Wednesday, 2 January 2013

என் தொழிலை செய்யவிடாமல் தடுப்பது சட்டப்படி குற்றம்! : கமல் எச்சரிக்கை


தமிழகத்தில் திரையரங்குகளை நம்பி சுமார் 30 இலட்சம் குடும்பங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும், 3,000 திரையரங்குகள் இருந்த இடத்தில் இப்போது வெறும் 1,500 திரையரங்குகள் தான் உள்ளன.
இந்த நிலை நீடித்தால் விரைவில் தமிழகத்தில் திரையரங்குகளே இல்லாமல் போகும்!, என்பது திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் வாதம்.

விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச். மூலம் வெளியிடும் தனது முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் டி.டி.ஹெச். மூலம் வெளியிட்டால் இனிமேல் தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் கமல்ஹாசன் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம். இதை மீறி விஸ்வரூபத்தை ஏதாவது திரையரங்கு வெளியிட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது தொழில் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இப்போது அவர்கள் உறுதியாக கூறிவருகின்றனர்.

ஆனால் கமல்ஹாசனும் விடுவதாய் இல்லை. தனது தரப்பு நியாயத்தை மிகத் தெளிவாகவே பல தடவை எடுத்துரைக்கிறார். இதோ தற்போதும் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல், டி.டி.ஹெச்களில் ஒளிபரப்புவது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

இதன் போது கமல் கூறியவை :
இந்த முயற்சியைப் பற்றிச் சொல்லும்பொழுது இது நிகழும் என்பது பல பேருக்குத் தெரியும். என்னவோ நான் தான் கண்டுபிடித்தவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது டி.டிஹெச்சையே நான் தான் கண்டு பிடித்தேன் என்று நினைக்கிறார்கள்.

அப்படி கிடையாது. இது இருக்கு. செல்போன் வந்தது, அதில் பேசலாம் என்று தெரியும், அதை கையில் எடுத்து பேசினால் சுட்டுடும் என்று பல பேர் பயந்தார்கள், நான் தைரியமாக எடுத்துப் பேசினேன். எனக்கு எதிர்முனையில் ஒருவர் பேசினார் அதனால் நான் பேசினேன் அவ்வளவு தான்.

இது இதற்கு முன்பாக ஒரு வடநாட்டு நண்பர் ஒருவர் முயற்சி செய்து தோற்றுப்போன ஒன்று. அவர் என்ன பண்ணிட்டார்னா.. கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்பட்டு விட்டார். அதாவது இதில் என்ன பிழை என்றால்  தியேட்டர்காரர்களிடமும் எம்ஜி வாங்கிவிட்டு டி.டி.ஹெச்சிலும் கொடுத்து விட்டார். அதனால் தியேட்டர்காரர்கள் அவருக்கு எதிராக திரும்பி விட்டார்கள். அது நியாயமான ஒன்றுதான். அவர்களுக்கு எதிரான ஒரு விஷயம் என்றால் அவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள்.

ஆனால் நான் அப்படி இல்லை என்னை வாழவைத்த இந்தச் சூழலை கெடுத்துக்கொண்டு நான் எந்த வேலையையும் செய்ய விரும்புவனில்லை. ஒரு விவசாயி வயலில் வேலை செய்வான். ஆனால் அதை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன்.

சாட்டிலைட் சேனல்கள் வந்தபொழுது அதற்கு நான் ஆதரவாக குரல்கொடுத்தேன், இது விஞ்ஞானம் வரத்தான் செய்யும் என்று சொன்னேன் என்பதற்காக என்னை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். ஆனால் நான் தைரியமாக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னேன். அந்த தைரியம் தான் இன்று உங்கள் முன்னால் என்னை நிற்க வைத்திருக்கிறது.

அதேபோலத்தான் சொல்கிறேன் இது பிழையல்ல, குற்றமல்ல அதனால் செய்கிறேன்.

தியேட்டர்காரர்களுக்கு அது அந்த தியேட்டர் ஒரு சொத்து, ஆனால் இந்தப்படம் எனக்கு செலவு. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் என்னால் செலவு செய்ததை எடுக்க முடியாது. ஸோ யார் அந்த பொருளுக்கு சொந்தக்காரனோ அவன்தான் அந்தப்பொருளை பயன்படுத்த வேண்டும்.

இது கசப்பு மருந்து தான். கசப்பு என்று தெரிந்து தான் சாப்பிடுகிறோம். ஆனால் இந்த கசப்பு மருந்து உடம்புக்கு நல்லது. வேம்பு கசக்கும் ஆனால் பாம்பு கடிக்கு போட்டால் சரியாகிவிடும். உங்களை கடித்திருக்கும் பாம்பு திருட்டு வி.சி.டி, அதற்கு கசப்பு மருந்தாக வந்திருப்பது தான் இந்த சிஸ்டம். இந்தக் கசப்பு மருந்து எந்தளவுக்கு குணமாக்கும் என்பது போக போகத்தான் தெரியும்.

தியேட்டர்களை மூடி விட வேண்டியது தான் என்று சொல்கிறார்கள். ஆமாம், பராமரிப்பில்லாத தியேட்டர்களை மூடித்தான் ஆக வேண்டும். தியேட்டர்களுக்கு வருகிறவர்களுக்கு படம் பார்க்கக்கூடிய நல்ல சூழல் இல்லாத தியேட்டர்களை கண்டிப்பாக மூடிவிடுவார்கள். ஆனால் அதற்கு இதை ஒரு காரணமாக சொல்லாதீர்கள்.

தொழில் செய்யும் உரிமையை இந்த அரசாங்கம் எனக்கு கொடுத்திருக்கிறது. இதைத் தடுப்பது சட்டப்படி குற்றமாகும்.

இந்தப்படத்தை சன் டி.டி.ஹெச், டிஸ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகியோருடன் இன்னொரு புதிய டி.டி.ஹெச் ஆபரேட்டரும் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் டாடா ஸ்கை நிறுவனத்தினர் தான். அவர்கள் முதலில் வருவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

அதற்கு காரணம் DVR என்று சொல்லக்கூடிய டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரில் இந்தப்படத்தை ரெக்கார்டிங் செய்யும் தொழில்நுட்பத்தை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் உங்களுடன் நான் வியாபாரத்துக்கு வர மாட்டேன் என்று சொன்னேன்.

அதேபோல இதை கமர்ஷியலாக இல்லாமல் ஒரு தனி சேனலாக காட்ட வேண்டும் என்று சொன்னேன். மேலே உள்ள அந்த இரண்டு கண்டிஷன்களுக்கும் டாடாஸ்கை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.

அதனால் வராமல் இருந்தார்கள் ஆனால் மற்றவர்கள் வந்து விட்டார்கள். இப்போது சுமார் 1 மணி நேரத்துக்கு முன்னதாக அவர்களும் இந்த கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்டு நாங்களும் வருகிறோம் என்று வந்துவிட்டார்கள். ஆக இப்போது இந்தியாவில் இருக்கும் ஆறு டி.டி.ஹெச்சிலும் இந்தப்படம் ரிலீஸாகிறது.

இதையெல்லாம் தியேட்டர்களை பாதுகாப்பதற்காகத்தான் நான் செய்தேன். இதைப்புரிந்து கொண்டு என் பின்னால் வருபவர்களுக்கு நான் வரவேற்பு செய்கிறேன். வராதவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை.

‘இழப்பதற்கு ஒன்றுமில்லை, நடப்பதற்கு ஒரு தங்கப்பாதை’ என்று சொன்னார்கள். இதை கம்யூனிஸ்டு தோழர்கள் சொல்லியிருந்தார்கள். அது இப்போது வியாபாரத்துக்கும் பயன்படுகிறது.

இந்த தங்கப்பாதைக்கு வாருங்கள் என்று நான் கூப்பிடுகிறேன், ஆனால் நீங்கள் செருப்பு தேய்ந்து விடும் என்று கவலைப்படுகிறீங்கள். இது தான் என்னுடைய வேண்டுகோள். வந்தவர்கள் வரைக்கும் எனக்கு சந்தோஷம்; வராதவர்கள் இருந்தாலும் ரொம்ப சந்தோஷம் இவ்வாறு நடிகர் கமல் கூறினார்.

No comments: