷ்கின் கவனப்படுத்தியிருப்பார். நாயகியை பார்க்காமலே அவளை டீஸ் செய்யும் நபரை அடிப்பது, தனது சகோத‌ரியிடம் நடந்து கொள்ளும்விதம் என எல்லா இடங்களிலும் கதாநாயக கதாபாத்திரம் தரையையே பார்த்துக் கொண்டிருக்கும். முக்கியமாக நாயகியின் அப்பா பாலியல் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் இடத்திலும் நாயகனின் பாடிலாங்வே‌ஜ் மேலே குறிப்பிட்ட விதத்திலேயே இருக்கும். ஒரு இயக்குனர் கதை சொல்லும் பாணியை தன்னிடத்தில் தக்க வைத்துக் கொள்ளும் திறமையின் வெளிப்பாடுதான் இது.

குரசோவாவின் படங்களில் நடிகர்களின் உடல்மொழி நாடகத்தன்மையை ஒத்திருக்கும். ரெட்பியர்ட் படத்தில் வரும் இளம் பெண் அளவுக்கதிகமாக தரையை அழுத்தத்துடன் துடைத்துக் கொண்டிருப்பாள். தரையை துடைக்கிறாள் என்பதைத் தாண்டி அவள் மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்பதை அந்த காட்சி சொல்லாமல் சொல்லும். மிஷ்கின் படங்களிலும் இதனை காணலாம்.

மிஷ்கின் குரசோவா மற்றும் டகாஷி கிட்டானோவின் தீவிர ரசிகர். அவர்கள் படங்களின் சாயல்களை மிஷ்கின் படங்களில் காணலாம். உண்மையில் ஒரு லெஜன்டைப் பார்த்து தங்களின் கலை வெளிப்பாட்டை தீர்மானிப்பவர்கள் குறைவு. ஒருவகையில் அப்படி இல்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கேயு‌ரிய கலை குறித்த கோட்பாடு உள்ளது. அந்த கோட்பாட்டில் இயங்கும், அதனை உச்சத்துக்கு கொண்டு சொல்லும் படைப்பாளியை காணுகையில், அட, இது நம்ம ஆள் என்ற அணுக்கம் தோன்றுகிறது. மிஷ்கினுக்கு குரசோவா, டகாஷி மீது ஏற்பட்டதும் இத்தகைய அணுக்கமே.

குற்றம், குற்றவாளிகள், குற்ற செயல்கள் மீதான ஈர்ப்பு மானுடத்திடம் இன்னும் குறையாமலே உள்ளது. மிஷ்கினின் படங்கள் இதனை அணுகி ஆராய்பவை. தவிர்க்க முடியாமல் இந்த ஒப்பீட்டை சொல்ல வேண்டியதாகிறது. ஹ‌ரியின் சாமி உள்ளிட்ட எந்த படங்களாகட்டும், கௌதமின் காக்க... காக்க., வேட்டையாடு விளையாடு படமாக்கட்டும். குற்றவாளிகள் குடும்பம் இல்லாதவர்களாக பாசம் என்பதை அறியாதவர்களாக பூமிக்கு மேலே அரையடி உயரத்தில் வாழ்பவர்களாகவே காட்டப்பட்டிருக்கிறார்கள்.

அன்பு, பாசம், இரக்கம், கருணை, அர்ப்பணிப்பு எல்லாம் ஹீரோவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மட்டுமே உ‌ரியது. வில்லன்கள் கோல்ட் பிளட் மர்டர்கள் மட்டுமே. இவனையெல்லாம் கோர்ட்டுக்கு கூட்டிப்போய் விசாரணை செய்து, பாதுகாப்பு என்ற பெய‌ரில் பல ஆயிரங்கள் செலவழிப்பதைவிட ஐம்பது ரூபாய் தோட்டாவால் ஒரே போடாகப் போட்டால் வேலை முடிந்தது என காக்க.. காக்க... ஹீரோ சொல்லும் போது அப்ளாஸ் பறக்கிறது. ஆனால், குற்றவாளியும் இந்த சமூகத்தின் ஓர் உறுப்பு என்பதை நாம் பார்க்க தவறிவிடுகிறோம். மேலும் இளவேனில் சொல்லும், இன்று குற்றவாளிகளுக்கு மறுக்கப்படும் நீதி நாளை நிரபராதிகளுக்கும் மறுக்கப்படும் என்ற உண்மையை நாம் மறந்துவிடுகிறோம்.

மிஷ்கின் படங்களில் குற்றவாளிகளின் உலகம் மிகச்சிறப்பாக - குறைந்தபட்சம் தமிழ் சினிமா அளவுக்காவது - நேர்மையாக படைக்கப்பட்டிருக்கிறது எனலாம். அஞ்சாதேயில் அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் எடுபிடியாக இருப்பது கால் ஊனமான ஒரு நபர். அவரை போலீஸார் என்கவுண்ட‌ரில் போட்டுத் தள்ளும் போது அவரது மகனின் துடிப்பை காட்சிப்படுத்தியிருப்பார் மிஷ்கின். 

சாதாரண படங்களில் அந்த நபர் கொடூரமாக கொல்லப்படுவார். வில்லன் செத்தான் என்ற நிம்மதி ரசிகர்களுக்கு கிடைக்கும். ஆனால் அந்த மனிதனும் சமூகத்தின் ஒரு உறுப்பு, அவனுக்கும் களங்கம் என்ன என்று தெ‌ரியாத மகன் ஒருவன் இருக்கிறான், அவனை நம்பியும் குடும்பம் ஒன்று இருக்கிறது என காண்பிக்கையில் நல்லவன் - கெட்டவன், ஹீரோ - வில்லன் என்ற எதிர்மறைகளைத் தாண்டி சமூக யதார்த்தத்தை இன்னொரு கோணத்தில் பார்க்க நாம் நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.

மிஷ்கினால் டூயட் பாடல்களை எடுக்க முடியாது என்பதை முதல் படத்திலேயே நுட்பமான ரசிகன் தெ‌ரிந்து கொள்வான். ஆனால் அவ‌ரின் முதல் படத்தை வெற்றிப்படமாக்கியது வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்... கானாப்பாடல்தான். கமர்ஷியல் சினிமாவில் இயங்கும் ஒருவருக்கு இது மிகச்சிரமமான கடிவாளம். அதனால்தான் நிர்ப்பந்தத்துக்காக கானாப் பாடல்களை டாஸ்மாக் பின்னணியில் தொடர்ந்து எடுத்தார் மிஷ்கின். கனவுப்பாடல்கள் அவரது படத்தில் வேண்டா வெறுப்பாகவே வந்து போகும்.

எல்லா காம்ப்ரமைஸுகளுடன் எடுத்த முகமூடி தோல்வி அடைந்தது ஒருவகையில் நல்லதுதான். எல்லா காம்ப்ரமைஸுகளுக்குப் பிறகும் தோல்விதான் என்ற பிறகு, காம்பரமைஸே செய்யாமல் படம் எடுத்தால் என்ன என்றுதான் ஒரு படைப்பாளிக்கு தோன்றும். மிஷ்கினுக்கும் அப்படிதான் தோன்றியிருக்கிறது. (இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும். நமது மண்ணில் ஒரு சூப்பர்ஹீரோ தோன்றுவதற்கான சாத்தியத்தை எல்லா லா‌ஜிக்குடன் முகமூடியிலும் சிறப்பாகவே உருவாக்கியிருப்பார் மிஷ்கின். பிரச்சனை ஹீரோயினும், நியாயத்தை ஜெயிக்க வைக்கிற ஹீரோயிசமும். இரண்டுமே மிஷ்கினுக்கு அந்நியமானவை). ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நாயகி இல்லை, அதனால் காதல் இல்லை, எப்போதும் போல அசட்டு காமெடி இல்லை. எதை சொல்ல வருகிறோம். எதை சொல்ல விரும்புகிறோம் என்பதற்கு நடுவில் எதுவுமில்லை.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் ஸ்டில்களை மிஷ்கின் வெளியிட்டிருக்கிறார். கல்லறைத் தோட்டத்தில் புத்தகம் படிக்கும் ஸ்டில் ஒன்றே பல கதைகள் சொல்கிறது. அவர் வழக்கமான கேன்வாஸை தவிர்த்து புத்தம் புதிய கேன்வாஸில் தனது படத்தை வரைகிறார். அதன் வண்ணமும் சொல்முறையும் இயங்குதளமும் எப்போதும் நம்மை ஈர்ப்பதாகவே அமைகிறது.

சினிமா மேடைகளில் உணர்ச்சிவசப்படுகிற, இரவிலும் கூலிங் கிளாஸ் அணிகிற, தேவையில்லாமல் கருத்து சொல்கிற சமூக பிராணியாகவே மிஷ்கினை அறிந்து வைத்திருக்கின்றன மீடியாக்கள். அவற்றை தாண்டிய தனித்துவமிக்க திரைமொழியும், திறமையும் கொண்ட தனி‌த்த ஓநாய் அவர். கூட்டமாக தி‌ரியும் ஓநாய்களின் செயல்களையும், வாழ்க்கை முறையையும் கொண்டு தனித்த ஓநாய்களை ஒருபோதும் கணிக்க முடியாது. சொல்லாலும், செயலாலும், கற்பனை திறத்தாலும் தனித்த ஓநாய்கள் தனித்துவமானவை, ஒப்பிட முடியாதவை.

(ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் ஸ்டில்களைப் பார்த்தபோது தயக்கத்தை மீறி விழுந்த வார்த்தைகளே இவை. மிஷ்கின் படம் குறித்த முழுமையான பார்வையல்ல இவை. ஆனால் இவை இல்லாமல் எந்தப் பார்வையும் முழுமையடையாது).

நன்றி;வெப் துனியா

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதில் மனிதம் இல்லை...?

ராஜி said...

மிஷ்கின் படங்கள் எனக்கும் பிடிக்கும். அஞ்சாதே என்னை கவர்ந்த படம்

bandhu said...

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே மற்றும் யுத்தம் செய் எல்லாமே என்னை பிரமிக்க வைத்தவை. அவர் படங்களின் காஸ்டிங் மிக அருமை. எல்லோருக்கும் தெரிந்த நடிகரை தெரியாத கோணத்தில் அதுவரை அந்த நடிகர் நடிக்காத பாத்திரத்தை அருமையாக நடிக்க வைத்து ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பார். பிரசன்னா, பாண்டியராஜன், சேரன், ஒய் ஜி மகேந்திரன் என எல்லோரும் இவர் படங்களில் மிக வித்தியாச வேடங்களில் பிரமாதப்படுத்தி இருந்தார்கள்!

Unknown said...

ஆமாம் மிக சரியாக சொன்னிங்க நண்பரே

ராஜ் said...

மிஷ்கினை பத்தி ரொம்ப ரொம்ப நல்லா எழுதி இருக்காங்க. Intresting Post.